Published:Updated:

எதற்கும் அச்சப்படாத எதிர்குரல்!

எதற்கும் அச்சப்படாத எதிர்குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதற்கும் அச்சப்படாத எதிர்குரல்!

எதற்கும் அச்சப்படாத எதிர்குரல்!

து 2008-ம் ஆண்டு. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து முரணால் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கிக்கொண்டது. அப்போது சபாநாயகராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியை பதவியிலிருந்து விலகச் சொன்னது, அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மட்டுமின்றி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென அவரைக் கேட்டுக்கொண்டது. ஆனால், சோம்நாத் சட்டர்ஜி மறுத்தார். அதற்கு அவர் கூறிய காரணம்... ‘‘சபாநாயகர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.’’ ஜோதிபாசு பேச்சை அவர் கேட்காத ஒரே தருணம் அதுதான்.

எதற்கும் அச்சப்படாத எதிர்குரல்!

அதன் விளைவாக, சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து சட்டர்ஜி நடந்திருக்கலாம். ஆனால், கட்சியின் சட்டம் அதைவிட முக்கியமானது’’ என்றது மார்க்சிஸ்ட் கட்சி. 40 ஆண்டுக்காலம் தான் நேசித்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தன் வாழ்வின் மிகக் கடினமான தருணம் எனக் குறிப்பிட்ட சோம்நாத், அதன்பிறகு அரசியலிலிருந்தே ஓய்வுபெற்றார். தேர்தல்களில் போட்டியிட மறுத்தார். 

சோம்நாத்தின் தந்தை நிர்மல் சந்திர சட்டர்ஜி, இந்து மகாசபையின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவர். அதனால், தினம் தவறாமல் பூஜை புனஸ்காரங்களைச் செய்து வளர்ந்தவர் சோம்நாத். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அப்போதைய பிரதமர் நேரு தடை செய்தபோது, கம்யூனிஸ்ட்களுக்காக வாதாட களத்தில் குதித்தார் சோம்நாத்தின் தந்தை. அப்போது ஜோதிபாசுவுடன் ஏற்பட்ட பழக்கம், சோம்நாத்தையும் கம்யூனிஸ்ட்டாக மாற்றியது. 1968-ல் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய சோம்நாத், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த வழக்கறிஞர். கட்சியில் இருந்த நாற்பதாண்டு காலம் எதற்காகவும் தன்னைச் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார்.

பர்தமான் தொகுதியில் வெற்றிபெற்ற அவரின் அப்பா 1971-ல் இறந்துபோன சமயத்தில் அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற சோம்நாத் சாட்டர்ஜி, ஒன்பது முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகமுறை எம்.பி-யாக இருந்தவரும் அவர்தான். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல தேசியத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். ஜமீன்தார் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரால் கம்யூனிஸ்டாக இருக்க முடிந்தது.

சிறுநீரகக் கோளாறு காரணமாக, மருத்துவமனையில் ஆகஸ்ட் 8-ம் தேதி அனுமதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 13-ம் தேதி மறைந்தார். 89 வயதில் காலமான சோம்நாத் சாட்டர்ஜி பற்றி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘நாடாளுமன்ற விவாதங்களில், தன் தரப்பு நியாயங்களை எவ்விதத் தயக்கமுமின்றி மிக வலுவாக எடுத்துவைத்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. எமர்ஜென்சி காலகட்டத்தில் யாருக்கும் அச்சப்படாமல் அதன் போக்கைக் கடுமையாக எதிர்த்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் அவர் பதிவுசெய்த எதிர்ப்புக் குரலை யாரும் மறந்துவிட முடியாது. எம்.பி-க்கள் வெளியூர்களுக்குச் சென்றால் நட்சத்திர ஹோட்டல்களில் தங்காமல் அரசினர் விருந்தினர் மாளிகையில்தான் தங்க வேண்டுமெனக் கட்டளையிட்டவர். யதேச்சாதிகார போக்கை எப்போதும் கடுமையாக எதிர்த்த சோம்நாத் சாட்டர்ஜி, மக்கள் போராட்டங்களில் முன் நின்றார். அவரைப் பற்றி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அவர் இறந்துபோன துயரம் என்னை அழுத்துகிறது” என்றார் வருத்தத்துடன்.

- தமிழ்ப்பிரபா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz