Published:Updated:

``முதல்வராக மோடியைவிட நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” - அரவிந்த் கெஜ்ரிவால்

``முதல்வராக மோடியைவிட நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” - அரவிந்த் கெஜ்ரிவால்
``முதல்வராக மோடியைவிட நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்” - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் மோடி அரசு செயல்பட்டதைவிட டெல்லியில் தனது தலைமையிலான அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆனதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டிருந்தார். அதில், ``ஆம் ஆத்மி கட்சி தொடங்கி இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊழலுக்கு எதிராகவும் வகுப்பு வாதத்துக்கு எதிராகவும் ஓர் அரசியல் புரட்சியை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி இதுவரை அதன் பாதையில் சிறப்பாகவே பயணித்து வருகிறது. இதற்காக உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டெல்லி மக்கள் அவர்களின் முதல்வரை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்திய மக்களைப் பார்த்துக் கேட்கிறேன் இதேபோல அவர்களது பிரதமரை எண்ணி அவர்களால் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா? 

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில்தான் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திய ரஃபேல் போர் விமான ஊழல், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியது போன்றவை நிகழ்ந்துள்ளன. 

குஜராத் மாதிரியிலான முன்னேற்றமான பாரதம் என்ற கோஷத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தது இந்த அரசு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு 12 ஆண்டுகளில் குஜராத்தில் செயல்பட்டதைவிடப் பல மடங்கு சிறப்பாக டெல்லியில் என் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு செயல்பட்டுள்ளது என்பதை அழுத்தமாகக் கூறுவேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.