Published:Updated:

`தமிழக அரசின் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளது!’ - உ.வாசுகி குற்றச்சாட்டு

`தமிழக அரசின் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளது!’ - உ.வாசுகி குற்றச்சாட்டு
`தமிழக அரசின் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளது!’ - உ.வாசுகி குற்றச்சாட்டு

``கஜா புயல் பாதிப்பைப் பொறுத்தவரையில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதங்கள் கணிசமாக குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாது. இருப்பினும் புயலில் சரிந்து விழுந்த தென்னை, வாழைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டுத் தொகை என்பது கேலிக்கூத்தாக உள்ளது” என இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பல அப்பாவி மக்கள் மீது பல பிரிவுகளில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தற்போது வரை சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை. இது குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்ததால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி, சி.பி.ஐ இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும்  அனுப்பப்பட்டுள்ளது. இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதியை மட்டும் பின்பற்றி, இன்னொரு பகுதியைப் பின்பற்றாத சூழல் நிலவுகிறது. இதனால் சி.பி.ஐ விசாரணையின் மீது கவலை பிறக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஒவ்வொரு திங்கள்கிழமையும் பலதரப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து வருவதைக் காண முடிகிறது.

நிலம், நீர், காற்று ஆகியவற்றில் மாசு ஏற்படுத்தி உடலில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தி உயிருக்கே உலைவைக்கும் நிலையை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தூத்துக்குடி மண்ணிலிருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தியும் மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடத்தியதன் பலனாகத்தான் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால், தற்போது வேலை வாய்ப்பு இல்லை எனவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மக்களைத் திரட்டி மனு அளிக்க ஆலைத்தரப்பு அழைத்து வருகிறது. பாதிக்கப்பட்டதாகக் கூறி மனு அளிக்கப்படும் மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆட்சியரால் முடியாதா. இதை மாவட்ட நிர்வாகம் ஏன் செய்ய தவறுகிறது. இந்த ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா, வேண்டாமா என ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவில் ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நியமிக்கப்படாமல் ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையைத் தருண் அகர்வால் நேற்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த ஆய்வறிக்கை மீதான விசாரணைக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து தீர்ப்பு வெளியாகும். இந்தத் தீர்ப்பு வேதாந்தாவுக்கு ஆதரவாக அமைந்துவிடாமல், மக்கள் நலனுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கஜா புயல் பாதிப்பைப் பொறுத்தவரையில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாது. அதே நேரத்தில், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்வதில் அலட்சியம் காட்டுகிறது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக 50 பேருக்கு குறிப்பிட்ட பொறுப்பாளர்களை நியமித்து, பொறுப்பாளர்களை கண்காணிக்க கண்காணிப்பாளர்களையும் நியமித்து பணப்பட்டுவாடாவை கட்டமைப்பாக மேற்கொள்ளும் அ.தி.மு.க பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை அளிக்க இந்த யுத்தியைப் பின்பற்றாதது ஏன். புயலால் சரிந்து விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,500, வாழைக்கு ரூ.100 என அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டுத் தொகை என்பது கேலிக்கூத்தாக உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும்” என்றார்.