வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (22/11/2018)

`கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் உடனடியாகச் சந்தித்திருக்க வேண்டும்!’ - வைகோ காட்டம்

``புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உடனே முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். இது மக்களுக்கு நம்பிகையை தந்திருக்கும். காலம் கடந்து முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தது வருத்தமளிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடரக்கூடாது. அதற்காக உடனே அரசு நிவாரணங்களை வழங்க வேண்டும்’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

வைகோ

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.``கடல் சூழந்து உலகமே திரண்டு வந்தாலும் வாரி வழங்கிய டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நேரத்தில் கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 57 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. லட்சத்துக்கு மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள், நெற் பயிர்கள் உள்ளிட்டவை அழிந்துள்ளது. இந்தப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்துள்ளார். ஆனால் பிரதமர்  தமிழக முதல்வர் கேட்கும் தொகையைத் தர மாட்டார்.

பிரதமர் மோடி தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பதோடு, எதிராகவும் செயல்பட்டு வருகிறார். இதுவரை தமிழகத்தில் ஏற்பட்ட புயலுக்கு தமிழக அரசு கோரிய நிவாரணத் தொகையில் 4 சதவிகிதத்தை மட்டுமே பிரதமர் மோடி தந்துள்ளார். அவர் பிரதமராக இருக்க தகுதியற்றவர். கஜா புயல் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க மின்வாரிய ஊழியர்கள், போலீஸார் மற்றும் கலெக்டர் என சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க அரசில் இதுவரை மேற்கொண்ட மீட்புப் பணிகளைவிட தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மேற்கொண்ட கஜா புயல் முன் ஏற்பாடு பணிகளை நான் பாராட்டுகிறேன்.

வைகோ

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 300-க்கும் அதிகமான மருத்துவக் குழுக்களை அமைத்து தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையிலும், அமைச்சர்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை நடத்தி வருவதையும் பாராட்டுகிறேன். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உடனே  முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். இது மக்களுக்கு நம்பிகையைத் தந்திருக்கும். காலம் கடந்து முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தது வருத்தமளிக்கிறது.

ஆனால், மத்திய அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது. இதுவரை பிரதமர் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, தமிழகத்தின் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை. தென்னை விவசாயி தற்கொலை செய்துகொண்டது வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலை தொடரக் கூடாது. நிவராணத் தொகை விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். ஆளும்கட்சியினருக்கு மட்டும் சென்றடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள், கல்வி, வணிகர்கள் பெற்ற கடன் ஆகியவற்றில் அசல் தொகையை 5 ஆண்டுகள் கழித்து வசூல் செய்ய வேண்டும். இதற்கான  வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க