Published:Updated:

உங்க அறிவோ அறிவு..! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கலாய்த்த ராமதாஸ்

மலையரசு
உங்க அறிவோ அறிவு..! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கலாய்த்த ராமதாஸ்
உங்க அறிவோ அறிவு..! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கலாய்த்த ராமதாஸ்

'விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நடவேண்டும்' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைக் கலாய்த்துள்ளார், பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. புயலால் எந்த அளவுக்கு தென்னை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்ததோ, அந்த அளவுக்கு அந்தப் பகுதிகளில் இருந்த மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால், மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தவித்துவருகின்றனர். இரவு பகல் பாராமல் மின்கம்பங்களைச் சீர்செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயலினால் இதுவரை 1,09,000 மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அவற்றில், பாதிக்கும்  மேற்பட்ட மின் கம்பங்கள் சீர்செய்யப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், மின்சாரம் விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று நடைபெற்றது. மீட்புப் பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டனர். அப்போது, மாலை 6 மணிக்குள் வேதாரண்யம் டவுனில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``டெக்னாலஜி மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்க வேண்டும்'' எனக் கூறி அதிரவைத்தார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உடனிருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உடனடியாக, ``அது சாத்தியம் கிடையாது" என மறுத்தார். ``வெளிநாட்டில், நடுக்கடலில் பாலம் கட்டுகிறார்கள், கடலுக்கு அடியில் நகரத்தையே உருவாக்குகிறார்கள். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா?'' என அவரிடம் எதிர்க்கேள்வி எழுப்பினார் அமைச்சர் சீனிவாசன். அவரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சை கலாய்த்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராமதாஸ், ``அய்யோ... அமைச்சர் சீனிவாசனின் அறிவு மெய்சிலிர்க்கவைக்கிறது. நல்லவேளை, சென்னையில் புயல் தாக்கியிருந்தால் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தரைக்கடியில் உள்ள மின்கம்பிகளைச் சரிசெய்யும்படி கூறியிருப்பாரோ" என்று கூறி கலாய்த்துள்ளார்.