வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (23/11/2018)

கடைசி தொடர்பு:21:40 (23/11/2018)

`ஸ்டாலின் வாய்ஜாலம் மட்டுமே காட்டுகிறார்!' - ஓ.பன்னீர்செல்வம்

``தி.மு.க தலைவர் ஸ்டாலின் புயலை வைத்து அரசியல் செய்து வருகிறார். வெறும் வாய் ஜாலம் பேசினால் மட்டுமே போதாது செயல்பட வேண்டும். நாம்தான் களத்தில், கடமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம்’’ எனத் தஞ்சாவூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து கஜா புயலால் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் வீதம் 1.1 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகையைப் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் கூறியதாவது, ``கஜா புயல் ஆறு மாவட்டத்தில் பலத்த சேதமும் ஆறு மாவட்டத்தில் மிதமான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டு சுனாமி, அதன்பிறகு தானே, வர்தா, ஒக்கி புயல்கள், வெள்ளம் எனத் தொடர்ந்து வந்த இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு அவற்றின் சுவடே இல்லாத வகையில் மாற்றினோம்.

முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது எப்படி பணியாற்றுவோமோ அதேபோலதான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற, தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். தஞ்சை மாவட்டத்துக்கு இரண்டு, மூன்று நாள்களுக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். புயலை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின். வெறும் வாய்ஜாலம் பேசினால் மட்டுமே போதாது; செயல்பட வேண்டும். நாம்தான் களத்தில், கடமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உணவளித்து வருகிறோம். தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலையே இல்லை’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க