வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (19/11/2018)

கடைசி தொடர்பு:17:37 (19/11/2018)

`அமைச்சர்களிடம் நீதி கேட்டோம்; ஆபாசமாகத் திட்டுகிறார் வைத்திலிங்கம்!' - குமுறிய சொந்த ஊர் மக்கள்

ஒரத்தநாடு அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை பார்க்கவில்லை. உடனே பார்க்க வேண்டும் என வலியுறுத்தி நான்கு அமைச்சர்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்களை முன்னாள் அமைச்சரும் அதே ஊரை சேர்ந்தவருமான வைத்திலிங்கம், `யார் தூண்டிவிட்டு இதுபோல் செய்கிறீர்கள்' என ஆவேசமாகப் பேசி ஆபாச வார்த்தைகளில் கடுமையாகத் திட்டினார். இதை ஒரு அமைச்சர்கூட தடுக்கவில்லை. இதனால் போராடியவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அமைச்சர்களின் காரை மறித்த மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு திருமங்கலக்கோட்டை, தொண்டராம்பட்டு, கண்ணுக்குடி, ஆம்பலாப்பட்டு என பல கிராம மக்கள் தென்னை மரங்கள், கால்நடைகள் என வாழ்வாதாரங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள். இங்கு பாதிப்புகள் குறித்த கணக்குகள் எடுப்பதற்கும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை யாரும் வரவில்லை என மக்கள் கொந்தளிப்பில் இருந்தார்கள். இதையடுத்து இன்று பட்டுக்கோட்டை பகுதிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஏற்பாட்டில் சென்றுகொண்டிருந்தனர். ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில் பொதுமக்கள், நான்கு அமைச்சர்களையும் முற்றுகையிட்டனர். இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இந்தப் பகுதிகளைக் கடந்துதான் எல்லோரும் போய்க்கிட்டு இருக்கீங்க. இங்கு இறங்கி பார்க்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லை. முதலில் எங்க ஊர்களைப் பார்த்துவிட்டு, பின்னர் பட்டுக்கோட்டை பகுதிக்குச் செல்லுங்கள் என அமைச்சர்களுக்கு எதிராகக் கோஷம் போட்டுக் கத்தினர்.

அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்

வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் இது என்பதால் அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் மக்கள் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர் முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களைக் கெட்ட வார்த்தைகளில் திட்டினார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம். ``பாதிக்கப்பட்ட  நாங்க நிவாரணம் கேட்கலை. வந்து பார்வையிடுங்க எனக் கூறினோம். இதுவரை யாரும் வரவில்லை. அது எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்டோம். இதற்கு எங்களைப் பார்த்து யார் உங்களை கிளப்பிவிட்டார்கள் எனக் கூறி வைத்திலிங்கம் தகாத கெட்ட வார்த்தைகளில் பேசி எங்களை அசிங்கமாகத் திட்டினார். இதை ஒரு அமைச்சர்கூட தடுத்து நிறுத்தவில்லை. ஆறுதல் கூறாமல், எங்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை. பல ஊர்கள் பாதிக்கப்பட்டு இருக்க ஏன் அமைச்சர்கள் கூட்டமாக ஒன்றாக ஒரே இடத்துக்குச் செல்ல வேண்டும். தனித் தனியாகப் பார்த்தால் நிறைய பகுதிகளைப் பார்த்து மக்களிடம் குறைகளைக் கேட்கலாம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க