Published:Updated:

அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!

அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!

அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!

சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச் சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பல மாவட்டங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தன; நடக்கின்றன. இந்த நிலையில், சாலைகளை அமைப்பதற்கான கருங்கற்களின் தேவைக்காக ஒரு கிராமப்பகுதியையே அழிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘‘விவசாயம் செய்யப்போறதா பொய் சொல்லி எங்க நிலத்தையெல்லாம் வாங்கப் பார்த்தாங்க. நிலத்தைக் கொடுக்க மறுத்துட்டோம். எங்களுக்குள்ளே கலகத்தை உண்டாக்கி, கொஞ்சம் கொஞ்சமா நிலங்களை வாங்குறாங்க. நெல் பயிரிட்டிருந்த என் நிலத்தை இரவோடு இரவா சேதப்படுத்திட்டாங்க. நிலத்தைத் தோண்டி உள்ளே இருக்குற கற்களை சாம்பிளுக்காக வெட்டி எடுத்துட்டுப் போயிருக்காங்க. போலீஸ்ல புகார் கொடுத்தா, அவங்க எங்க மேலயே நடவடிக்கை எடுப்போம்னு மிரட்டுறாங்க. எங்க இடத்தைக் காப்பாத்த எங்க உயிரையே கொடுக்கவும் தயங்க மாட்டோம்” என ஒரு பிடி மண்ணைக் கையில் அள்ளியபடி ஆவேசப்பட்டார் மலையப்ப நகரின் ஊர் பெரியவர் ஜமமந்தி.

அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ளது மலையப்ப நகர். புதிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான கற்களை இங்கே வெட்டியெடுத்து, இதே பகுதியில் கிரஷர்கள் அமைத்து ஜல்லியாக உடைப்பதற்கு முயற்சிகள் நடக்கிறது. மலையப்ப நகரில் நாடோடியின மக்கள் நீண்டகாலமாக வசித்து வருகிறார்கள். அவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் கற்களை எடுப்பதுதான் திட்டம். இதனால், அங்குள்ள மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

‘‘சுதந்திரம் கிடைச்ச பிறகு நாங்க ஊர் ஊராச் சுத்தக் கூடாது... ஒரே இடத்தில் நிலையாக இருக்கணும்னு, 1957-ல் அப்போதை திருச்சி கலெக்டர் மலையப்பன் சார்தான் ஒரு முயற்சி செஞ்சார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூணு சென்ட் இடமும் விவசாயம் செஞ்சு பிழைச்சுக்க ரெண்டு ஏக்கர் நிலமும் 30 குடும்பங்களுக்கு வழங்கினார். எங்க வாழ்க்கையை மாத்தின சாமியின் பெயரைத்தான் எங்க கிராமத்துக்கு வெச்சிருக்கோம். எங்க பிள்ளைங்க அடுத்தகட்டத்துக்குப் போய்க்கிட்டிருக்க சூழல்ல, எங்களை மீண்டும் நாடோடியா ஆக்கப் பாக்குறாங்க” என்று குமுறுகிறார்கள் மலையப்ப நகர் மக்கள்.

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் தலைவர் காரை சுப்ரமணியிடம் பேசினோம். “குஜராத்தைச் சேர்ந்தது, படேல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம். பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவின் நண்பருக்குச் சொந்தமான நிறுவனம்னு சொல்றாங்க. சென்னை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பிலிருந்து தஞ்சாவூர் வரைக்கும் புது நெடுஞ்சாலை அமைக்கும் பணியை இந்த நிறுவனம்தான் செய்யுது. இதற்காக, இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்க 32 ஏக்கருக்கு மேல் நிலங்களை எங்கள் இன மக்களிடம் மிரட்டி வாங்கியிருக்காங்க. எனக்குச் சொந்தமான நிலத்தையும் கேட்டு மிரட்டினாங்க. நான் கொடுக்கலை. அவர்களாகவே என் நிலத்தை எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க. அப்போ நான் ஊர்ல இல்லை. இடத்தை அளக்கவும், கிரஷர் அமைக்கவும், லாரிகள்ல இயந்திரங்களை ஏத்திட்டு வந்திருக்காங்க. அதைப் பார்த்துட்டு எங்க மக்கள் அமைதியா மறியலில் ஈடுபட்டு, என்கிட்ட தகவல் சொன்னாங்க. ஆனால், பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியதாக, என்மீதும் எங்கள் குடும்பத்தார்மீதும் போலீஸார் வழக்கு போட்டிருக்காங்க. நான் இந்த ஊர்லே இல்லாதப்போ, நான் எப்படி சேதம் ஏற்படுத்த முடியும்னு கேட்டேன். ‘மேலிடத்து பிரஷர்’னு சொல்றாங்க. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் மனுக்கொடுக்கப் போனோம். அவங்க, மனுவை வாங்காம வேகமாகப் போய் கார்ல ஏறிட்டாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!

‘இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்கக் கூடாது’னு பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிட்டோம். போராட்டமும் நடத்தியிருக்கோம்.  ‘இந்த நிறுவனம் அமித் ஷாவுக்கு நெருக்கமான ஒருத்தருக்குச் சொந்தம். அவங்களை எதிர்க்க நினைச்சா நீங்க காணாமப் போய்டுவீங்க’னு அ.தி.மு.க-காரங்க மிரட்டுறாங்க. தி.மு.க-வினரும் இதேபோல பேசறாங்க. எங்க உயிரே போனாலும் எங்கள் நிலத்தைத் தரமாட்டோம்” என்றார் உறுதிபட.

இந்தத் திட்டம் பற்றி விசாரித்தபோது, ‘‘குஜராத்தைச் சேர்ந்த ‘படேல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், இப்போது சேத்தியாதோப்பு- தஞ்சாவூர் சாலைக்காக இங்கே குவாரி அமைக்க உள்ளனர். இதேபோல இன்னும் ஆறு இடங்களில் கல்குவாரிகளை அமைக்க உள்ளனர். இதற்காகத்தான், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையப்ப நகர் உள்ளிட்ட இடங்களைத் தேர்வுசெய்துள்ளனர். சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை அமைக்கத் தேவையான ஜல்லியில் ஒருபகுதியும் இங்கிருந்து எடுக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் நிலங்களை வாங்கும் பொறுப்பு அ.தி.மு.க-வின் திருச்சி எம்.பி-யான குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

அமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் பேசினோம். ‘‘இந்த மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் கிரஷர் மற்றும் கல்குவாரிகளின் உரிமங்களை ரத்துசெய்துவிட்டோம். உரிமக் காலம் முடிந்து புதுப்பிக்க வரும் அனைத்து குவாரி உரிமங்களையும்கூட ரத்துசெய்து வருகிறோம். என்னிடம் புகார் கொடுக்கச் சொல்லுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன். மக்கள் வசிக்கும் பகுதிகளில் குவாரி வராது’’ என்றார்.

‘‘நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. படேல் நிறுவனத்துக்கு எனக்கும் சம்பந்தமே இல்லை. மக்களுக்கு எதிரான வேலைகளை எப்போதும் செய்ய மாட்டேன்’’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் குமார் எம்.பி.

நெடுஞ்சாலைகளால் மக்களின் நிம்மதியான வாழ்வு பறிபோகக்கூடாது.

- எம்.திலீபன்
படங்கள்: தே.தீட்ஷீத்