Published:Updated:

சுயாட்சியின் சுடரொளி

சுயாட்சியின் சுடரொளி
பிரீமியம் ஸ்டோரி
சுயாட்சியின் சுடரொளி

காலத்தின் குரல்ஆழி செந்தில்நாதன், படங்கள்: சு.குமரேசன்

சுயாட்சியின் சுடரொளி

காலத்தின் குரல்ஆழி செந்தில்நாதன், படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
சுயாட்சியின் சுடரொளி
பிரீமியம் ஸ்டோரி
சுயாட்சியின் சுடரொளி
சுயாட்சியின் சுடரொளி

லைஞர் மு.கருணாநிதியின் சாதனைகள் என்றும் பெருமைகள் என்றும் எவ்வளவோ கூறப்படுகின்றன. அவரது மக்கள் திட்டங்களும் தமிழ்நாட்டின் உயர்வுக்கு ஆற்றிய பங்குகளும் சாதனைகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவரது எழுத்தும் பேச்சும் நினைவாற்றலும் அவரது பெருமைக்கு அணி சேர்க்கின்றன.

ஆனால், ஒரு தலைவரின் செயல்பாடுகளில் எந்தெந்தச் செயல்பாடுகள் நெடுங்கால நோக்கில் செய்யப்பட்ட முக்கியமான நகர்வுகள் எனக் கருதப்படுகின்றனவோ, அந்தப் பங்களிப்புகள்தான் அந்தத் தலைவரின் அரசியல் வாழ்வை மதிப்பிடவும் உதவுகின்றன. அந்த வகையில் கருணாநிதியின் அரசியல் பங்களிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று, மாநில சுயாட்சி கொள்கை. அரசியல் சாசன ரீதியில் ஏப்ரல் 16, 1974-ல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவரது தலைமையிலான அரசு, மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின் வரலாறு, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் மிக முக்கியமான - ஆனால் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத - வரலாறாகும்.

தி.மு.க 60-களின் தொடக்கத்தில் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகு, தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக அறிஞர் அண்ணாவால்  முன்மொழியப்பட்ட கொள்கைதான் ‘மாநில சுயாட்சி’. அந்தக் கோரிக்கையின் அரசியல் அடிப்படையை அண்ணா முன்மொழிந்தார் என்றால், அதற்கான சட்டபூர்வ வடிவத்தை உருவாக்கும் பணி அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் மீதுதான் விழுந்தது.

1965 செப்டம்பர் 26 தேதியிட்ட ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ அண்ணாவின் மிக முக்கியமானப் பேட்டி ஒன்றைத் தாங்கிவந்தது. மொழிப்போருக்குப் பிந்தைய தமிழ்நாட்டு அரசியல்களம் சூடேறிக் கிடக்க, அன்றைய ஊடகங்களின் பார்வை அண்ணாவின் மீது இருந்ததில் ஆச்சர்யமில்லை. “இன்று தி.மு.க-வின் முக்கியமான கொள்கைகள் என்ன?” என்று வீக்லி எழுப்பிய கேள்விக்கு அண்ணா பதில் கூறுகிறார், “ 1. நடைமுறையில் உண்மையான கூட்டாட்சியாக இருக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்துக்கு மறுவடிவம் அளித்தல். 2.மாநிலங்களுக்கு முற்றுமுழுமையான சுயாட்சி.”

சுயாட்சியின் சுடரொளி

1967-ல் தி.மு.க தேர்தல் அறிக்கையும் அதையே வழிமொழிந்தது. ஆட்சிக்கு வந்த தி.மு.க, பின்பு அது தொடர்பான பூர்வாங்க வேலைகளைத் தொடங்குவதற்குள் அண்ணாவின் இறுதிநாள்கள் நெருங்கிவிட்டன. சுயாட்சி/கூட்டாட்சி தொடர்பான தனது கருத்துகளுக்கு ஆதரவு கூடிவருகிறது என்று கூறிய அண்ணா, அது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று 1969-ல் ‘காஞ்சி’ இதழில் எழுதியது அவர் தன் தம்பிகளுக்கு எழுதிய கடைசிக் கடிதங்களில் ஒன்று. இந்த வேண்டுகோளை அண்ணாவின் உயில் என்பார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, உடனடியாக அதற்கான செயல்களில் இறங்கினார். முதல்வர் பொறுப்பேற்றவுடன் அவர் மேற்கொண்ட முதல் டெல்லி பயணத்திலேயே, மத்திய மாநில உறவுகள் விவகாரத்தை ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைக்கப்போவதாகக் கூறினார். சொன்னபடியே டாக்டர் பி.வி.ராஜமன்னாரைத் தலைவராகவும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியாரை பி.சந்திரா ரெட்டியை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைத்தார். அண்ணாவின் உயில், அவரது மறைவு, கலைஞர் முதல்வரானது, அவரது டெல்லி பயணம், ராஜமன்னார் குழு அமைத்தது எல்லாமே ஒரே ஆண்டில் - 1969-ல் - நடந்துமுடிந்தது என்றால், இந்த விவகாரத்தில் கலைஞரின் வேகத்தைப் பார்த்து ஆச்சர்யப்படத்தான் முடிகிறது.

