Published:Updated:

திராவிடப் பேராண்மை

திராவிடப் பேராண்மை

காலத்தின் குரல்

திராவிடப் பேராண்மை

காலத்தின் குரல்

Published:Updated:
திராவிடப் பேராண்மை
திராவிடப் பேராண்மை

ழுத்தையும் பேச்சையும் முழுநேரத் தொழிலாகக்கொண்டவர்களால்கூட எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தைத் தொட்டவர் கலைஞர் மு.கருணாநிதி. இத்தனைக்கும் அவர் தனது தளமாக வரித்துக்கொண்டது இலக்கியமல்ல, அரசியல். அவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, அவர்போல ஒருவர் தமிழக அரசியல் களத்தில் தலையெடுக்கவில்லை. தலையெடுப் பதற்கான அறிகுறியும் தென்படவில்லை. தனித்துவமான ஆற்றல்களால், கழகத்தின் கடைநிலைத் தொண்டராக இருந்த அவர், தலைமைப் பொறுப்புவரை வந்தது அசாதாரணச் செயல். நன்றாகப் பேசத் தெரிந்தவர்க்கு எழுத வராது. அதேபோல, அழகழகாக மேடைகளில் சொற்பொழி வாற்றும் திறனுடையோர் எழுத்தில் மிளிர்வதில்லை. உதாரணமாக, ஓரிருவரைக் காட்டலாம். அவர்களும்கூட எழுத்தாளராகவோ இலக்கியவாதியாகவோ இருந்திருக்கிறார்களே அன்றி, அரசியல் தலைவராக அவதாரமெடுக்கவில்லை. அண்ணா ஒருவரே கலைஞருக்கு இணையாகப் பார்க்கப்பட வேண்டியவர்.  கலைஞர், தனது தலைவராகவும் வழிகாட்டியாகவும் அண்ணாவை ஏற்றுக்கொண்டதற்கு, கொள்கை ஒரு காரணமென்றால், அண்ணாவின் எழுத்தும் பேச்சும் மற்றொரு காரணமாயிருக்கலாம். இரண்டு பேரையும் ஈர்த்த பெரியார், திராவிடக் கொள்கையின் அவசியத்தையும் அவசரத்தையும் தமிழ் நிலத்திற்கு உணர்த்தியவர். ஆனால் பெரியார், எழுத்தையும் பேச்சையும் பிரதானமாகக் கொண்டவரில்லை.

எழுத்தினாலும் பேச்சினாலும் மக்களைக் கவர முடியும் என்பதை மிகச் சிறிய வயதிலேயே கலைஞர் உணர்ந்திருக்கிறார். தனது தந்தை முத்துவேலரின் வழியாக தமிழும் இலக்கியமும் அவருக்குப் பரிச்சயப்பட்டிருந்தாலும், தன்னை அவர் அண்ணாவின் தம்பியாக வெளிப்படுத்திக் கொள்வதில்தான் விருப்பமுற்றிருக்கிறார். காலத்தின் தேவையறிந்து தமிழை வசப்படுத்திக்கொண்டதில், கலைஞருக்கு நிகராக வேறு ஒருவரைச் சொல்வதற்கில்லை.  ‘ஏன் அண்ணா இல்லையா?’ எனக் கேட்கலாம். அண்ணாவைப் பொறுத்தவரை அரசியல், பொருளாதாரத் துறைகளில் முதுகலைப் பட்டம்பெற்றவர். அதுமட்டுமல்ல, வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்பை உடையவர். தன்னை ஓர் அரசியல் ஆளுமையாக உருவாக்கிக்கொள்வதற்கு முன்பாகவே, பேசவும் எழுதவும் தெரிந்த கல்வியாளர் என்னும் பெருமை அண்ணாவுக்குக் கிடைத்தது. ஆனால், கலைஞருக்கு அப்படியில்லை. பள்ளிக் கல்வியில் அதிக நாட்டமில்லாமல் இருந்த கலைஞர், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவே அத்தனை இலக்கியங்களையும் கற்றிருக்கிறார். கல்லூரிப் பேராசிரியர்களே கடினமென்று ஒதுக்கிவைக்கும் தொல்காப்பியத்திற்கு உரையெழுதியிருக்கிறார். தன்னைத் தானே செதுக்கிக்கொண்டவர் என்பதால், கூடுதல் தகுதியைக்கொண்டுவிடுகிறார். பாடசாலைகளில் கால்படாமலும் ஒருவர் முன்னேற முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் இருக்கிறார்.

ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற இலக்கியப் பற்று உதவுமென்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இயல்பிலேயே அவரிடமிருந்த எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மற்றவர்களைவிட, இவர் ஒரு படி மேல் என்பதை நிரூபித்திருக்கிறது. ‘அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமையைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது’ என்றோர் இடத்தில் எழுதியிருக்கிறார். இந்த வாக்கியத்தில் உள்ள கருத்தை எல்லோராலும் சொல்ல முடியும். ஆனால், ஓசை ஒழுங்குடன் ஒரு வார்த்தைக்கு இன்னொரு வார்த்தையை இயைபாகக் கொள்வதற்கு கவிதையுணர்வு வேண்டும். எழுதிவைத்து வாசித்தாலும், எதிர்க்கேள்வியை எழுப்பினாலும் அவரின் தனித்துவமான சொல்லாட்சிகள் அவரை யாரென்று காட்டிவிடும். காத்திரமான அரசியல் கூட்டங்களில்கூட, தனக்குள்ள தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

திராவிடப் பேராண்மை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதவைகள் மறுவாழ்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர் பேசிக் கொண்டிருக்கையில், கட்சித் தொண்டர் ஒருவர் எழுந்து, “தலைவா, விதவை என்ற சொல்லுக்கே பொட்டில்லை. இந்த நிலையில், விதவைகளின் நெற்றிக்கு எப்படிப் பொட்டிடுவது” எனக் கேட்கிறார். கலைஞர், சற்றும் தயங்காமல் மறுவிநாடியே அக்கேள்விக்கு பதிலளிக்கிறார், “ ஏன் தம்பி விதவை என்கிறாய், கைம்பெண் என்று தமிழில் சொல்லிப் பார். ஒரு பொட்டிற்கு இரண்டு பொட்டு வரும்” என்றிருக்கிறார். இது, ஏதோ மேடை சுவாரஸ்யத்துக்காக அவர் சொல்லி சமாளித்தது அல்ல. எது தமிழ்? எது சம்ஸ்கிருதம்? என்பதை உற்றுணர்ந்து கற்றதால் விளைந்தது. வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர் விளையாடத் தொடங்கினால், அதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். எதிரே இருப்பவரை விமர்சித்தால்கூட, அதில் ஒரு சிலேடையோ இலக்கியச் சொற்றொடரோ அவரே அறியாமல் வந்துவிழும்.

மொழியை லாகவமாகப் பயன்படுத்துவதில் ருசிகண்ட கலைஞர், “உங்களை மிகவும் கவர்ந்த இலக்கியப் பாத்திரம் எது?” என்ற கேள்விக்கு, “மணிமேகலையின் கையில் இருந்ததாகக் கூறப்படும் அட்சய பாத்திரம்” என்றிருக்கிறார். மணிமேகலையைப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படிச் சொல்லாமல், மணிமேகலையின் கையில் இருந்ததாகக் கூறப்படும் அட்சய பாத்திரம் என்றதுதான் அவருடையத் தமிழார்வம். மணிமேகலை கையில் இருந்த அட்சய பாத்திரம் என்றால், அப்படியொரு பாத்திரம் இருந்ததாகவும், தான் அதை நம்புவதாகவும் ஆகிவிடும் என்பதற்காக, ‘கூறப்படும்’ என்னும் சொல்லையும் இணைத்தே கூறியிருக்கிறார். சொற்களின் பொருள் அறிந்து பிரயோகிப்பது மட்டுமல்ல, அச்சொற்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் கணக்கிட்டே பதிலளித்திருக்கிறார்.  கேள்வி கேட்டவரே அதிசயத்துப்போகும் விதத்தில்தான் அவருடைய பதில்கள் அமைந்திருக்கும். சிந்தனைக்கும் ரசனைக்கும் உரியவற்றை உரையாடல்களின் இடையிடையே தெளிப்பது அவர் பாணி.

