Published:Updated:

நாகையில் நிவாரணப் பணிகளில் ரஜினி மக்கள் மன்றம் #Gaja

Rajini Makkal Mandram

நாகையில் நிவாரணப் பணிகளில் ரஜினி மக்கள் மன்றம் #Gaja
நாகையில் நிவாரணப் பணிகளில் ரஜினி மக்கள் மன்றம் #Gaja

கஜா புயலால் நிர்கதியாகிவிட்ட மக்களின் துயர்த் துடைக்கும் பணிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.  பசியால் துடிக்கும் பல கிராம மக்களுக்கு மூன்று நாட்களாய் தொடர்ந்து உணவும், குடிநீரும் தந்து வருகிறார்கள்.  

நாகப்பட்டினத்திலிருந்து, கோடியக்கரை வரையுள்ள கரையோர கிராமங்களில் அவர்களது முக்கிய வாழ்வாதாரமான மா, தென்னை, புளி, முந்திரி, சவுக்கு போன்ற மரங்கள் முற்றிலும் அழிந்துவிட்டது.  மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டது.  கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடிநீருக்கும் வழியில்லை.  இந்நிலையில், நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் இராஜேஷ்வரன் தலைமையில் 10 பேர் கொண்ட உதவும் குழு அமைக்கப்பட்டு அவர்களது எண்கள் வாட்ஸ்-அப் மூலம் பரப்பப்பட்டன.  இவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களுக்கு உடனுக்குடன் உணவும், குடிநீரும் கொண்டுபோய் வழங்கப்படுகிறது.  

மலேசியாவிலிருந்து அமுதா என்ற பெண்மணி இக்குழுவைத் தொடர்பு கொண்டு, “எங்கள் உறவினர் பெயிண்டர் ராஜேந்திரன், வேதாரண்யம் வா.ஊ.சி. நகர், ஏரிக்கரையில் வசிக்கிறார்.  அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.  அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிந்து தகவல் சொல்ல முடியுமா?” என்று கேட்டிருக்கிறார்.  உடனே ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் சாஹா மாலிக் தலைமையிலான குழு மிகுந்த சிரமங்களுக்கிடையே இருசக்கர வாகனத்தில் பயணித்து ராஜேந்திரனைச் சந்தித்து, அவரது நலம் குறித்த செய்தியை பதிவு செய்து மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர்.  

அதுபோல் ஈரோட்டிலிருந்து இளவரசி என்ற பெண், “வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிக்குளம் பகுதியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 300 பேர் இரு நாட்களாய் உணவின்றி தவிக்கிறார்கள்.  அவர்களுக்கு உதவிட முடியுமா?” என்று தகவல் அனுப்பினார்.  உடனே 17 -ம் தேதி இரவு 11.00 மணிக்கு அவர்கள் இருக்கும் இடத்தை தேடிச் சென்று உணவும். குடிநீரும் வழங்கினார்கள்.  சுருண்டு கிடந்த அனைவரும் எழுந்து, உணவு அருந்திய காட்சி உணர்ச்சிமயமாய் இருந்தது.  வேளாங்கண்ணியில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி தலைவி சகிலா பானு லாட்ஜில் சுமார் 20 சமையல் கலைஞர்கள் உணவு தயாரித்த வண்ணம் இருக்கிறார்கள்.  அங்கிருந்து தேவைப்படுவோருக்கு உணவை உடனுக்குடன் வழங்கி வருகிறார்கள்.  இப்பணி மக்களுக்கு தேவைப்படும் வரை தொடரும் என்கிறார் மாவட்டச் செயலாளர் இராஜேஷ்வரன்.