மறு ஆண்டில், பிப்ரவரி 22, 1970-ல், திருச்சி மாவட்ட மாநாட்டில் கருணாநிதி, தி.மு.க-வின் புகழ்பெற்ற ஐம்பெரும் முழக்கங்களை அறிவிக்கிறார். அதில் ஒன்றுதான், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’. அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கியது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை,  ‘நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அதிகாரங்களை மட்டுமே மத்திய அரசு தன்வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் மற்ற எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்’ என்றும் கோரியது.

1971-ல் வெற்றி பெற்ற தி.மு.க-வின் அந்த ஆட்சிக்காலம், மாநில சுயாட்சிக் கோட்பாட்டின் இளம்பருவம் என்றே கூறலாம். 1969-ல் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு, 1971-ல் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. நாட்டின் சட்டமியற்றும் துறையிலும் நிறைவேற்றுகை மற்றும் நீதித்துறைகளிலும் அரசியல் சாசன ரீதியில் செய்ய வேண்டிய திருத்தங்கள் என்ன என்பதை அந்த அறிக்கை பட்டியலிட்டது. மாநில சுயாட்சிக் கோரிக்கையின் அரசியல் வரம்புக்குள், அதே சமயம், ‘வரம்பு மீறாமல்’ இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மட்டுமே பெரிதும் முன்வைத்த அறிக்கைதான் ராஜமன்னார் குழு அறிக்கை. அண்ணாவின் மாநில சுயாட்சிக் கோரிக்கையின் சுயநிர்ணய ஆத்மா அதில் இல்லையென்றாலும், இந்தியாவில் கூட்டாட்சி வாதத்துக்கான அரசியல் இயக்கத்தில் இதை ஒரு தொடக்கம் என்று கூறமுடியும். அந்த அறிக்கையை உடனடியாகக் கலைஞர் அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார். இதைப் பரிசீலிப்போம் என்று மையமாகச் சொன்ன இந்திரா அரசு, பிறகு அதை ஊறப்போட்டுவிட்டது.

கலைஞர் தன்னுடைய அறிவுஜீவிக் குழாமிலிருந்த முரசொலி மாறன், இரா.செழியன் ஆகியோரிடம் ‘ராஜமன்னார் குழு அறிக்கை’யைப் பரிசீலித்து, அரசியல் ரீதியில் அதை அடுத்தக்கட்டத்துக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்து பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். செழியன்-மாறன் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 1974 ஏப்ரல் 16-ல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தி.மு.க அரசு அந்தப் புகழ்பெற்றத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘மாநில சுயாட்சி’,  ‘ராஜமன்னார் குழு’ ஆகியவற்றின் மீது பேரவையின் நிலைப்பாடாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுயாட்சியின் சுடரொளி

‘பல்வேறு மொழிகளும் நாகரிகங்களும் கலாசாரங்களும் இணைந்து வாழும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவும் மக்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ள மாநில அரசுகள், தடையின்றித் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிசெய்யும் வகையில், முழுமையான மாநில சுயாட்சிகொண்ட உண்மையான கூட்டாட்சி அமைப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய  உடனடியாக ஆவன செய்ய வேண்டும்’ எனத் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தீர்மானம் வலியுறுத்தியது. ‘‘இந்திய அரசியல் அரங்கில் ஒரு புதிய சுடர்விளக்கை நாங்கள் ஏற்றுகிறோம்’’ என்று தீர்மானத்தை முன்மொழிகையில் கருணாநிதி, ‘‘இந்தச் சுடரொளியை அணையாமல் காக்கவும் அந்த ஒளியை மேலும் சுடரச் செய்யவும் இந்தியாவின் அரசியல் மேதைகள் உதவ வேண்டும்’’ என்றும் வேண்டுகோள் விடுத்தார். அன்று அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக தி.மு.க, முஸ்லீம் லீக், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் ஆகியவை வாக்களித்தன. அ.தி.மு.க, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் (ஆர்) ஆகியவை எதிர்த்து வாக்களித்தன. ஆதரித்து 161 பேரும் எதிர்த்து 23 பேரும் வாக்களிக்க, தீர்மானம் நிறைவேறியது.