வலிந்து ஒன்றைச் சொல்லாமல், போகிறபோக்கில் புன்னகை இழையோட அவர் பேசும் அழகிற்கு ஈடாக ஒன்றில்லை. மற்ற தலைவர்களின் பதில்களைவிட, கலைஞரின் பதில்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாவதும் அதனால்தான்.
“கி.வீரமணியும் கலைஞரும் ஆத்திகராகிப் பல நாள்கள் ஆகிவிட்டன என்று ‘குமுதம்’ இதழ் கேலி செய்துள்ளதே?” என்ற கேள்விக்கு, “இரவில் கண்மலர்வதுதானே  குமுதம், அதனால் கறுப்புச்சட்டை அதன் கண்களுக்குத் தெரியாது” என்று அங்கதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆழ்ந்தும் அகன்றும் கற்ற தமிழை, அழகுபடுத்துவதே அவருக்கு வாடிக்கையான வேலையாக இருந்திருக்கிறது.

வாழ்வின் மிக நெருக்கடியான கட்டங்களை அவர் தாண்டி மேலே வருவதற்கு அடிப்படையாக இருந்தது தமிழ்தான். “தென்றலைத் தீண்டியதில்லை. தீயதைத் தாண்டியிருக்கிறேன்” என்பார். தீண்டுதல், தாண்டுதல் ஓரழகு என்றால், தீயதை, “தீ அதை” என்று பிரித்து பொருள்கொள்ளும்போது வேறோர்அர்த்த அழகு, சொற்களுக்குள் பொதிந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்கள், “அடுக்குத் தமிழால் ஆட்சியைப் பிடித்தார்கள்” என்பார்கள். ஒரு மொழியை முதன்மையான ஆயுதமாகக்கொண்டு ஆட்சியை அதிகாரத்தைக் கைப்பற்றுவது, உலக வரலாற்றில் வேறெங்கும் நடவாதது. இனத்தின் மீட்பும், இனத்தின் உரிமையும் அவ்வினம் பேசும் மொழியிலிருந்துதான் கிடைக்கும் என்கிற தெளிவை அண்ணாவும் கலைஞரும் பெற்றிருந்ததில் ஆச்சர்யமில்லை.

இன்றைக்கும் கலைஞரின் தமிழுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. அவர் வாக்கியங்களாக, உரையாடல்களாக வெளிப்படுத்தியவைதான் முழக்கங்களாக முன்வைக்கப்படுகின்றன. தமிழரின் அற நூலான திருக்குறளை, எளிய மக்களின் கைகளிலும் உதடுகளிலும் கொண்டுசேர்த்த பங்கு அவருடையது. பள்ளிக்கூடத்தையே தாண்டாத ஒருவர், ஆறு இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரை எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால், அதன் பின்னே இருக்கும் உழைப்பை அளவிடுவது எளிதான காரியமா என்ன? எட்டு கவிதை நூல்கள், பத்துக்கும் மேலான சமூக நாவல்கள், ஆறு சரித்திர நாவல்கள், தன் வரலாற்றுடன் தமிழக - திராவிட இயக்க வரலாற்றையும் சேர்த்துச் சொல்கிற, ‘நெஞ்சுக்கு நீதி’ என எத்தனையோ படைப்புகளை அவர் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பட்டங்களைப் பெற்ற பல பேர் தனக்குப் போட்டியாக இருக்கும்போது, அத்தனை பேரையும் கடந்த வசீகரத்தை அவருடையத் தமிழ் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இளங்கோவன் போன்ற மறுமலர்ச்சி வசனகர்த்தாக்கள் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், திரைத்துறையில் நுழைந்து தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.

எந்தத் துறையாக இருந்தாலும், அதில் முத்திரை பதிப்பவர்களாகச் சில பேரைத்தான் சொல்ல முடியும். அப்படிச் சொல்லக்கூடியவர்கள் தனக்குப் பின்னே வருகிறவர்களுக்கு வழிகாட்டியாக அமைவார்கள். கலைஞரைப் பொறுத்தமட்டில், முன்மாதிரியோ வகைமாதிரியோ இல்லாமல் வசனத்தில் தனித்தடத்தை உருவாக்கியவர். உள்ளக் கிடக்கையிலிருந்த சமூகநீதிக் கொள்கையைக் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பேச முனைந்தவர். “அம்பாள் என்றைக்கடா பேசினாள்” என்பது வெறும் வசனமல்ல. அந்த வசனத்திற்குப் பின்னால், சில நூற்றாண்டுகளின் வலியும் வேதனையும் அடங்கியிருந்தன. யாரையும் பின்தொடராமல், தன்னைப் பிறர் தொடர ஏதுவான வழியை ஏற்படுத்தியவர் அவர். புராண, இதிகாசப் பாத்திரங்களுக்கு வசனம் எழுதினால்கூட, அதிலும் தம்முடைய கொள்கைகள் எவை என்பதில் அவருடைய கவனம் சிதறவில்லை.

