Published:Updated:

கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை
கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை

கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை

பிரீமியம் ஸ்டோரி

ழுங்கான சாலை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாத ஒரு கடைக்கோடிப் பகுதியில் பிறந்த ஒருவர், இன்றைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர். வருமானவரித் துறையினர் சோதனை நடத்தும் அளவுக்கு மிகப்பெரிய கோடீஸ்வரர் செய்யாத்துரை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற ரெய்டுகளில் மிகப்பெரிய அளவில் பணமும் தங்கமும் சிக்கியது சேகர் ரெட்டி நிறுவனங்களில்தான். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது, செய்யாத்துரை குடும்பத்தின் எஸ்.பி.கே நிறுவனம்.

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரையின் எஸ்.பி.கே நிறுவனங்களில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற வருமானவரிச் சோதனை, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வினரை மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க-வினரையும் அதிரவைத்துள்ளது. சின்ன அளவில் பிசினஸ் செய்பவர்கள்கூட ஆர்ப்பாட்டமாக வலம்வரும் இந்தக் காலத்தில், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை சத்தமில்லாமல் எடுத்திருக்கிறது இந்த நிறுவனம். செய்யாத்துரையை எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாது. கேமராவின் கண்களில் படாமலே, அவர் குடும்பம் இருந்துவந்திருக்கிறது. 

கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள முடிமன்னார் கோட்டை என்ற ஊரைச்சேர்ந்தவர் செய்யாத்துரை. வானம் பார்த்த பூமியான அந்தப் பகுதியில், கருவேல மரங்கள் அதிகம். அந்த மரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டவர்தான் செய்யாத்துரை. பின்பு ஆட்டு வியாபாரியாக மாறிய அவர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகளை அனுப்பும் ஏஜென்டாக மாறினார்.

அதன்பிறகு, உள்ளூரில் சிறு சிறு வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்துச்செய்யும் ஒப்பந்ததாரராக உருமாறி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையின் பாலையம்பட்டி பகுதிக்கு வசிப்பிடத்தை மாற்றினார். அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் பெரிய ஒப்பந்ததாரர்களாக இருந்தவர்கள் ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜன். அவர்களிடம் சப் கான்ட்ராக்டராக சில வேலைகளை எடுத்துச் செய்து வந்தார் செய்யாத்துரை. கூடவே, கல் குவாரிகளைக் குத்தகைக்கு எடுக்கத் தொடங்கினார். 1991-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு, ஆட்சித் தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள், தமிழகம் முழுவதும் பலரை வளர்த்துவிட்டுத் தாங்களும் அசுர வளர்ச்சி அடைந்தனர். அந்த வட்டத்தில் செய்யாத்துரையும் இணைக்கப்பட்டார்.

அதன்பிறகு அவருக்கு விறுவிறு வளர்ச்சிதான். எந்தவொரு கட்டமைப்பு வசதியும் இல்லாமல், ஒப்பந்தங்களை வாங்கி மற்றவர்களை வைத்து வேலை பார்த்தார். கடந்த 20 வருடங்களில், கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலை விரிவுபடுத்தி, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் நிறுவனங்களுக்கு அதிபதியாக அவதாரமெடுத்தார்.

சில கான்ட்ராக்டர்கள் ஒரு கட்சியின் ஆட்சியில் பல டெண்டர்களை எடுப்பார்கள்; ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஐந்து ஆண்டுகள் ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், செய்யாத்துரை அப்படி இருக்கவில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தி.மு.க அதிகாரத்துக்கு வந்தவுடன், அவர்களுக்குத் தகுந்தாற்போல இவர் நடந்துகொண்டார். அங்கும் அதிகார மட்டங்களில் புகுந்து தனக்கு ஆதரவு வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். 2006-ல் தி.மு.க ஆட்சியின்போது, தென்மாவட்டங்களை சேர்ந்த மூன்று அமைச்சர் கள், எஸ்.பி.கே நிறுவனத்துக்கு உற்சாகமாக ஆதரவு தந்தார்கள். இவர்களைத் தாண்டி அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷ் இந்த நிறுவனத்தின் அறிவிக்கப்படாத பங்குதாரர் போலச் செயல்பட்டார். கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம் கிடைத்த நெருக்கம், இவர்களை மதுரையைத் தாண்டி மத்திய மாவட்டங்களிலும் கால்பதிக்க வைத்தது.

2011-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், எஸ்.பி.கே நிறுவனம் அதன் உச்சத்தைத் தொட்டது. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த அந்த நேரத்தில், மதுரையிலும் சென்னையிலும் அலுவலகங்கள் போட்டு எல்லாப் பகுதிகளிலும் வேலை எடுத்துச் செய்துள்ளனர்.

கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை

அ.தி.மு.க., தி.மு.க மற்றும் அரசு அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த நபராக செய்யாத்துரை இருந்துவந்துள்ளார். செய்யும் சேவைக்கு ஏற்ற வெகுமதியை உடனடியாகக் கொடுத்துவிடும் பழக்கம் உள்ளவர் என்பதால், செய்யாத்துரைக்கு எல்லாக் கதவுகளும் திறக்கும். சாதாரண நிறுவனங்கள் எதுவும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை எடுக்கமுடியாத அளவுக்கு, புதிய புதிய விதிகளைப் போட வைப்பதில் வெற்றியும் கண்டார் செய்யாத்துரை. நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், சப் கான்ட்ராக்டர்கள் எனப் பலரும் மதுரையில் இருக்கும் எஸ்.பி.கே ஹோட்டலில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அங்குதான் பல விஷயங்கள் பேசி முடிக்கப் படும். வந்தவர்கள் சந்தோஷமாகத் திரும்பிப் போவார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கறுப்புப் பணத்தை ஏஜென்ட்கள் மூலம் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றினாலும், அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாமல் தவித்துள்ளனர் இந்த நிறுவனத்தினர். அதனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அதில்தான், வருமானவரித் துறையினர் இப்போது கைவைத்துள்ளனர். இந்தப் பணத்தில் ஒரு பங்கைத் தங்கமாக மாற்றிவைத்துள்ளனர். முடிமன்னார் கோட்டையில் உள்ள பூர்வீக வீட்டில், சுவரில் தங்கக்கட்டிகளை மறைத்துவைத்துள்ளனர் என்ற தகவலால், அங்கு சென்ற வருமானவரித் துறையினர், சுவரை உடைத்துச் சோதனை யிட்டனர். அங்கு ஏகப்பட்ட நகைகள் எடுக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கிருந்து நிறைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

“செய்யாத்துரை ஒரு ரோடு கான்ட்ராக்டர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர், இவ்வளவு பெரிய கான்ட்ராக்டர்... இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை இப்போதுதான் தெரிஞ்சுக்கிட்டோம்” என்று ஆச்சர்யத்துடன் சொல்கிறார்கள் அருப்புக்கோட்டைவாசிகள். 

அருப்புக்கோட்டைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே ஆச்சர்யம்தான்!

- செ.சல்மான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு