வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (26/11/2018)

கடைசி தொடர்பு:18:34 (26/11/2018)

`நட்புக் கட்சி, கூட்டணிக் கட்சி’ தமிழக அரசியலின் புதிய குழப்பம்?

தமிழகத்தில் அரங்கேறி வரும் கூட்டணிக் குழப்பங்கள் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாகப்போகிறதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளன. இதற்கான பதில் வைகோ சொன்னது போல ஸ்டாலின் அவருடைய முடிவைச் சொல்வதில்தான் அடங்கியுள்ளது.

`நட்புக் கட்சி, கூட்டணிக் கட்சி’ தமிழக அரசியலின் புதிய குழப்பம்?

``துரைமுருகன் அவருடைய பதிலைச் சொல்லிவிட்டார்; தன்னுடைய முடிவைச் சொல்லட்டும்” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியிருப்பது தமிழகத் தேர்தல் களத்தைப் பரபரபாக்கியிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பாலும் திராவிடக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு அதன் கூட்டணிக் கட்சிகளும் காரணமாய் இருக்கின்றன. அதுபோல், திராவிடக் கட்சிகளை வீழ்த்தவும் புதிய அணிகள் சேர்வதுண்டு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக உருவான மக்கள் நலக்கூட்டணி, தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பைப் பாதித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

கூட்டணி

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணி போன இடம் தெரியவில்லை. அதேநேரத்தில், அதில் இடம்பெற்ற சில கட்சிகள் தி.மு.க-வுடன் ஐக்கியமாகத் தொடங்கின. அதில், வைகோவின் ம.தி.மு.க-வும் ஒன்று. தி.மு.க-வினர் அறிவித்த பெருவாரியான போராட்டங்களில் எல்லாம் ம.தி.மு.க. கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர வி.சி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவந்தன. குறிப்பாக, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் நின்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதைப் புறக்கணித்து தி.மு.க-வுக்கு ஆதரவளித்தது. எனினும், தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. இருக்கிறதா என்பதே பலருக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது. 

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம், தி.மு.க. உடனான கூட்டணி பற்றிய கேள்விகள் எழும்போதெல்லாம், ``நாங்கள் அந்தக் கட்சியில்தான் உள்ளோம்; அதை உறுதிசெய்ய வேண்டியது தி.மு.க-தான்” எனச் சொல்லிவந்தார். ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், ``கட்சிகள் நட்பாக இணைந்துள்ளதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் வேறுபாடுகள் உள்ளது" என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அரசியலில் அடுத்த நகர்வுக்கான விவாதங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. துரைமுருகனின் கருத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், ``நாங்கள் கூட்டணியில் இல்லை" எனப் பதிலளித்துள்ளார்.

அதுபோல் கூட்டணி குறித்துப் பேசிய வைகோ, ``துரைமுருகனின் பதில் எங்கள் தொண்டர்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளது. தி.மு.க-வில் யாரெல்லாம் உள்ளனர் என அவர்கள் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்தப் பெருந்தலைவர்களின் கூட்டணி பற்றிய கருத்துகளால் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதன் காரணமாக, மீண்டும் `மக்கள் நலக் கூட்டணி’ உருவாகுமா என அரசியல் நோக்கர்கள் உற்றுக் கவனித்துவருகின்றனர். இதுகுறித்தும் தொடர்ந்து தொல்.திருமாவளவன் பேசிவந்தார். இதுகுறித்து அவர், ``கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான காலங்களிலும் மக்கள் நலக்கூட்டணி தொடர்ந்திருக்க வேண்டும்" என்பதை  வலியுறுத்திவந்தார். 

திரை முருகன்இதுகுறித்து விவரமறிந்தவர்கள், ``கூட்டணியைப் பற்றித் தெளிவான முடிவுகளும், தொகுதிப் பங்கீடுகள் பற்றிப் பேச்சுவார்த்தைகளும் நடக்காத நிலையில் தொல்.திருமாவளவன், தான் மீண்டும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தது தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுகள் அரசியலின் வெற்றிடங்களாகப் பார்க்கப்படுகிறது. அவை தி.மு.க-வின் பலமாக மாறியுள்ளது என்றபோதிலும், கூட்டணிப் பற்றிய பேச்சை இதுவரை அந்தக் கட்சி தொடங்கவில்லை. ஆனால், அதற்குள்ளேயே மற்ற கட்சிகள் தொகுதிப் பங்கீட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டன என்பதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்நிலையில், தி.மு.க. தேர்தலைச் சந்தித்தால், அந்தக் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கப்போவது கூட்டணிக் கட்சிகளுக்கு இடையான தொகுதிப் பங்கீடுகள்தான். இந்தக் குழப்ப நிலையைத் தவிர்க்கத்தான் தி.மு.க. இன்னும் கூட்டணி பற்றி வாய் திறக்காமல், `நட்புக் கட்சி, கூட்டணிக் கட்சி’ என்பதைப் புழக்கத்தில் விட்டுவருகிறது" என்கிறார்கள்.

மேலும் அவர்கள், ``சந்திரபாபு நாயுடு போன்ற மாநிலக் கட்சியின் தலைவர்களும், சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யை எதிர்ப்பதற்காக, தி.மு.க-வின் ஆதரவைப் பெறத் தயாராய் இருக்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் மத்தியில் ஆட்சி அமைப்பவர்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அது, தி.மு.க-விடமே அதிகளவு இருப்பதாகப் பலரும் நம்புகின்றனர். அதனால்தான் பலரும் இப்போதே தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கு அச்சாரம் இடுகின்றனர். ஆனால், தி.மு.க-வோ, கூட்டணி பற்றி வாய் திறப்பதாக இல்லை. இதனால், தமிழகத்திலும் மத்தியிலும் மாற்றங்கள் வரக்கூடும்" என்கின்றனர், அவர்கள் மிகவும் தெளிவாக. 

தேர்தல் வந்தால்தானே கூட்டணியே ஆரம்பமாகும்?


டிரெண்டிங் @ விகடன்