Published:Updated:

தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள்!

தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு  பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள்!
தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபுவின் உருவ பொம்மையை நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் எரித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பாத்திமாபாபு. `வீராங்கணை அமைப்பு' என்ற ஒரு அமைப்பைத் துவக்கி அதன் மூலம் தூத்துக்குடியில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தை துவக்கியபோது மக்களுடன் போராட்டங்களில் கலந்துகொண்டார். இவர்களுடன் வியாபாரிகள் சங்கமும் கைகோத்து ஆலைக்கு எதிராக போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் துவக்கி அதன் ஒருங்கிணைப்பாளராக பாத்திமா பாபுவை தேர்வு செய்து போராட்டங்களைத் தொடர்ந்தனர். கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகும் நீதிமன்றத்தில் ஆலைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தும், அவ்வப்போது மீடியாக்களுக்கு பேட்டியும் அளித்து வந்தார் பாத்திமா பாபு. இந்த நிலையில், பாத்திமா பாபு, தன்னுடன் இணைந்து போராட்டங்களில் கலந்துகொண்ட தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகியான தெர்மல் ராஜா என்பவருடன் ஹோட்டல் அறையில் கட்டிலில் நெருக்கமாக இருப்பது போன்று ஒரு வீடியோ வாட்ஸ்அப்களில் கடந்த 2 நாள்களாக வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை பாத்திமாபாபுவின் வீட்டின் முன்பு மீனவர்கள் திரண்டு அவரின் உருவப் படத்தை எரிக்க முயன்றனர். இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் பாத்திமா பாபுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் விக்டர், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் இணைந்து போரட்டம் நடத்திய பாத்திமாபாபு, கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் மக்களுடன் கலந்துகொள்ளாமல் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் என்ற பெயரில் அங்கேயே அமர்ந்து இருந்தது ஏன்?. கலவரத்தின் போதும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போதும் ஏன் நழுவிக்கொண்டார்?.

இதன் மூலம் இவர் போலி போராளி என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரது வீராங்கணை அமைப்பும், மற்றுமொரு “அதர் மீடியா” என்ற என்.ஜி.ஓ., அமைப்புடன் இணைந்து கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் வெளிநாடுகளிலிருந்து இதுவரை ரூ.17 கோடி வரை பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

போராளி என்பவருக்கு முதலில் சுய ஒழுக்கம் தேவை. சுய ஒழுக்கம் இல்லாத, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி போன்ற  இவர் தூத்துக்குடியை விட்டே வெளியேற வேண்டும். தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், பாத்திமா பாபுவை பின்னால் இருந்து இயக்குபவர் யார் என்பது குறித்தும் ஆழமாக விசாரணை செய்ய வேண்டும். போலி போராளியான பாத்திமாபாபு தூத்துக்குடியை விட்டே வெளியேற வேண்டும்” என்றார்.

உருவ பொம்மையை எரித்ததுடன் பாத்திமாபாபுவுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். நீதிமன்றத்தின் முன்பு உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதேபோல, குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமங்களிலும் பாத்திமாபாபு, தெர்மல் ராஜா மற்றும் நித்தியானந்த ஜெயராமன் ஆகியோரது புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.