Published:Updated:

``பா.ஜ.க இனி அதிகாரத்துக்கு வரமுடியாது!" - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

``பா.ஜ.க இனி அதிகாரத்துக்கு வரமுடியாது!" - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே
``பா.ஜ.க இனி அதிகாரத்துக்கு வரமுடியாது!" - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தன் மனைவி, மகன் ஆதித்யா மற்றும் சிவசேனா தலைவர்கள் சிலருடன் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு வந்திருந்தார். இவர் வருகையை முன்னிட்டு அங்கே சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணம் கருதி ராமர் கோயிலுக்கு செல்போன் உட்பட இதர பொருள்களை தாக்கரே குடும்பத்தினர் எடுத்துச்செல்ல காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர்.


சுமார் நாற்பது நிமிடங்கள் கோயிலில் தரிசனம் செய்த தாக்கரே, பின்னர் செய்தியாளர்களிடம், ``ராமரைத் தரிசிக்கவே அயோத்தி வந்துள்ளேன். மற்றபடி என்னுடைய வருகையில் எந்த உள்நோக்கமும் இல்லை. ராமர் பிறந்த இடத்தைப் பார்த்த பிறகு அவர் இன்னும் வனவாசத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. நான் கோயிலில் இருக்கின்றேனா சிறையில் இருக்கின்றேனா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ராமரைத் தரிசிக்க வந்த எனக்கு இதுபெரும் வலியைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த அரசு எவ்வளவு விரைவாக ராமர் கோயிலைக் கட்டி முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைக் கட்டி முடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் இனியும் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கோயில் கட்டுவது என்பது உறுதி. ஆனால், அதைத் தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு செய்யத் தவறினால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறவோ எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வரவோ  முடியாது” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ``மோடி அரசு இந்துக்களின் உணர்வுகளில் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ராமர் கோயிலைக் கட்டுவதற்குரிய வழிகளின்படி இந்த அரசு ஆணையோ சட்டமோ பிறப்பிக்க வேண்டும். என்னுடைய வருகைக்காக ஒத்துழைப்பு வழங்கிய உத்தரப்பிரதேச அரசுக்கும் காவல்துறைக்கும் என்மீது அன்புகொண்டு என்னை வரவேற்ற மக்களுக்கும் நன்றி” என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் சிவசேனா சார்பாக ஒரு மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வருகையின்மூலம் வட இந்திய மக்களிடம் இழந்த தனது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக்கொண்டுள்ளார் தாக்கரே. ஆனால், நாடாளுமன்றம் நெருங்கும் வேளையில் தாக்கரேவின் இந்தப் பேச்சு பா.ஜ.க அரசுக்குப்  பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது.