Published:Updated:

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

Published:Updated:
“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

டுப்பெலும்பு தேய்ந்துபோய், பெல்ட் கட்டிக்கொண்டு நிற்கவே முடியாமல் தவிக்கும் ஒரு முதியவரை, கைத் தாங்கலாக இருவர் கூட்டிவந்து நிப்பாட்டுகிறார்கள். எந்த ஊரென்று கேட்டால், ‘‘ராமநாதபுரத்துலேர்ந்து வர்றேன் தம்பி” என்று சாதாரணமாகச் சொல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு தூரத்திலிருந்து ஒருவரால் பயணம் செய்து வரமுடியுமா என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

இளைஞர் கூட்டம் ஒன்றாக நின்றபடி, ‘‘நாம கத்துறது தலைவர் காதுல விழணும். அது கேட்டா, நிச்சயமா எழுந்துப்பாரு. அப்படிக் கத்துங்க’’ என்றபடி முழக்கமிடுகிறது. 

‘எழுந்து வா... தலைவா... எழுந்து வா...
உடன்பிறப்புகள் அழைக்கிறோம்...
எழுந்து வா... தலைவா... எழுந்து வா...
எங்களின் உயிர்த்துடிப்பே எழுந்துவா!’


இந்த கோஷம், மொத்தக் கூட்டத்தையும் வசப்படுத்துகிறது. எல்லோரும் தொண்டை நரம்பு புடைக்கக் குரலெழுப்புவதில், அந்தச் சூழலே உணர்ச்சிமயமாகிறது. கருணாநிதி சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே மக்கள் வெள்ளம்போலத் திரண்டு நிற்கிறார்கள். அவர் உடல்நிலை மோசமான விஷயத்தைக் கேள்விப்பட்டதும், வெளியூர்களிலிருந்து வந்து மூன்று நாள்களாக கோபாலபுரம் வீட்டு வாசலிலும், காவேரி மருத்துவமனை முன்பும் காத்துக்கிடந்த களைப்பு அங்கிருக்கும் பலர் முகங்களில் தெரிகிறது. பலர் சாப்பிடாமல் சோர்ந்து போயிருந்தார்கள். ஆனால், அவர்களின் மன உறுதி அதற்கு மாறான வலிமை கொண்டதாக இருக்கிறது.

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

எந்தெந்தக் கிராமத்திலிருந்தோ வந்த முதியவர்கள், தங்களின் சக்தியைத் திரட்டி கருணாநிதிக்காக கால்கடுக்கக் காத்துக் கிடக்கின்றனர். குரலே எழவில்லை என்றாலும் ‘அண்ணாவின் தம்பியே எழுந்து வா’ என்கிற கோஷத்தை எழுப்புகின்றனர். திருவாரூரிலிருந்து தனியாகக் கிளம்பி வந்த ஒரு பாட்டி, மருத்துவமனை வாசலில் நின்று, ‘‘அய்யா, வந்துடுங்கய்யா...’’ என்று அழுகிறார். தேற்றித் தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தாலும் அந்தப் பாட்டியின் அழுகை அடங்கவில்லை.

இப்படியான தொண்டர்களைத் தாண்டி மருத்துவமனைக்கு உள்ளே செல்வதென்பது அரசியல் தலைவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. காரில் ஸ்டாலின் உள்ளே வரும்போதும் போகும்போதும் எல்லோரும் அவரை மறித்து அழுகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் காரை உரிமையுடன் நிறுத்தி, ‘‘அண்ணே, தலைவர் எப்படி இருக்கார்ணே...’’ என்று கேட்கிறார்கள்.

மக்கள் அதிகமாகத் திரண்டதால், சாலையில் ஒரு பக்கம் போக்குவரத்து முடக்கப்பட்டது. எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லாத மருத்துவமனையை ஒட்டியுள்ள சாலையில் தவறுதலாக 45B பஸ் ஒன்று நுழைய...  அங்கு கூடியவர்களில் ஒரு பகுதியினர் பஸ்ஸை முற்றுகையிட்டுக் கூச்சலிட்டார்கள். ‘‘ஏ, கலவரம் ஏதும் பண்ணிட வேணாம்யா... தலைவர் பேர்தான் கெடும்’’ எனப் பெரிய மீசைக்காரர் ஒருவர் சத்தம் கொடுக்க... கூட்டம் கலைந்தது.

