Published:Updated:

‘மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் வீடியோ வெளியீடு’ - பாத்திமாபாபு

‘மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் வீடியோ வெளியீடு’ - பாத்திமாபாபு
‘மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் வீடியோ வெளியீடு’ - பாத்திமாபாபு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சீர்குலைத்து மக்கள் போரட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு கேவலமான யுத்தியை பயன்படுத்தி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்திட காவல்துறையிடம் மனு அளித்துள்ளேன் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பாத்திமா பாபு மற்றும் அவருடன் இணைந்து போரட்டங்களில் கலந்து கொண்ட தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளரான தெர்மல் ராஜா  ஆகியோர் ஹோட்டல் அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் பாத்திமா பாபுவின் உருவப்படத்தை அவரது வீட்டு முன்பு மீனவர்கள் எரிக்க முயன்றனர். அதே போல, நேற்று காலை தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முதலில் துவக்கிய குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம் கிராம மக்கள் பாத்திமா பாபு, தெர்மல் ராஜா மற்றும் நித்தியானந்த ஜெயராமன் ஆகியோரின் உருவப் படத்தை  கையில் ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பாத்திமா பாபு தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களுடன் பல அமைப்புகள்  இணைந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்களை முடுக்கப்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது.

தற்போது ஆலைக்கு எதிரான போராட்டங்களின் உச்ச கட்ட நிலையில், இப்படி ஒரு கேவலமான யுத்தியை கையாண்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து எனக்குப் பணம் வருகிறது என்றெல்லாம் என் மீது பழி சுமத்தப்பட்டது. இறுதியாக ஒரு பெண்ணை எந்த வழியில் கேவலப்படுத்தினால் அவள் போராட்டக் களத்திற்கு வர மாட்டாள் என்பதனை அறிந்து எடிட்டிங் செய்யப்பட்டு இப்படி ஒரு கேவலமான  வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், என் பெயருக்கு களங்கம் வந்து விடப் போவதில்லை. இந்த வீடியோ விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளோம். இதனால், எக்காரணம் கொண்டும் போரட்டத்தில் பின்னடைவு வராது இறுதி வரையில் தொடர்ந்து போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.