Published:Updated:

தந்தை பெரியாரின் மாணவர்

தந்தை பெரியாரின் மாணவர்

காலத்தின் குரல்அ.அருள்மொழி

தந்தை பெரியாரின் மாணவர்

காலத்தின் குரல்அ.அருள்மொழி

Published:Updated:
தந்தை பெரியாரின் மாணவர்
தந்தை பெரியாரின் மாணவர்

வெற்றிகளைக் கண்ட அளவுக்கு ஈடாக எதிர்ப்புகளையும், துரோகங்களையும், அவதூறுகளையும், பழிசொற்களையும் எதிர்கொண்டவர் கலைஞர். அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டதுபோலவே, இயக்கத்தின் முன்னோடிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, விவாதம்செய்து முடிவெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருந்த ஜனநாயகப் பண்பு கலைஞரிடம் இருந்தது. அது, அவரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த முக்கியப் பண்புகளில் ஒன்று.

எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி, ஒருவரால் எப்படி இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிந்தது? இளம்வயதில் கிடைக்கும் சரியான வாய்ப்புகளை விருப்பத்துடன் கற்றுக்கொண்டால், அது பிற்காலத்தில் நெருக்கடியான வேலைகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என்பதை, கலைஞரின் வாழ்க்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள முடியும். கலைஞர் தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்வதில் உள்ள ஒழுங்கையும் நேர்த்தியையும் அவரைச் சந்தித்த ஒவ்வொருவரும் வியந்து குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பழக்கத்தை இவர் எப்படி கற்றுக்கொண்டார்? ‘ஈரோடு குருகுலத்தில் தந்தை பெரியாரிடம் கற்றுக்கொண்டேன்’ என்று அவரே எழுதுகிறார்.

‘அன்றாடம் காலை 8 மணிக்கெல்லாம் பெரியார் வீட்டில் அவர் முன்னால் அமர்ந்து, அன்றைய தபால்களை அவர் பார்த்து, அது பற்றிய விளக்கங்களை அவரிடம் கேட்டு, அதனைச் செயல்படுத்துகிற வழி வகைகளை நாங்கள் செய்திட வேண்டும். அதன் பிறகு, அலுவலக வேலை. மாலையில் பெரியார் அலுவலகம் வருவார். ‘குடி அரசு’ இதழுக்கான தலையங்கத்தை எழுதிவிட்டு, அதனை எங்களிடம் படித்துக்காட்டிவிட்டு, அலுவலகத்தைவிட்டுப் புறப்படுவார்.

ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக்கொண்டு சமுதாய சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். எங்களுக்குத் தூக்கம் வருவதைத் தெரிந்துகொண்ட பிறகே அவர் தூங்கக் கிளம்புவார்.

தந்தை பெரியாரின் மாணவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியாரிடம் நான் கற்றுக்கொண்டது எவ்வளவோ! அவற்றில் பின்பற்றுவதும் எவ்வளவோ! அதிலே ஒன்றுதான் தந்தை பெரியார் எவ்வாறு இரவில் எங்களையெல்லாம் அழைத்து அன்றாட அரசியல் நிலைகளைப் பற்றி கலந்துரையாடுவாரோ அதுபோலவேதான், நானும் இன்றளவும் இரவு நேரங்களில் கழக முன்னனியினரோடு வீட்டிலோ, அறிவாலயத்திலோ உரையாடுவதை தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறேன்.’

பழக்கவழக்கங்களில் மட்டுமல்ல, தந்தை பெரியாரின் சமுதாயக் கவலைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கும் அக்கறையையும் உள்வாங்கிய அந்த இளம் கலைஞரின் உள்ளம்தான் ஆட்சியும் அரசும் இயந்திரமும் கிடைத்தவுடன் அந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீவிரமாக இயங்கியது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி (பின்னர் 20,000 ரூபாயாக மாறியது) அளித்த அரசு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருக்கிறதா என்று தெரியவில்லை.முதுகலைப் பட்டப்படிப்பு வரை தமிழ்நாட்டுப் பெண்கள் இலவசக் கல்வி பெற்றதன் பயன்தான், இன்று லட்சக்கணக்கான பெண்கள் முதுகலைப் பட்டதாரிகளாக மாறியதன் அடிப்படை.

1920-களில் கள்ளுக்கடை மறியலுக்குத் தலைமையேற்ற ஈ.வெ.ரா.நாகம்மை பெயரில் அந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டது. கிராமப்புற ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் தொகை 20,000 ரூபாய் என்று அறிவித்தால், அது வெறும் உதவி. ஆனால், அதற்கு முன்னிருத்துணையாக அந்தப் பெண்கள் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டதுதான் பெண் கல்விக்கான முன்னுரிமை. தேவதாசி முறைக் கொடுமையிலிருந்து பெண்களை மீட்கப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் என்ற வீராங்கனையின் பெயரில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது கூடுதல் பொருள்பெறுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடம் ஒதுக்கியதை வேறு சில மாநிலங்களிலும் நாம் பார்க்கலாம். ஆனால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதைச் செய்தவர் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்தான்.

இனி சமூகத் தடைகளைத் தகர்த்து முன்னேறும் பெண்களின் சாதனைகளிலும் மாற்றுத் திறனாளிகள், திருநங்கை/ திருநம்பியர் அடையும் வாழ்வுரிமையிலும், சிறுபான்மைச் சமூக மக்களின் அச்சமற்ற வாழ்விலும், முதல் தலைமுறை பட்டதாரிகள், கிராமப்புற மாணவர்கள், நிலமற்ற ஆதிதிராவிடர் / பட்டியல் இன மக்கள்என விளிம்பு நிலை மனிதர்கள் உட்பட சமூகத்தில் உழைக்கும் பெருங்கூட்டம் பெறும் ஒவ்வொரு முன்னேற்ற நடவடிக்கையின் பின்னணியிலும் இருக்கப்போவது கலைஞரின் காலமே.

கலைஞர் என்ற அரசியல் தலைவர், இலக்கியவாதி, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், கோடான கோடி தமிழர்களின் நம்பிக்கையாக வாழ்ந்து சென்றுவிட்டார். உண்மையில் காலமாகிவிட்டார் என்ற சொல்லாட்சி அவருக்குத்தான் பொருந்தும். ஆம், அவர் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு நூற்றாண்டாக மாறிவிட்டார். இனி வரும் காலமெல்லாம் அவர் பெயர் சொல்லும்.