வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (05/12/2018)

கடைசி தொடர்பு:13:49 (05/12/2018)

தேர்தல் ஆணைய கணக்குப்படி, எந்தெந்தக் கட்சிகளின் வருவாய் அதிகரித்துள்ளது?

ரசியல் கட்சிகளின் சொத்து மதிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மத்திய, மாநில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், எப்போதுமே ஆளுங்கட்சிகளின் மீது பொருளாதாரம் சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவைதான் கைகூடுவதாகவும் உள்ளது. பொருளாதாரத்தை மையம் கொண்டதாக சமூகம் மாறிக்கொண்டிருக்கையில், பொருளாதாரம் சார்ந்த கருத்துகள் விரைவில் அனைவரையும் சென்றடைந்து விடுகின்றன. தி.மு.க போன்ற சமூகநீதி பின்னணியைக் கொண்ட கட்சியும் இந்தக் கொள்கையை விட்டுவிடவில்லை என்றாலும் மற்றொரு புறம் `கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன்’ என்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை அதிகமாகப் பேசுகின்றன.

தேர்தல்
 

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. கட்சிகள் சமர்ப்பிக்கும் தகவல்களைத் தேர்தல் ஆணையம் பொதுமக்களின் பார்வைக்காக அதன் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றது. தற்போது 2017-2018-ம் நிதி ஆண்டுக்கான தேசிய, மாநிலக் கட்சிகளின் வரவு, செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா கட்சி, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகள் தங்களின் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில். இந்தக் கட்சிகளில் 1,027 கோடி வருவாயோடு முதலிடத்தைப் பிடித்திருப்பது பிஜேபி. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னர் பி.ஜே.பி-யின் வருவாய் 460 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ஆட்சியமைத்து நான்காண்டுகளைக் கடந்து ஐந்தாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அந்தக் கட்சியின் ஆண்டு வருவாய் இருமடங்காக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறாத காங்கிரஸ் கட்சியின் வருவாயும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. அந்தக் கட்சி தனது நிதி நெருக்கடியைச் சரி செய்ய முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்களிடமிருந்து பணம் வசூலிக்க உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தொடர் தோல்விகளின் மூலம் சோதனைகளை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் கட்சிக்கு, மேலும் 14 சதவிகித நிதி இழப்பும் ஏற்பட்டு அந்தக் கட்சியின் நிதி ஆதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டிருக்கிறது. 

அறிவாலயம்

சில மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு கொண்ட திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சிகள்கூட தங்களின் வரவு செலவுகளை தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இயங்கி வரும் பாரம்பர்யமிக்க காங்கிரஸ் தன்னுடைய வருவாய் கணக்குகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்தியாவின் பிரதமர்களை உருவாக்கும் தேசமான உத்தர பிரதேசத்தில் செல்வாக்கு பெற்ற கட்சிகளில் ஒன்று பகுஜன் சமாஜ். அந்தக் கட்சியின் வருமானமும் கடந்த ஆண்டை விடப் பன்மடங்கு குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 170 கோடி ரூபாய் ஈட்டிய பகுஜன் சமாஜின் வருவாய் இந்த ஆண்டு 51 கோடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதி என்ற உடன் பலரும் சொல்லும் பெயர் நல்லகண்ணு. அவர் சார்ந்திருக்கும் கட்சியான சி.பி.ஐ. இந்தியாவின் பழைமையான கட்சிகளில் ஒன்று. அந்தக் கட்சியின் கடந்த நிதியாண்டு வருமானம் ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே. இந்தத் தொகை பல கட்சிகள் இடைத்தேர்தலுக்குச் செலவழிக்கும் தொகையை விடக் குறைவாகும். தேசியக் கட்சிகளின் வருமானம் ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளின் வருமானமும் சில தேசிய கட்சிகளின் வருவாய்க்கு ஈடுகொடுப்பதாகத்தான் உள்ளது.

 

தி.மு.க தேர்தலில் கவனம் செலுத்தி தன்னுடைய செயல்பாடுகளை நகர்த்திக்கொண்டிருக்க. நிதி வருவாயும் அந்தக் கட்சிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. 2016-17ம் நிதியாண்டில் 16 கோடி ரூபாயாக இருந்த தி.மு.க-வின் வருவாய் 2017-18 ல் 35 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க-வுக்கு நிதி வரவிலும் இறங்குமுகமாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு 48 கோடி ரூபாயாக இருந்த அந்தக் கட்சியின் வருவாய், இந்த ஆண்டு 12 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு, புதிதாக உருவான அ.ம.மு.க ஆகியவை அ.தி.மு.க-வுக்குச் சவாலாக மாறியுள்ளது.

ஏற்கெனவே கட்சிகளுக்கு நிதிகளை வழங்குவதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிப்பது, தனிநபர்கள் 20,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கட்சி நிதிக்கு அளிக்கும் போது அதை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளைக் கொண்டுவந்தாலும்.அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

தேர்தல் வெற்றிக்கும் அந்தக் காலகட்டத்தில் கட்சிகளுக்குக் கிடைக்கு நிதியின் அளவுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கின்றன. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீழ்த்தி பி.ஜே.பி. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போது பி.ஜே.பி-யின் 2013-14ம் ஆண்டுக்கான வருவாய் 1071 கோடி ரூபாய். அதே காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 598 கோடி ரூபாய். ஆனால் காங்கிரஸ் கட்சியின் செலவு 644 கோடி அப்போதே வருவாயை விடசெலவு அதிகம்.

தேர்தலின் வெற்றியைக் கட்சிகளின் வருவாய் தீர்மானிக்கிறது என்பது, ஆர்.கே.நகர் போல ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை மட்டுமே வைத்து அளவிட முடியாது. கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பெரிய நிறுவனங்களும் வெற்றி பெற வாய்ப்பிருக்கும் கட்சிகளை ஆராய்ந்தே கொடுக்கின்றன.

மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்காமல், தேர்தலின் வெற்றியைப் பணம் தீர்மானிக்கும் போதுதான் இந்தக் கேள்வி எழுகிறது இது ஜனநாயகமா பண நாயகமா என்று?


டிரெண்டிங் @ விகடன்