Published:Updated:

`இது ஒருதலைப்பட்சமானது' - எழுவர் விடுதலைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்! 

`இது ஒருதலைப்பட்சமானது' - எழுவர் விடுதலைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்! 
`இது ஒருதலைப்பட்சமானது' - எழுவர் விடுதலைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்! 

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து அதிமுகவினர் மூவரையும் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததின் பேரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுதலையாகியுள்ளனர். இவர்கள் விடுதலைக் குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், ``தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சிறைத் தண்டனைக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரைத் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்து இன்று ஆளுநரின் ஒப்புதலுடன் விடுதலை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய  மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக்  கட்சிகள் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் அதனைச் செவி மடுக்காத தமிழக ஆளுநரையும் அதற்கு உரிய அழுத்தத்தைத் தராத மாநில அரசையும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.

அதேபோல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விடுதலை செய்யப்படாமல் உள்ள ஆபுதாஹிர் உட்பட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதுகுறித்து சிறிதும் கவனத்தில் கொள்ளாத தமிழக அரசு தற்போது தனது சொந்த கட்சிக்காரர்களை மட்டும் விடுதலை செய்து ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் தொடர்பான விஷயத்தில் ஒரு தலைபட்சமாக நடந்துள்ளது என்பது தமிழக முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏழு தமிழர்களையும், கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளையும் ஆளுநர் மூலம் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொள்கிறேன்.