பெரும் சர்ச்சையை, பெரும் விவாதத்தை தம்முடைய எழுத்துகள் ஏற்படுத்தும் என்று தெரிந்தே எழுதியிருக்கிறார். “துணிவிருந்தால் துக்கமில்லை. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை” என்பதெல்லாம் அனுபவத்திலிருந்து வரக்கூடியது. அவரைவிடவும் தமிழ்ப் புலவர்கள், பண்டிதர்கள் இல்லாமல் இல்லை. கலைஞரின் சிறப்பென்பது, தனக்குத் தெரிந்த அல்லது தான் கற்ற அத்தனை இலக்கியத்தையும் ரசனையுடன் பகிர்ந்துகொள்ளப் பழகியதுதான்.

1970-கள் என்று நினைவு, அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருத்திருமன், ‘‘பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் / பேரா இடும்பைத் தரும்’ என்னும் குறள் ராஜாஜி வீட்டிலும், ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் / நற்றாள் தொழாஅர் எனின்’ என்னும் குறள் பெரியார் வீட்டிலும் எழுதி வைக்கப்படுமா?’’ என விளையாட்டாகக் கேட்டிருக்கிறார். அது, விளையாட்டு அல்ல, வினை. தமக்கும் தமது கட்சிக்கும் உவப்பில்லாத விஷயத்தை கலைஞர் செய்கிறாரே எனும் வெறுப்பில் கருத்திருமன் அவ்வாறு கேட்டிருக்கிறார்.

அமைதியாக உறுப்பினரின் அதிருப்தியைப் புரிந்துகொண்ட கலைஞர், “ராஜாஜி வீட்டிலும் பெரியார் வீட்டிலும் நீங்கள் சொல்கின்ற குறள்களை எழுதி வைக்கிறோமோ, இல்லையோ, ‘யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால் /  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்னும் குறளை உங்கள் வீட்டில் எழுதிவைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றிருக்கிறார். எவர் எதனால் வீழ்த்த நினைக்கிறாரோ, அவரை அதே அஸ்திரத்தால் வீழ்த்தும் வல்லமை அவருடைய தமிழுக்கு உண்டு. படித்ததை நினைவிலிருந்து சொல்வதும், அதை நேர்த்தியாக வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவதும் அவருக்கே உரிய கைவந்த கலை. வாய்வந்த கலையென்றும் வைத்துக் கொள்ளலாம்.

95 வயதைத் தொட்டிருந்த அவர், கடந்த 80 ஆண்டுகளாகத் தமிழ் நிலத்தில் தன்னை வேராகப் படரவிட்டிருந்தார். மொழி, “ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவும் பழகிக்கொள்ளவும் உதவும் கருவிதானே, அதைத் தாண்டி அதைப் பிடித்துக்கொண்டு தொங்க என்ன இருக்கிறது?” என்பது போன்ற கருத்துகளை அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இருமொழிக் கொள்கையை ஏற்றாலும், தமிழே ஆட்சியிலும் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார். ‘கம்பரசம்’ என்னும் தலைப்பில் அண்ணா, கம்பராமாயணத்தை விமர்சித்து எழுதிய நூலை நாமறிவோம். கம்பனின் காப்பியத்தில் சொல்லப் பட்டிருப்பவை முழுக்க முழுக்க விரசங்கள் என்னும் விதத்தில் அந்நூலை எழுதியிருப்பார். கம்பனை விமர்சிப்பது அவரின் நோக்கமோ, பெரியாரின் நோக்கமோ அல்ல. கம்பனால் முன் வைக்கப்பட்ட ராமாயண நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும். கட்டுக்கதைகளால் மக்களின் பகுத்தறிவு பாழ்படுகிறதே என்பதுதான் அவர்கள் வாதம்.

