Published:Updated:

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற ஆர்பிஐ - 9 மணிநேர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற ஆர்பிஐ - 9 மணிநேர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற ஆர்பிஐ - 9 மணிநேர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

நீண்ட நாள்களாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடைபெற்றுவந்த மோதலுக்கு, நேற்று நடந்த கூட்டத்தில் சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது. 

அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்புப் பணத்தில் இருக்கும் பெரும்பகுதியை மத்திய அரசுக்குத் தர வேண்டும் என அரசு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கோரிக்கைக்கு ஆர்பிஐ-யைப் பணியவைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவைப் பயன்படுத்தி, வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. மத்திய அரசின் அழுத்தத்தினால், ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியின் போர்டு மீட்டிங்கின்போது தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. 

இதனால் நேற்று நடைபெற்ற ஆர்பிஐ போர்டு மீட்டிங் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. மும்பையில், சுமார் 9 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆர்பிஐ தரப்பிலிருந்து சில முக்கிய அதிகாரிகளும், மத்திய அரசின் தரப்பிலிருந்து 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். முடிவில், மத்திய அரசின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் உபரி நிதியான ரூபாய் ஒன்பது லட்சம் கோடியில் இருந்து, மூன்று லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடனை எளிதாக வழங்கவும் சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்கும் விதிமுறைகளைத் தளர்த்தவும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முன்னதாக வேளாண் கடன், வேலை வாய்ப்பு உருவாக்கம். சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் அளித்தல் போன்றவற்றில் ரிசர்வ் வங்கி அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ஆர்பிஐ பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், வரும் தேர்தலின்போது மத்திய அரசிடமிருந்து கடன் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.