Published:Updated:

ஏரியைத் தூர்வார விடாமல் கடவூர் தி.மு.க-வினர் முட்டுக்கட்டை - விழிபிதுங்கும் மக்கள்!

ஒரு லட்சம் ரூபாய் செலவுசெய்து எட்டு நாள்கள் இந்த ஏரியை தூர் வாரினோம். கரையே இல்லாம கிடந்த ஏரிக்குக் கரையை அமைத்தோம். ஐம்பது பேர் சேர்ந்து ஏரிக் கரைகளை சுத்தி ஆயிரம் பனை விதைகளையும் விதைச்சோம்.

ஏரியைத் தூர்வார விடாமல் கடவூர் தி.மு.க-வினர் முட்டுக்கட்டை - விழிபிதுங்கும் மக்கள்!
ஏரியைத் தூர்வார விடாமல் கடவூர் தி.மு.க-வினர் முட்டுக்கட்டை - விழிபிதுங்கும் மக்கள்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டுதலோடு இயங்கிவரும் சமூக நல அமைப்பான 'மக்கள் பாதை' சார்பில் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏரி, ஒரு லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது.

"மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியோடு, சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியை ஒரு லட்சம் ரூபாய் செலவுசெய்து 8 நாள்கள் தூர் வாரினோம். ஏரியை ஒட்டியுள்ள கரைகளில், 1,000 பனைவிதைகளையும் விதைச்சோம். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் ஒருவர், எங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். 'நீங்க எப்படித் தூர்வாரலாம்; உங்கமேல கேஸ் போடுவோம்' என்று அதிகாரிகளை மூலம் எங்களை மிரட்டவைக்கிறார். நாங்களும் இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை" என்று எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறார் மக்கள் பாதை அமைப்பின் கடவூர் ஒன்றியப் பொறுப்பாளர் ராமசாமி.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாழ்வார்மங்கலம். இந்தக் கிராமத்தில் 25 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது வெள்ளக்குளம் ஏரி. கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதி முழுவதுமே வறட்சி நிறைந்தது. மானாவாரி நிலங்களை அதிகமாகக் கொண்ட இந்தப் பகுதியில் மழை பெய்தால்தான் விவசாயம். வாழ்வார்மங்கலம் கிராமமும் வறட்சி மிகுந்த ஊர்தான். இந்த ஊர் மக்கள் குடிதண்ணீர்கூட கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள். "இந்தப் பகுதியில் பெய்யும் மழையானது ஏரியில் சென்று நிறையாததுதான், அதற்குக் காரணம். தவிர, கடந்த பத்துவருடங்களாக இந்த ஏரியானது, தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளில் சிக்கித் தவிப்பதோடு, சரிவரத் தூர் வாரப்படாமல் தூர்ந்துபோனதுதான்" என்கிறார்கள் கிராம மக்கள்.

தொடர்ந்து நடந்தவை பற்றி நம்மிடம் பேசிய மக்கள் பாதை அமைப்பின் கடவூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமி, "இந்த ஏரியில் தண்ணீர் முழுமையாக நிறைஞ்சு 15 வருஷத்திற்கும் மேல் ஆகிறது. தண்ணீர் முழுமையா நிறைஞ்சா, இந்தப் பகுதியைச் சுத்தியுள்ள ஆறு ஊர்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிக்கத் தண்ணீரும் கிடைக்கும். சுமார் 500 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடக்கும். ஆனா, இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு, விவசாயம் பார்த்தாங்க. அவர்கள், கடவூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிச்சை மற்றும் தி.மு.க மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோரின் உறவினர்கள். அதனால, இந்த ஏரியை தூர்வாரவிடாம இவர்கள் இருவரும் அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு தடுத்துவந்தாங்க. தற்போது இந்த ஏரியை எங்கள் அமைப்பின் சார்பில் தூர் வார நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். வழக்கம்போல தி.மு.க. பிரமுகர்கள் ரெண்டுபேரும் அதற்கு முட்டுக்கட்டை போட்டாங்க. ஆனாலும், எங்க முயற்சியைப் பாராட்டிய கலெக்டர், உடனே அதற்கு அனுமதி கொடுத்தார். கடவூர் பி.டி.ஓ மனோகர் மூலமா அனுமதி வழங்கினார். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி, வெள்ளக்குளம் ஏரியில் சர்வே செய்து தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் தூர்வாருவதற்கான இடமா குறித்துக் கொடுத்தாங்க.

பின்னர், ஒரு லட்சம் ரூபாய் செலவுசெய்து எட்டு நாள்கள் இந்த ஏரியை தூர் வாரினோம். கரையே இல்லாம கிடந்த ஏரிக்குக் கரையை அமைத்தோம். ஐம்பது பேர் சேர்ந்து ஏரிக் கரைகளை சுத்தி ஆயிரம் பனை விதைகளையும் விதைச்சோம். தி.மு.க. பிரமுகர் பிச்சை, எங்களை மிரட்டினார். 'மேற்கொண்டு தூர்வாரக்கூடாது' என்று அதட்டினார். ஆனா, அதற்கெல்லாம் நாங்க மசியலை. உடனே பி.டி.ஓ-வை பார்த்துப் பேசி, 'அரசு வகுத்த விதிமுறைகளை மீறி நாங்க ஏரியைத் தூர் வாரியதாக குற்றம்சாட்ட வைத்து, தூர் வார ஏற்கெனவே பி.டி.ஓ. அளித்திருந்த அனுமதியை ரத்து பண்ண வச்சுட்டார். அப்புறம் விசாரிச்சப்பதான் பிச்சைக்கும், பி.டி.ஓ-க்கும் இடையே நெருக்கம் இருப்பது தெரியவந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பி.டி.ஓ-வின் பலகோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை மீட்க பிச்சை உதவியிருப்பது தெரியவந்தது. தூர்வாருவதற்கு அளித்த அனுமதியை கலெக்டருக்கு தெரிவிக்காமல் ரத்து பண்ணிட்டார். இது சம்பந்தமா, கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனிடம், பிச்சையின் அடாவடித்தனம் பற்றி புகார் சொன்னோம். 'நடவடிக்கை எடுக்கிறேன்'னார். ஆனால், பின்னர் அவரும் இதைக் கண்டுக்கலை. 

என்றாலும், இந்தப் பிரச்னையை நாங்க சும்மா விடபோவதில்லை. மக்கள் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டிய ஏரியை தூர் வாரவிடாமல் தடுக்கும் பிச்சைக்கு எதிராக எங்க தலைமையின் அனுமதியோடு போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க ஒன்றியச் செயலாளர் பிச்சையிடம் பேசினோம். "ஏரியை தூர் வாருறேன்னு சொல்லிட்டு, ஏரியை ஒட்டி, அவர் வாங்கிப் போட்டிருக்கும் வயலுக்கு ரோடு போட்டார் ராமசாமி. இது விதிமுறைகளுக்கு எதிரானது. அதனைக் காரணம்காட்டிதான், தூர்வார அளித்திருந்த அனுமதியை பி.டி.ஓ. ரத்து செய்தார். மற்றபடி எனக்கு வேண்டியவர்கள் ஏரியை ஆக்கிரமித்தார்கள். அவர்களுக்காக பி.டி.ஓவை விட்டு தூர் வாரும் அனுமதியை ரத்து பண்ண வச்சேன்னு சொல்றதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு. அவர்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பி.டி.ஓ-வுக்கு நான் உதவியதாகச் சொல்வதும் கட்டுக்கதை" என்றார்.

கடவூர் பி.டி.ஓ மனோகரிடம் பேசினோம். "சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலோடு உள்ள அமைப்பு என்பதால், நேர்மையாக ஏரியைத் தூர் வாருவார்கள்னு அனுமதி கொடுத்தோம். ஆனா, அரசு விதித்துள்ள விதிமுறைகளை ஏகத்தும் மீறி, தன்னுடைய சுயலாபத்துக்கான நோக்கத்தோடு ஏரியை தூர் வாரினார்கள். அதனால்தான், தூர் வார கொடுத்த அனுமதியை ரத்து பண்ணினேன். தி.மு.க ஒன்றிய செயலாளர் பிச்சைக்கு நான் உதவுகிறேன்னு ராமசாமி சொல்றது பொய்யான குற்றச்சாட்டு" என்றார். 

'கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் ஏரியைத் தூர் வாரப் போக, இத்தனை அக்கப்போரா கிளம்புதே' என்று வாழ்வார்மங்கலம் கிராம மக்கள்தான் இப்போது விழிபிதுங்கி, குழம்பிக் கிடக்கிறார்கள்.