இதையெல்லாம் கேட்டு வளர்ந்த கலைஞரோ, ‘பூம்புகார்’ திரைப்படத்தில் “அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு கொண்ட ஆதிஷேசனே வந்தாலும், கம்பனிடம் ஒன்றிரண்டு கடன் வாங்க வேண்டும்” என்று எழுதியிருப்பார். “ஆதிஷேசனே ஆனாலும், அவனுக்கும் கடன் தரும் அளவுக்குக் கம்பனிடம் தமிழ் இருக்கிறது” என்பதுதான் கலைஞரின் பார்வை. பெரியார், அண்ணாவிடமிருந்து அவர் பெற்ற அரசியல் ஞானமே இலக்கியக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தனக்குப் பட்டதை சாமர்த்தியமாக எழுதியும் பேசியும்விடுவது அவர் வழக்கம். பழம்பெரும் இலக்கியங்களில் அவருக்கு ஏற்பும் மறுப்பும் சமவிகிதத்தில் இருந்திருக்கிறது. தனக்குப் பிடித்த தமிழ்க் காப்பியமாக சிலப்பதிகாரத்தைச் சொல்லியிருக்கிறார். தமிழரின் மாண்பையும் வீரத்தையும் காட்டக்கூடிய ஒரே காவியமாக அதையே கொண்டாடியுமிருக்கிறார். கண்ணகிக்குச் சிலை நிறுவும் ஆசையும் அதனால்தானோ எனக் கருதிக் கொள்ளலாம். காப்பியக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களுடைய அறிவு மழுங்கடிக்கப் படுகிறதே என்று பெரியாரும் அண்ணாவும் பேசிய அதே காலத்தில், கண்ணகியைக் கொண்டுவந்து முன் நிறுத்தியது, தமிழ்மீது அவர் வைத்திருந்த காதலே அன்றி வேறில்லை. நவீன இலக்கியவாதிகள் கலைஞரிடம் வேறுபடுவதும் அந்த இடத்தில்தான்.

திராவிடப் பேராண்மை

சிலப்பதிகாரம் முக்கியமாக மூன்று விஷயங்களைச் சொல்கிறது. ஒன்று, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல். இரண்டாவது, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவது. மூன்றாவது, ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது. மூன்றில் இறுதியாக வரக்கூடிய ஊழ்வினையில் கலைஞருக்கு நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை. கடவுளே இல்லை என்ற கொள்கையுடைய அவர், ஊழ்வினையை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவதும் அவர் சிந்தனைக்கு அப்பாற்பட்டதல்ல. அறத்தை முன்நிறுத்தியே அரசியல் என்பதில் சிக்கலில்லை. உரைசால் பத்தினி என்பதைத்தான் நவீன இலக்கியவாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். ‘பத்தினி என்கிற பிம்பம், பெண்ணை கீழ்மைப்படுத்தும் செயல் அல்லவா?’ என்கிறார்கள். சீதைக்கு மாற்றாக கலைஞர், கண்ணகியை காட்டினாரே தவிர, கண்ணகியே பெண்ணுக்கான ஏக உதாரணமென்று எங்கேயும் சொல்லவில்லை. கலை, இலக்கிய வடிவங்களை அரசியலுக்குப் பயன்படுத்திய ஒரே இயக்கம் திராவிட இயக்கம்தான். ஏனெனில், திராவிட இயக்கம் முன்வைத்த கொள்கைகள், ஏற்கெனவே இருந்த சமூக கட்டுமானத்தையும் சாதிய கட்டுமானத்தையும் தகர்த்தெறிய உருவாக்கப்பட்டவை.

சமகால அரசியலில் இருந்துகொண்டே, வரக்கூடிய எதிர்ப்புகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அஞ்சாமல் ஒருவர் எழுதியும் பேசியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கள் தங்கம்’ படத்திற்கு கவிஞர் வாலி, இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் ஒன்று, ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்ற ஆரம்ப வரியைக்கொண்டது. இரண்டாவது வரி என்னவாக இருக்கலாம் என யோசித்த வாலிக்கு, எதுவும் பிடிபடாமல் போயிருக்கிறது. அப்போது எதேச்சையாகக் குறுக்கிட்ட கலைஞர்,  ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’என்று அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார். வள்ளல் குணமுடைய எம்.ஜி.ஆரை அதைக் காட்டிலும் திரைப்பாடலில் எழுத முடியுமா என்று வாலியும் வியந்திருக்கிறார். பொருளை அளவின்றி கொடுப்பதில் எம்.ஜி.ஆர் வள்ளல் என்றால், பொருளுடைய வரிகளை கவிஞனுக்கே அள்ளித் தந்த வள்ளலாக கலைஞரைக் காணலாம். ‘நானும் இந்த நூற்றாண்டும்’ எனும் நூலில் வாலி இது குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார். பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், ‘முதல் வரியைவிட இரண்டாவது வரி அருமை’ என்று பாராட்டியிருக்கிறார். பதிலுக்கு, ‘நான் செத்துப் பிழைச்சவண்டா’ எனும் பாடலில் கல்லக்குடி போராட்டதில் உயிருக்கு அஞ்சாமல் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த கலைஞரை, புகழ்ந்தெழுதும்படி வாலியை எம். ஜி. ஆர் பணித்திருக்கிறார். ஒரே திரைப்படத்தில் இரண்டு ஆளுமைகளும் தங்கள் அன்பை பாராட்டிக்கொள்ள பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்னும் பதம், எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வுக்கு எத்தகைய உதவியை நல்கியதென சொல்லத் தேவையில்லை. ஒரு சில வார்த்தைகளே ஒருவரை நல்லவராகவும் கெட்டவராகவும் மக்கள் மத்தியில் பரப்புகின்றன. பெயருக்கு முன்னால் பட்டங்களை இட்டுக்கொள்ளும் வழக்கம், திராவிட இயக்கத் தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ‘நடிகவேள்’, ‘கலைஞர்’, ‘பேரறிஞர்’, ‘சிவாஜி’, ‘பெரியார்’, ‘மக்கள் திலகம்’, ‘இலட்சிய நடிகர்’ எல்லாமே பட்டங்கள்தாம். இம்மாதிரியான பட்டங்கள் வழங்கப்பட்டதற்குப் பின்னாலும் அரசியல் உண்டு. திரைப்படத்துறையைக் கைப்பற்றிய திராவிட இயக்கத்தவர்கள், அதிலிருந்து அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர, இப்பட்டங்கள் பயன்பட்டன. ஒரு பாடலோ, வசனமோ கதாபாத்திரத்தின் குரலாக அல்லாமல், சம்பந்தப்பட்ட நடிகருக்கு வெளி உலகில் என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறதோ, அதை உத்தேசித்து எழுதுவதில் கலைஞர் ஒருவரே முன்னோடி.

அவருடைய திரைப்பாடல் புலமை குறித்துத் தனிப் புத்தகமே எழுதலாம். ‘வீழ்வது நாமாயினும், வாழ்வது தமிழாகட்டும்’ என்பதோ, ‘இன்றைய செய்தி, நாளைய வரலாறு’ என்பதோ, வெற்று முழக்கங்கள் அல்ல. கலைஞரின் உதடுகள் உச்சரித்த உயிர்ப்புள்ள சொற்கள்.

“கலைஞரென்றால் தமிழ். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு என்னை இசையமைக்க வைத்தது என் வாழ்நாள் பேறு” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் வெளிப்படுத்தி யிருக்கிறார். இந்தியாவுக்கு தேசியகீதம் இருப்பதுபோல், தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு பாடல் வேண்டும் என்று யோசித்த நிலையிலேயே கலைஞர் உயர்ந்திருக்கிறார். அதையும் மிக அழகான வரையறைகளை உள்ளடக்கிய மனோன்மணீயம் பெ.சுந்தரனாரின் வரிகளை தெரிவு செய்ததில், உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறார். முழுப்பாடலில் எந்தெந்த வரிகளை நீக்க வேண்டும் எனவும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதையெல்லாம்விட, நிகழ்ச்சியின் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சிக்கு முன்னால் இசைக்கப்படும்படி செய்திருக்கிறாரே, அது தமிழுக்கும் தமிழருக்கும் அவர் செய்திருக்கும் தனிச்சிறப்பு. அப்பாடல் இசைக்கப் படுகையில், சில மடாதிபதிகள் எழாமல் தங்கள் மதமாச்சர்யத்தை வெளிப்படுத்து கிறார்கள் என்பது வேறு விஷயம்.