மாநில சுயாட்சி அறிஞரான கு.ச.ஆனந்தம் எழுதிய ‘மலர்க, மாநில சுயாட்சி’ என்ற நூலுக்கு 1975-ல் அணிந்துரை எழுதிய கருணாநிதி, அந்தத் தீர்மானத்தைப் பற்றிக் கூறும்போது, “1974-ம் ஆண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நான் முன்மொழிந்த நாளும், அந்தத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பெற்ற நாளும் தமிழ் மாநில வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய நாட்டு வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க நாள்கள் என்று நான் பெருமைப்படுகிறேன்” என்று எழுதினார்.

70-களின் தொடக்கம் முதல், இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் சுயாட்சிக் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. 1973-ல் பஞ்சாபில் நிறைவேற்றப்பட்ட ‘அனந்தபூர் சாகிப் தீர்மானம்’ அகாலி தளத்தின் முக்கிய முயற்சி. அதன் பிறகு மேற்கு வங்காளம், அசாம், ஆந்திரப் பிரதேசம் என பல மாநிலங்களில் இக்குரல்கள் எழுப்பப்பட்டன. 80-கள் முதல், மத்திய அரசும்கூட சர்காரியா கமிஷன் உட்பட பல நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்களையும் அமைத்து இவ்விவகாரத்தை அலசியிருக்கிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னோடி என்றால், அது ‘ராஜமன்னார் குழு அறிக்கை’யும் தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானமும்தான் என்பதில் ஐயமில்லை.

கலைஞரின் ஆட்சிகளிலேயே மிகவும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நடைபெற்ற ஆட்சிக்காலம் அது. ஆனால், பிற்காலத்தில் இந்த முயற்சிகள் மெள்ள மெள்ள சாரமிழக்கவும் நீர்த்துப்போகவும் செய்யப்பட்டன. எண்பதுகளுக்குப் பிறகு, மாநில சுயாட்சி அரசியல் தி.மு.க-வின் பிரதான அரசியலாக இல்லை. நேருவின் மகளை வரவேற்ற பிறகு, அ.தி.மு.க - தி.மு.க என்கிற நிரந்தர இருமை உருவான பிறகு, கலைஞரின் பிரதான முன்னுரிமைகள் மாறிப்போய்விட்டன. அதன் பிறகு, மாநில சுயாட்சிக் கோரிக்கை வெறும் முழக்கமாகவும் முக்கியமான சமயங்களில் மட்டும் தலைகாட்டும் விவகாரமாகவும் ஆகிவிட்டது.

தனிநாடு கோரிக்கை, மாநில சுயாட்சியாக இறங்கியது; மாநில சுயாட்சிக் கோரிக்கை, மாநில உரிமைகள் பிரச்னையாக நீர்த்துப்போனது. கூட்டாட்சி வியூகத்துக்கான இடத்தை, கூட்டணி ஆட்சி வியூகங்கள் பிடித்துக்கொண்டன. 2009-ல் ஈழ இனப்படுகொலைத் தருணம் உள்பட தி.மு.க-வுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளும் சறுக்கல்களும் சுயாட்சிக் கோரிக்கைகளில் அவர்கள் செய்த சமரசங்களின் விளைவுகள்தான். அவசரநிலை காலத்திலேயே இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுயாட்சிக் குரலை எழுப்பிய தி.மு.க, தங்களால் உருவான கூட்டணி ஆட்சிக் காலங்களில் உரிய முயற்சிகளை எடுக்காமல் போனதை, சந்தர்ப்பவாதம் என்றும் வீழ்ச்சி என்றும்தானே வரலாறு குறித்துவைக்கும்?

ஆனால், இன்னும்கூட இந்தியாவில் மாநில சுயாட்சிக் கோரிக்கை வைப்பவர்கள் அனைவருக்குமே கருணாநிதி ஒரு முக்கியமான வழிகாட்டியாகவே இருக்கிறார். தமிழ்நாட்டு அரசாங்கத்தின் 1974 தீர்மானம் என்பது தமிழ்நாட்டின் சட்டபூர்வக் குரல் ஆகும். அன்றைய மாநில சுயாட்சிக் கோரிக்கையைத் தாண்டி, இன்றைய தமிழ்நாடு கடந்துசென்றுவிட்டது என்றாலும், அந்தச் சட்டபூர்வ குரல் என்பது, நமக்கு ஓர் அரசியல்சாசன ஆயுதமாகவும் இருக்கிறது. இன உரிமைக்காகப் போராடும் களப்போராளி ஒருவரின் அம்பறாத்தூணியில் அந்த அம்பும் இருக்கும். அந்த அம்பு கலைஞரால் உருவாக்கப்பட்டது என்பதால், அவரது பெயரும் நினைக்கப்படும்.

(கட்டுரைக்கான முக்கிய விவரங்கள் பேராசிரியர் அ.ராமசாமியின் ‘DMK: Rise and Contribution’ மற்றும் கு.ச.ஆனந்தனின் ‘மலர்க, மாநில சுயாட்சி’ ஆகிய நூல்களிலிருந்து பெறப்பட்டவை.)