பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

தி.முருகன்

ர்மிளா பர்மனுக்கு 35 வயது. பிறந்தது அஸ்ஸாமில்தான். ரேஷன் கார்டில் பெயர் இருக்கிறது. டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு என அத்தியாவசிய அட்டைகள் பலவும் வைத்திருக்கிறார். ஆனால், பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவரின் கணவரும் மூன்று வயதுக் குழந்தையும் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்கள்.

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

ஷோபனா காட்டூனுக்கு 65 வயது. வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. கடந்த 11 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்திருக்கிறார். ரேஷன் கார்டு இருக்கிறது. போன மாதம் வரை மறக்காமல் சர்க்கரையும் கோதுமையும் வாங்கியிருக்கிறார். டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எல்லாம் உண்டு. அஸ்ஸாமில் ஆதார் கார்டு வாங்கிய வெறும் ஒன்பது சதவிகிதம் பேரில் அவரும் ஒருவர். ஆனால், பட்டியலில் அவர் பெயர் இல்லை. கணவரும் மகன்களும் பேரக் குழந்தைகளும் இடம்பிடித்துவிட்டார்கள்.

அந்தப் பட்டியல், தேசத்தையே விவாதிக்கவைத்த தேசியக் குடிமக்கள் வரைவுப் பட்டியல். அஸ்ஸாம் மாநிலத்தின் சுமார் மூன்று கோடியே முப்பது லட்சம் மக்களில், நாற்பது லட்சத்து ஏழாயிரம் பேரை நாடற்றவர் ஆக்கியிருக்கிறது இந்தப் பட்டியல். இவர்களின் கதி என்ன? இந்தியாவை விட்டு இவர்கள் துரத்தப்படுவார்களா? அப்படியானால் எங்கு போவார்கள்?

‘‘இதில் முஸ்லிம்கள் மட்டும் குறிவைத்து நிராகரிக்கப்பட்டார்கள்’’ என்கிறது காங்கிரஸ். ‘‘வங்காளிகள் மட்டும் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள்’’ எனக் குற்றம் சாட்டுகிறார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

உண்மை என்ன? இந்தியாவின் ஐந்தாவது ஜனாதிபதியாக இருந்த ஃபக்ருதீன் அலி அகமது, அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அவரின் உறவினர்களே இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளனர். ‘இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தவரின் குடும்பத்துக்கே குடியுரிமை இல்லையா?’ என்ற கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள். இப்போது அஸ்ஸாமை ஆள்வது பி.ஜே.பி. அந்தக் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் திலீப்குமார் பால் என்பவரின் மனைவி பெயரும் விடுபட்டுள்ளது. இப்படி அனைத்துத் தரப்பிலும் பல முக்கியப் புள்ளிகளின் குடும்பங்கள் விடுபட்டுள்ளன. இதன் பின்னணிதான் என்ன?

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

இந்தியா ஒரே தேசமாக இருந்த காலத்தில் அஸ்ஸாமில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். அங்கு வேலை பார்க்க கிழக்கு வங்காளத்திலிருந்து ஆயிரக் கணக்கானவர்கள் வந்தார்கள். சுதந்திரமும் பிரிவினையும் பெரும் கலவரங்களை உருவாக்கின. அப்போதும் நிறைய பேர் வந்தார்கள். வங்க தேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு பயந்து வெளியேறியவர்களுக்கு பிரம்மபுத்திரா நதி பாயும் வளமான அஸ்ஸாம் சொர்க்க பூமியாகத் தெரிந்தது.

வங்க தேசத்திலிருந்து இப்படி வருபவர்களை மேற்கு வங்காள மாநிலம் ஏற்றுக்கொள்கிறது. ‘ஒரே மொழி பேசுகிறோம்’ என்ற பிணைப்பு அங்கே இருக்கிறது. ஆனால், பழங்குடி மக்கள் வாழும் அஸ்ஸாம் இதை அனுமதிக்கவில்லை. தங்கள் தனித்துவமும் வாழ்வுரிமையும் பறிபோவதாக அவர்கள் கொந்தளித்தனர். ‘அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம்’ என்ற அமைப்பு இதற்காக உருவானது. வங்க தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு ஓட்டுரிமை தர இந்திரா காந்தி அரசு முடிவெடுத்தபோது பெரிய கலவரம் வெடித்தது. ‘நெல்லி படுகொலை’ என வரலாறு குறிப்பிடும் கொடூரம் அப்போதுதான் நிகழ்ந்தது. 1983 பிப்ரவரி 18-ம் தேதி, வெறும் ஆறே மணி நேரத்தில் 2,191 பேர் கொல்லப் பட்டார்கள். (இது அதிகாரபூர்வ கணக்கு மட்டுமே! உண்மையில் இறந்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருக்கக்கூடும்.)

ராஜீவ் காந்தி பிரதமரானதும், அஸ்ஸாம் ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு, அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் ஆகிய மூவரும் இணைந்து போட்ட இந்த ஒப்பந்தத்தில், ‘அஸ்ஸாம் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தி, 1971-ம் ஆண்டுக்குப் பிறகு வந்த வெளிநாட்டவர்கள் வெளியேற்றப் படுவார்கள்’ என்று மத்திய அரசு உறுதிமொழி கொடுத்தது.

ஆனால், அதன்பின் இதை எல்லோருமே மறந்துவிட்டார்கள். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்குத் தேர்வாகி பிரதமரானார் மன்மோகன் சிங். அவரிடம் மீண்டும் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட அவர் அமைதி காத்தார். ஆனால், மீண்டும் அஸ்ஸாம் அனலைக் கக்கியபோது, 2010-ம் ஆண்டு இதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. ஆரம்ப நாளிலேயே கலவரம் வெடித்து நான்கு பேர் இறந்ததால், காங்கிரஸ் அரசு அதை நிறுத்திவிட்டது. 

இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு Assam Public Works என்ற தொண்டு நிறுவனம், இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. 1951-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது, அதை வைத்து தேசியக் குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. ‘அந்த தேசியக் குடிமக்கள் பதிவேட்டை அப்டேட் செய்து, வெளிநாட்டவரைக் கண்டறியுங்கள்’ என்று அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்பின் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில்தான் அத்தனை விஷயங்களும் நடக்கின்றன. 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்தவர்கள், அவர்களின் உறவுகள் ஆகியோரே குடிமக்களாகக் கருதப்படுவார்கள். அப்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போயிருந்தால், வேறு பழைய ஆவணங்களைக் காண்பிக்கலாம். அதாவது, இந்தத் தேதிக்கு முன்பாக அவர்கள் பெயரில் இங்கு நிலம் இருந்ததற்கான ஆவணங்கள் தேவை; அல்லது வங்கிக்கணக்குப் புத்தகம்; தபால் நிலையக் கணக்கு போன்ற ஏதாவது ஓர் ஆவணம் வேண்டும். திருமண உறவால் இங்கு வந்தவர் களுக்குக்கூட, மூதாதையர் ஆதாரம் தேவை. பலரும் தங்கள் தாத்தா, பாட்டிகளின் பழைய ஆதாரங்களைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தார்கள். இவை எதுவும் இல்லாதவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற முடியாது.

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

‘‘இப்போது வெளியாகியிருப்பது வரைவுப் பட்டியல்தான். இறுதிப்பட்டியல் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும். விடுபட்டவர்கள், தங்களிடம் இருக்கும் ஆவணங்களைக் காட்டினால் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் யாராவது வெளிநாட்டவர் என யார் நினைத்தாலும் புகார் தரலாம்’’ என அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களே என்பதால், விடுபட்டவர்களில் அவர்களே அதிகம்.

‘‘இது வாக்கு வங்கி அரசியல். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகிறது பி.ஜே.பி’’ எனக் கொதிக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், ‘‘இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை. அஸ்ஸாம் மக்கள் கேட்டது இது.  உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டதால் நாங்கள் செய்திருக்கிறோம்’’ என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ‘‘தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தக் கணக்கெடுப்பு அவசியம். வெளிநாட்டவர் வருவதால், இந்தியர்களின் உரிமை பாதிக்கப் படுகிறது. நலத்திட்டங்களின் சலுகைகளை அவர்கள் தேவையில்லாமல் பெறுகிறார்கள்’’ என்கிறார், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா.

இவற்றுக்கிடையில் அஸ்ஸாம்போல இருக்கும் பல மாநிலங்களில் இதேபோன்ற கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் குவிய ஆரம்பித்துள்ளன. அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில், ‘அந்நியர்களைக் கணக்கெடுத்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்ற குரல்கள் எழுந்துள்ளன. மணிப்பூர் மாநில சட்டமன்றத்தில் இதற்காகத் தீர்மானமே போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட பாம்புப்புற்றில் கையை விட்ட நிலைமை!

அண்டை வீட்டில் இருப்பவர்களையே சந்தேகத்துடன் பார்க்கும் சூழலுக்கு தேசம் விரைவில் போகக்கூடும்!

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

இத்தனை பேருக்கு இடம் எங்கே?

மீப ஆண்டுகளில் அஸ்ஸாமுக்கு வந்த வங்க தேசத்தவர் பலர், வெளிநாட்டவர்களுக்கான ட்ரிப்யூனலில் ஆஜர் செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுக்க இருக்கும் ஆறு சிறைகளின் வளாகத்திலேயே இந்தத் தடுப்பு முகாம்களும் உள்ளன. இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே குடிமக்களைப் பரிமாற்றம் செய்துகொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. அதனால், இவர்களை எப்படி வங்க தேசத்துக்கு அனுப்புவது என்று தெரியாமலும், இங்கேயும் சுதந்திரமாக விட முடியாமலும், முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். வாழ்நாள் முழுக்க இவர்கள் இந்த முகாம்களிலேயே இருக்க நேரிட்டாலும் ஆச்சர்யமில்லை.

கைதிகளுக்காவது தங்கள் குடும்பத்தினருடன் பேசுவது, சிறையில் வேலை பார்ப்பது, பரோல் போன்ற விடுமுறைகளைக் கேட்டுப் பெறுவது போன்ற உரிமைகள் உள்ளன. தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ள இவர்களுக்கு அதுவும் இல்லை. ‘தந்தை இறந்துவிட்டார், ஒரே மகன் முகாமில் அடைபட்டிருக்கிறார். அவரை வெளியில் விடுங்கள். இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்’ என்று கேட்டு நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு.

சில நூறு பேரை மட்டும் அடைப்பதற்கே இந்த முகாம்களில் இடம் உள்ளது. இறுதிக் குடிமக்கள் பட்டியலை வெளியிட்ட பிறகு, சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என அஸ்ஸாம் அதிகாரிகள் சிலர் கணித்துள்ளனர். அவர்களை வங்க தேசம் ஏற்காவிட்டால் நிலை என்ன? ஆயுள் முழுக்க அவர்களை முகாம்களில் அடைத்து வைக்க முடியுமா? அத்தனை பேரை அடைத்து வைக்கும் அளவுக்கான முகாம்களை எங்கே உருவாக்குவது?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் அஸ்ஸாம் அரசே திகைப்பில் இருக்கிறது.