வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:18:40 (30/11/2018)

ஒரத்தநாடு விவசாயி அளித்த பதிலால் கண்கலங்கிய கமல்ஹாசன்!

``மக்கள் தலைக்கு மேலே கூரையே இல்லாமல் இருக்கிறார்கள். புயலின் வேகம் அளவுக்கு அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. அரசு  செயல்பாடுகள் இல்லாமல் துருப்பிடித்து இருக்கிறது. போகும் வழியில் எனக்கு வழிவிட்ட மக்கள் அரசு மீது கோபப்பட்டனர். அரசு செய்யாததைத் தனி மனிதர்கள் செய்துவிட்டனர்'' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது முறையாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டதோடு, மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் நிவாரணப் பொருள்களை வழங்கியவர், பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் கிராமத்துக்கு வந்தார். அங்கு வீடுகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். முன்னதாக அதே பகுதியில் சாய்ந்துகிடந்த தென்னை மரங்களைப் பார்வையிட்டதோடு, அந்தத் தோப்பின் உரிமையாளரிடம் `இது எத்தனை வருட மரம்' எனக் கேட்டார். அதற்கு அவர், `25 வருடத்து மரங்கள். சாய்ந்துகிடக்கும் இந்தத் தென்னைகள் என் குடும்பத்துக்கே பெரும் வாழ்வாதாரமாக இருந்தது. அவை எல்லாம் சாய்ந்து கிடக்கின்றன' இனி எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் நிற்கிறோம்' என்றார். இதைக் கேட்ட கமல் கண் கலங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசும் கமல்ஹாசன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ``நான் வரும் வழியில் எல்லாம் மக்கள் என்னை சந்தித்து அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை எனப் புகார் கூறுகின்றனர். மக்கள் தலைக்கு மேலே கூரையே இல்லாமல் இருக்கிறார்கள். புயலின் வேகம் அளவுக்கு அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. அரசு  செயல்பாடுகள் இல்லாமல் துருப்பிடித்து இருக்கிறது. போகும் வழியில் எனக்கு வழிவிட்ட மக்கள், அரசு மீது கோபப்பட்டனர். அரசு செய்யாததைத்  தனி மனிதர்கள் செய்துவிட்டனர். வசதியாக இருந்த குடும்பங்கள் எல்லாம் ஒரே இரவில் ஏழைகளாகிவிட்டன. இந்தப் பாதிப்பை உடனே தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.

நான் இதற்காக, என் நடிகர் நண்பர்களான அமிதாப் பச்சன், அமீர் கான் உள்ளிட்ட நடிகர்களிடம் பேசி பேரிடராக அறிவிப்பதற்கு வலியுறுத்த வேண்டும் எனச் சொன்னேன். குஜராத்தில் பூகம்பம் வந்தால்கூட என் நாட்டில் நடந்ததாகவே நான் நினைத்து உதவுவேன். 5 வருடம் ஆட்சியில் இருப்பவர்கள் இதில் அரசியல் செய்கிறார்கள். மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன் எனச் சொல்கிறார்கள். அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை அன்பாக அணுக வேண்டும்'' என்று கூறினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க