Published:Updated:

12 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை! பாழடைந்த உப்பரப்பாளையம் மகளிர் சுகாதார வளாகம்!

12 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை! பாழடைந்த உப்பரப்பாளையம் மகளிர் சுகாதார வளாகம்!
12 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை! பாழடைந்த உப்பரப்பாளையம் மகளிர் சுகாதார வளாகம்!

திருவள்ளூர் மாவட்டம்,  உப்பரபாளையத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் இதுநாள் வரை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கட்டடங்கள் பழுதடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது பேரிட்டிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உப்பரப்பாளையம், வடதில்லை, ஏரிக்கரை ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் மொத்தம் நானூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. உப்பரப்பாளையம் கிராமத்தில் 2006-ம் ஆண்டு அதாவது, பன்னிரண்டு வருடத்துக்கு முன்பு  ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டி முடித்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுநாள் வரை மக்களின் பயன்பாட்டுக்கு சுகாதார வளாகம் திறக்கப்படவில்லை. இருப்பினும் பராமரிப்புப் பணி எனும்பெயரில் அடிக்கடி கட்டடத்துக்கு வெளியே வெள்ளையடித்து அதற்கான தொகையை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். பலமுறை கிராமத்திலுள்ள இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அதற்கான உரிய பதில் அளிக்கப்படவில்லை.

எனவே, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டி அதற்கான தொகையை மட்டும் லட்சக்கணக்கில் பெற்றுக்கொண்டு பல ஆண்டுகள் ஆகியும், மக்களின் பயன்பாட்டுக்கு விடாமல், பராமரிக்காமல் இதுநாள் வரை மக்களை ஏமாற்றிவரும் அதிகாரிகள் மீது கலெக்டர் மகேஸ்வரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தில்லைகுமாரிடம் பேசினோம். ``இது குறித்து பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பி.டி.ஒ கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் பணிக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. திட்டங்களைச் செயல்படுத்தும் பி.டி.ஓ வெங்கடேசனை தொடர்புகொண்டு நீங்கள் கேளுங்கள்'' என்று சொன்னார். உடனே திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரி வெங்கடேசனை தொடர்பு கொண்டுகேட்டோம். அவர், ``நீங்கள் சொல்லும் செய்தி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் இந்த ஒன்றியத்துக்கு வந்து பத்து நாள்கள்தான் ஆகிறது. ஏற்கெனவே இங்கு திட்டப்பணிகளை கவனித்து வந்த அதிகாரி கிருஷ்ணன்தான் தற்போது பி.டி.ஒ.வாக இருக்கிறார். நீங்கள் அவரையே கேளுங்கள்" என்று நம்மிடம் சொன்னார். மீண்டும் பி.டி.ஓ கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டோம். `நீங்கள் நேரில் வந்து பேசுங்கள். அதைப் பேசி சரி செய்துகொள்ளலாம். இல்லையென்றால் ஒரு குட்டி நியூஸ் செய்துகொள்ளலாம்'' என்று சொன்னார். சுகாதாரக் கழிப்பிடம் திறக்கப்படாததற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

அந்த சுகாதார கழிப்பிடத்துக்குப் பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் பலமுறை போலியாக பில் போட்டு அதிகாரிகள் ஊழல் செய்தது குறித்து கேள்வி கேட்டதற்கு, ``நான் அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீ எங்கேயாவது போய் சொல். என்னை ஒன்றும் செய்துவிட முடியாது'' என்று நம்மை ஒருமையில் பேசினார். இது குறித்து மாவட்ட திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமாரிடம் நடந்தவற்றைச் சொன்னோம். அவர் திங்கட்கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பதாக நம்மிடம் உறுதியளித்தார். 12 ஆண்டுகளாகத் திறக்கப்படாத ஒரு சுகாதார கழிப்பிடத்துக்குப் பலமுறை பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் போலியாக பில் போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூண்டி ஒன்றியத்தில் இதுபோன்ற பல இடங்களில் அரசு திட்டப் பணிகளை செய்யாமலேயே பணிகள் முடிவடைந்ததைப்போல அதிகாரிகள் பல போலி ஆவணங்களைத் தயார் செய்து பணம் கையாடல் செய்துள்ளனர்" என்றார்.

``கலெக்டர் மகேஸ்வரி இது தொடர்பாக விசாரணை நடத்தி பி.டி.ஓ கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் பொதுமக்கள்.