இயற்கையுடன் கருணாநிதி போரிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், இயல்புக்கு முரணாக எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் தி.மு.க-வினர் தெளிவாக இருந்தனர். டி.டி.வி.தினகரன் காரில் உள்ளே நுழைகையில், ‘‘ஏ, அந்த ஆள இறங்கிப் போகச் சொல்லுய்யா’’ என ஒருவர் சத்தம்போட, இன்னொருவரும் அதையே சொன்னார். அவர்களின் கருத்து வலுத்து, தினகரன் உள்ளே நுழைந்தபோது சலசலப்பு உண்டானது. அப்போது, ‘‘யோவ், ஏன்யா இப்படிப் பண்றீங்க? பகைவரா இருந்தாலும் இந்தச் சூழல்ல பண்போடு இருக்கணும்யா. இதத்தானய்யா தலைவர் நமக்குச் சொல்லிக் கொடுத்தாரு. அவரை அசிங்கப்படுத்தாதீங்கய்யா” என்று வெளியூரிலிருந்து வந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் சத்தம்போட, அவர்கள் அமைதியானார்கள்.

“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்!”

மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் கூட்டம், நேரம் ஆக ஆக அதிகமாகிறது. உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல், முந்தானையைத் தலையில் போட்டபடி பெண்கள் நின்றிருந்தார்கள். கூட்டம் பசிக்குக்கூட எங்கும் விலகாமல் டீயும், வேர்க்கடலையும், சமோசாவும் சாப்பிட்டு தண்ணீர் குடித்தபடி நின்றிருக்கிறது. ரொம்பவும் தளர்ந்துபோனவர்கள், அருகிலிருந்த மேம்பாலத்தின் கீழே உட்கார்ந்தும், படுத்தும் சற்றுப் புத்துணர்வு அடைந்து மீண்டும் மருத்துவமனை வாசலுக்கு வந்து நிற்கிறார்கள். கருணாநிதி செய்த சாதனை என ஒருவர் சத்தம் போட்டு ஒவ்வொன்றாக பட்டியலிட, ஒவ்வொன்றுக்கும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் மக்கள். இவர்களுக்கிடையே தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல்வேறு இந்திய மொழிகளில் மைக்கைப் பிடித்துப் பேசியபடி ஊடகவியலாளர்கள் வலம் வருகிறார்கள். 

அண்ணா அறிவாலயத்தில் காணப்படும் காட்சிகள் இங்கும் காணக்கிடைக்கின்றன. பெரிய துண்டை விரித்து, கருணாநிதி முகம் அச்சிட்ட பேனா, புகைப்படம், அவர் எழுதிய புத்தகங்கள் ஆகியவற்றைப் போட்டு ஒருபக்கம் கடைவிரித்துள்ளனர். மறுபக்கம், அன்னக்கூடைகளில் சுண்டல், வேர்க்கடலை, நாவல்பழம் ஆகியவற்றை விற்பதற்கு வரிசையாக உட்கார்ந்துள்ளனர். இடம்பிடிப்பதில் அவர்களுக்குள் தகராறு. இந்தச் சூழலிலும் செல்ஃபி எடுக்க சிலர் வந்திருக்கிறார்கள். கனிமொழி கவலையுடன் தந்தையின் நிலையை விவரிக்க, பின்னணியில் கனிமொழி தெரிகிறாரா எனக் கவனமாகப் பார்த்துக்கொண்டு செல்ஃபி எடுக்கிறார் ஓர் இளைஞர்.

அதைக்கூட கண்டுகொள்ளாத கூட்டம், கருணாநிதி நலம்பெற்று வீடு திரும்பும்வரை கலைந்துபோவதாக இல்லை. வெயில், மழை, பசி, மயக்கம், தடியடி என எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறார்கள். இப்படியான தொண்டர்களின் அன்பு இனி தமிழகத்தில் யாருக்குக் கிடைக்கும் என்பது, காலத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

- தமிழ்ப்பிரபா
படங்கள்: ப.சரவணகுமார்