Published:Updated:

``சபரிமலை ஐயப்பன் கோயிலை அழிக்க மாஸ்டர் பிளான்!" - பொன்.ராதாகிருஷ்ணன்

``சபரிமலை ஐயப்பன் கோயிலை அழிக்க மாஸ்டர் பிளான்!" - பொன்.ராதாகிருஷ்ணன்
``சபரிமலை ஐயப்பன் கோயிலை அழிக்க மாஸ்டர் பிளான்!" - பொன்.ராதாகிருஷ்ணன்

"சபரிமலையில் தீபாராதனை காட்டியவர்கள் மீதும் கற்பூரம் ஏற்றியவர்கள் மீதும்கூட வழக்கு போட்டதாக கேள்விப்படுகிறேன். சபரிமலையில் நடந்த சம்பவம் என்னை டார்கெட் செய்தது அல்ல.  வசதிகளை குறைத்தால் பக்தர்கள் வர மாட்டார்கள் என்பதுதான் அவர்கள் டார்கெட். கேரள அரசு சபரிமலையை ஒழிக்க  நினைக்கிறது" என்று கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குழாய்மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 10 - வது நகர எரிவாயு விநியோக ஏலச்சுற்று தொடக்க விழாவை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடக்கி வைத்தார்.  கோவை கொடீசியா அரங்கில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில்,  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த  அவர்,  "நான் சிறுவயது முதல் சபரிமலைக்குச் சென்றுவருகிறேன். இப்போது சென்றபோது கோயில் வெறிச்சோடி இருந்தது.  அருகில் உள்ள பேருந்து நிலையத்தில்கூட பக்தர்கள்கூட்டம் அதிக அளவில் இல்லை. சாலையில் நிலச்சரிவு இருப்பதாகச் சொல்லி எங்கள் வாகனங்களை எஸ்.பி தடுத்தார்.  ஆனால், அந்தப் பகுதியில் போய்வரும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரித்தபோது, அனைத்துப் பேருந்துகளும் போகலாம், எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார்கள். அதை எஸ்.பி-யிடம் சொல்லி, நீங்கள் ஏன்  அனைத்து வாகனங்களையும் அனுப்ப மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன்,  சாலை மோசமாக இருப்பதால், அரசுப் பேருந்து மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  

நாங்கள் மூன்று கார்களில் சென்றிருந்தோம். அதில் ஒரு காரை பம்பை அருகே வேண்டுமென்றே எஸ்.பி பிடித்துவைத்துவிட்டார்.
பாதிதூரம் வந்து திரும்பிச் சென்று நான் கேட்டதும், தெரியாமல் பிடித்துவிட்டாதாகச் சொல்லி காரை விடுவித்தார். போலீஸ் இப்படிச் செய்வதால், சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் போகமுடிவில்லை. அங்கு இப்போது இருக்கும் காட்சி தாங்க முடியவில்லை. யுத்தக் களம் போல, மட்டரகமான நிலையில் சபரிமலை இருக்கிறது. எப்போதும் பஜனை நடக்கும்  இடம், இழவு வீடுபோல இருந்தது.

அங்குள்ள காவல் துறை அதிகாரி, மனிதாபிமானத்துடன் பக்தர்களை அணுகியதாகத் தெரிவில்லை. இதற்கு முன்பு எந்த அதிகாரியும் ஷூ காலோடு அந்தப் பகுதியில் நடக்க மாட்டார்கள். இப்போது அதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. நிலக்கல்லில் என்னிடம் பேசுகையில் எங்களிடம் மாஸ்டர் பிளான் இருக்கிறதெனச் சொன்னார். இந்தக் கோயிலை அழிப்பதற்குத்தான் மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர் என நான் நினைக்கிறேன். ஐயப்பன் கோயில் மாநில அரசுக்கு சொந்தம் கிடையாது.  கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புதான் மாநில அரசிடம் இருக்கிறது. இதுமாதிரியான சூழலைக் கொண்டுவரத்தான் அரசிடம் நிர்வாகம் கொடுக்கப்பட்டுள்ளதா?

சபரிமலையில் தீபாராதனை காட்டியவர்கள் மீதும் கற்பூரம் ஏற்றியவர்கள் மீதும்கூட வழக்கு போட்டதாக கேள்விப்படுகிறேன். சபரிமலையில் நடந்த சம்பவம் என்னை டார்கெட் செய்தது அல்ல. வசதிகளைக் குறைத்தால் பக்தர்கள் வர மாட்டார்கள் என்பதுதான் அவர்கள் டார்கெட். கேரள அரசு சபரிமலையை ஒழிக்க  நினைக்கிறது.

புயலால் பாதிக்கப்பட்ட  நான்கு மாவட்டங்களுக்கும்  மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் இதில் அரசியல் லாபம் பார்க்கின்றனர். மின் துறையைச் சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி வேலைசெய்கின்றனர், அப்போது ஆர்ப்பாட்டம் செய்தால் யாருக்கு நஷ்டம்? மக்களிடம் வாக்கு இருக்கிறது. அதுதான் உங்கள் ஆயுதம். வாக்களிக்கும்போது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள், நிவாரணப் பணியைத் தடுக்காதீர்கள். என்றவரிடம், புயல் பாதிப்பை முதல்வரும் துணை முதல்வரும் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வுசெய்தது குறித்துக் கேட்டதற்கு,  'பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க நான் நடந்துசென்றுதான் பார்த்தேன். அதுதான் சரியான நடைமுறை என்றார்.