வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (27/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (27/11/2018)

`மூன்று முறை ஜாக்பாட் அடித்த கூட்டணி இது!' - தேர்தல் வியூகத்தைச் சொன்ன கனிமொழி

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழ்நாட்டை ஒன்றாகப் பார்க்காமல், சமூகரீதியாகவும் வாக்குரீதியாகவும் அலசிப் பார்ப்பது கனிமொழியின் வழக்கம். அந்த அடிப்படையில்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகிறார்.

`மூன்று முறை ஜாக்பாட் அடித்த கூட்டணி இது!' - தேர்தல் வியூகத்தைச் சொன்ன கனிமொழி

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டி, கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை உருவாக்கிவிட்டது. இதையடுத்து, அறிவாலயத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. `நமது அணிக்குள் காங்கிரஸ் இருப்பது அவசியம். அவர்களின் செல்வாக்குக்கு ஏற்ப இடங்களை ஒதுக்க வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. 

தமிழக அரசியலில் கூட்டணிக்கும் தோழமைக்குமான வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறார் துரைமுருகன். அவர் பேட்டி கொடுத்த சர்ச்சை ஓய்வதற்குள், இன்று அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் திருமாவளவன். `தி.மு.க-வுடன் இணக்கமாகவும் வலிமையாகவும் இருக்கிறோம். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை' என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமா. நேற்று வைகோவும் தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுவதை உணர்ந்த ஸ்டாலின், `7 பேர் விடுதலைக்காக ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ள ம.தி.மு.க-வுக்கு தி.மு.க ஆதரவு தரும்' எனக் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் ம.தி.மு.க-வினரை நிம்மதியில் ஆழ்த்தியது. இந்நிலையில், `கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியவத்துவம் தரப்பட வேண்டும்' என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் கனிமொழி எம்.பி. 

வைகோகூட்டணி நிலைப்பாடு குறித்துப் பேசிய கனிமொழி, `நமது கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அவசியம் இருக்க வேண்டும். அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கினால்கூட தவறில்லை. வாக்கு வங்கியின் அடிப்படையில் அவர்களை நாம் பார்க்கக் கூடாது. கொள்கையின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். இது இயல்பாக அமையக்கூடிய கூட்டணியாகவும் இருக்கும். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் நமது அணியில் இருந்திருந்தால் 15 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருப்போம். இதன் காரணமாகவே, 2016 தேர்தலிலும் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டது. நமது கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்ததுதான் நமக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ஜி.கே.வாசனைக்கூட நாம் கூட்டணி கணக்குக்குள் எடுத்துக் கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் எதிர்ப்பு வாக்குகள் என்பது கிடையாது. 

2004, 2006, 2009 என மூன்று தேர்தல்களில் ஜாக்பாட் அடித்த கூட்டணி இது. இந்திய வரலாற்றில் இப்படி எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெற்றி பெற்றது கிடையாது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவதற்கு காங்கிரஸ் நமக்குத் தேவை. 2011 தேர்தலில் தோற்ற காரணத்துக்காக 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து பிரித்துவிட்டோம். நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். இப்போது காங்கிரஸ் கட்சியை, நம்முடன் சுமுகமாகக் கொண்டு செல்ல வேண்டும். சீட் பேரத்தில் முன்னுக்குப் பின் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம். அதேநேரம், காங்கிரஸ் கட்சியும் தங்கள் பலத்துக்கு ஏற்ப தி.மு.க ஒரு பெரிய கட்சி என்பதை மதித்துச் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக வைகோ இருப்பது நல்லது. மற்ற கட்சிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை' எனப் பேசியிருக்கிறார். 

கனிமொழியின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ``சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழ்நாட்டை ஒன்றாகப் பார்க்காமல், சமூகரீதியாகவும் வாக்குரீதியாகவும் அலசிப் பார்ப்பது கனிமொழியின் வழக்கம். அந்த அடிப்படையில்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகிறார். கருணாநிதி இல்லாத சூழலில், வைகோ இந்த அணியில் இருப்பது நல்லது என நினைக்கிறார் கனிமொழி. அவரது கருத்துக்களுக்கு ஸ்டாலினும் செவிசாய்த்து வருகிறார்" என்றார்.