திராவிடப் பேராண்மை

“என்னதான் கலைஞரைத் திட்டினாலும், அவரை நேருக்கு நேராகச் சந்திக்கையில் எந்தப் பெரிய மனிதரும் சரணாகதி அடைந்துவிடுவார்” என்று கண்ணதாசன் தெரிவித்திருக்கிறார். அந்தக் கவர்ச்சி, தமிழால் கலைஞருக்குக் கிடைத்தது. ‘மருதநாட்டு இளவரசி’ திரைப்படத்தில் ஒரு காட்சி, எம்.ஜி.சக்ரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிகழும் வாதப் பிரதிவாதத்தில் கலைஞர், “நிறுத்து, உன் உபதேசத்தை. இது, குற்றவாளிக்கூண்டு. குருமத பீடமல்ல” என்றொரு வசனத்தை எழுதியிருப்பார். அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் அவ்வசனம் எத்தகைய அதிர்வலைகளைத் திரையரங்கில் ஏற்படுத்தியது என்று கவிஞர் கலாப்ரியா ஒரு கட்டுரையில் பகிர்ந்திருக்கிறார். “ஆக்கப் பொறுத்தவன் மனம், ஆறப் பொறுப்பதில்லையா?’’ என்ற வழக்கு மொழியை எடுத்து, “பூமியைத் தோண்டி பொன்னைப் புதையல் எடுத்தவன், அது ஆபரணமாகும் வரையாவது காத்திருக்கக் கூடாதா?” எனத் திரைத்தமிழில் அழகு செய்திருக்கிறார்.

எண்ணிகையில் அதிகமாக எழுதியவர்கள், ஒருகட்டத்தில் கூறியது கூறலைத் தவிர்க்க முடியாமல் திணறுவார்கள். ஒரே கட்சி, ஒரே கொள்கை என்றாலும், தமது பேச்சிலும் எழுத்திலும் கலைஞர், அந்தச் சவாலை நுனி பிசகாமல் தாண்டியிருக்கிறார். கூறியது கூறல், கருத்துகளில் தென்பட்டாலும் வார்த்தைகளில் அறவே தவிர்த்திருக்கிறார். கட்சிக்கான முழக்கங்களை முன் வைக்கையிலும், அவருக்கே உரிய ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. கட்சிக்கான முழக்கங்களைக்கூட, தாரகமந்திரமாக மாற்றும் வல்லமை அவருக்கு வாய்த்திருக்கிறது. ‘உறவுக்குக் கை கொடுப்போம்; உணர்வுக்குக் குரல் கொடுப்போம்’, ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’, ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ போன்ற முழக்கங்கள் இன்றும் மக்கள் மத்தியில் புகழ்வாய்ந்த முழக்கங்களாக இருக்கின்றன.

கலைஞரின் அரசியல், கலை உலக வாழ்வை எண்ணுந்தோறும், மேலே காணப்படும் மூன்று முழக்கங்களும் முக்கியமாகப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இன்றையச் செயல்பாடுகள் அம்முழக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. மீண்டும் அவர் கட்டியாண்ட தமிழைப் பேசவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஒன்று, அவர் பேச வேண்டும் அல்லது அவர் குரலில் நாமாவது பேச வேண்டும். “உங்கள் கவிதையில் உங்களையே பிரமிக்கவைத்த வரி எது?” என்ற கேள்விக்கு, “மானம் அவன் கேட்ட தாலாட்டு /  மரணம் அவன் ஆடிய விளையாட்டு” என்று விளக்கியிருக்கிறார். மானமுள்ள தமிழ், மரணத்தைக்கூட விளையாட்டாகவே பார்க்கிறது. நிறைவாழ்வை எய்திய கலைஞரும் தமிழும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். மரணம் அவன் ஆடிய விளையாட்டென்று எழுதியிருக்கிறார். உண்மையில், அவர் மரணித்த பிறகு, தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் யார் யார் என்னென்ன விளையாட்டை ஆரம்பிக்கப் போகிறார்களோ?

-  யுகபாரதி,

படங்கள் : கே.ராஜசேகரன்