வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (27/11/2018)

கடைசி தொடர்பு:15:46 (27/11/2018)

உடையும் தி.மு.க; இணையும் பா.ம.க - தே.மு.தி.க - கமல்! - தினகரன் வியூகம்

தேர்தலுக்கு முதல்நாள் 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவிடுவார்கள். அப்படிச் செய்தால் மீண்டும் ஓராண்டுக்கு தேர்தல் தள்ளிப் போகும். இதை நினைத்துத்தான் கவலைப்படுகிறோமே தவிர, தேர்தலைக் கண்டு நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சவில்லை.

உடையும் தி.மு.க; இணையும் பா.ம.க - தே.மு.தி.க - கமல்! - தினகரன் வியூகம்

டைத்தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அளித்த பேட்டி, அ.ம.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 'தேர்தல் நடந்தாலும் எங்கள் தரப்பு வேட்பாளர்கள் 18 பேரின் மனுவையும் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு அதிகம். தேர்தல் அலுவலர்களை மாநில அரசுதானே நியமிக்கிறது?' என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

மதுரை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர், இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் தன்னுடைய மனுவில், ``தேர்தல் விதிகளின்படி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்றில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நேரத்தில், பருவமழை காரணமாக இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இல்லை. இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் விதிகளின்படி உடனடியாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த தமிழக தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, ``திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். அதேநேரம், திருவாரூர் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 

இந்த நிலையில், நேற்று பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், ``புயல் காரணமாக 20 தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை வைத்தால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழக அரசு கடிதம் எழுதவில்லை என்றால், தேர்தல் ஆணையமே கருத்து கேட்கும்" எனக் கூறியிருந்தார். இப்படியொரு பதிலை தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. 

தங்க.தமிழ்ச்செல்வன்

`தலைமை தேர்தல் ஆணையரின் பேட்டியை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம்.  

``தேர்தல் நடத்த மாட்டோம் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார். நீதிமன்றத்தில், 'பிப்ரவரி 7- தேதிக்குள் தேர்தல் நடத்துவோம்' என தமிழக தேர்தல் அதிகாரி நேற்று கூறியிருக்கிறார். இது திருவாரூர் தொகுதி தேர்தலுக்கான பதில். திருப்பரங்குன்றத்தில் டாக்டர்.சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, `அங்கு நடத்த முடியாது' எனக் கூறிவிட்டனர். இப்படியிருக்கும்போது, `கஜா பாதிப்பால் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என்கிறார் ஓ.பி.ராவத். `தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பினாலும் நாங்கள் நிறுத்துவோம்' என்கிறார். இல்லாவிட்டால், `நாங்கள் கடிதம் கேட்டு வாங்கி நிறுத்துவோம்' என்கிறார். நாங்கள் அறிந்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதுவரைக்கும் தள்ளிக்கொண்டே போவார்கள்". 

அப்படியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், `18 பேரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்படலாம்' என்ற பேச்சு எழுகிறதே? 

``எங்களுக்கு இருக்கும் பயம் இது ஒன்றுதான். இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் எங்கள் 18 பேரின் மனுவையும் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு அதிகம். தேர்தல் அலுவலர்களை மாநில அரசுதான் நியமிக்கிறது. `உங்கள் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்' எனக் கூறிவிட்டால், இத்தனைநாள் உழைப்பெல்லாம் வீணாகிவிடும். அதையும் மீறி தேர்தலில் போட்டியிட்டாலும், தேர்தலுக்கு முதல்நாள் 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவிடுவார்கள். அப்படிச் செய்தால் மீண்டும் ஓராண்டுக்கு தேர்தல் தள்ளிப் போகும். இதை நினைத்துத்தான் கவலைப்படுகிறோமே தவிர, தேர்தலைக் கண்டு நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சவில்லை". 

நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் வருவது தி.மு.க-வுக்குத்தானே சாதகமாக முடியும்? 

``எந்தக் கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாங்கள் வலுவான அணியை அமைத்துப் போட்டியிடுவோம்". 

உங்கள் அணிக்குள் யார் யாரெல்லாம் வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்? 

``இதுவரைக்கும் யாரும் அப்படிக் கேட்கவில்லை. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு அதிகம். அந்தப் பக்கம் கூட்டணி உடைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எங்கள் கட்சியின் பக்கம் முக்கிய கட்சிகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது". 

எந்தக் கட்சியின் கூட்டணி உடையும் என நினைக்கிறீர்கள்? 

``தி.மு.க கூட்டணிதான். இடப்பங்கீடு பேச்சுவார்த்தையின்போதே அந்தக் கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க-வோடு கூட்டணியில் இல்லாத பல கட்சிகள் தனியாகத்தானே இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், ரஜினி ஆகியோர் தனியாகத்தான் உள்ளனர். நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால், மற்றவர்களை விஞ்சக் கூடிய அளவுக்கு பிரமாண்ட கூட்டணியாக மாறிவிடும். மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் பலமும் எங்களுக்குத்தான் இருக்கிறது. மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவோம்". 

தி.மு.க-வோடு நீங்கள் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? 

``நூற்றுக்கு நூறு சதவிகிதம் இல்லை. எங்களுக்குப் பிரதான எதிரி தி.மு.கதான். அ.ம.மு.க என்பதே அ.தி.மு.க-வுக்கான ஒரு தற்காலிக ஏற்பாடுதான். நாங்கள் எப்படித் தி.மு.கவோடு அணி சேர முடியும்?".  

கஜா புயல் பணிகளில் அரசின் தவறாக எதைப் பார்க்கிறீர்கள்? 

``புயல் நிவாரணப் பணிகளில் சரியான திட்டமிடல் இல்லை. கஜா புயலுக்கு 10 நாளுக்கு முன்பே, மக்களைப் பாதுகாத்ததை எல்லாம் ஏற்றுக் கொள்கிறோம். புயலுக்குப் பிறகு மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்னைகளான உணவு, குடிநீர், மின்சாரம் அல்லது மெழுகுவத்தி ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும். இதைக் கணிப்பதில் இந்த அரசு தவறிவிட்டது. 500 கிராமங்களுக்கு 500 சமையல்காரர்களை நியமித்திருந்தால், தினமும் சமையல் வேலைகள் நடந்திருக்கும். அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள். இந்தப் பகுதிகளுக்கு வராமல் பிரதமர் மோடியை எடப்பாடி சந்தித்ததே பயத்தின் காரணமாகத்தான். இன்னைக்கு ஏதோ ரயிலில் போவதாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. வரட்டும். பார்க்கலாம்.''