`ரூட்டை ஏன் மாத்தினீங்க, நாங்க வேலைக்குப் போக வேண்டாமா?' கண்டக்டரிடம் மல்லுக்கட்டிய பெண் பயணிகள் | heavy traffic jam in chennai due to jayalalithaa death anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (05/12/2018)

கடைசி தொடர்பு:14:06 (05/12/2018)

`ரூட்டை ஏன் மாத்தினீங்க, நாங்க வேலைக்குப் போக வேண்டாமா?' கண்டக்டரிடம் மல்லுக்கட்டிய பெண் பயணிகள்

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

ஜெயலலிதாவின் 2 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் அதிமுகவினர் நடத்திய பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் ரூட் அனைத்தும் மாற்றிவிடப்பட்டதால் வேலைக்குச் சென்ற பெண் பயணிகள், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் அரங்கேறியது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டும்பணிகள் ஒருபுறம் நடந்துவருவதால் நினைவிடத்தைச் சுற்றிலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க, அமமுக, ஜெ.தீபா, திவாகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் அஞ்சலி செலுத்த சென்னை மெரினா கடற்கரைக்குத் தங்களது தொண்டர்படைகளுடன் படையெடுத்தனர். இதனால், இன்றுகாலை முதல் சென்னை அண்ணாசாலை, எழும்பூர், சிந்தாரிபேட்டை, கடற்கரை சாலை என அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக இன்று காலை ஒன்பதரை மணிக்கே அ.தி.மு.க சார்பில் அண்ணாசாலையிலிருந்து ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், பத்தரை மணிவரை ஊர்வலம் தொடங்காமல் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்களுக்காகக் காத்திருந்தனர். சென்னையைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் கார், வேன், பஸ் என அண்ணா சிலையை நோக்கிப் பயணப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் அலுவலகம் செல்லும் பலரும் சாலையில் பல மணிநேரம் நின்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

நெரிசலில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

பல இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றம் செய்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முயன்றும் அது முடியவில்லை. நண்பகல் வரை சென்னை மையப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணற.. வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தையை அனுபவித்தனர். ``ரூட்டை ஏன் மாத்தினீர்கள், நாங்க வேலைக்குப் போக வேண்டாமா'' பெண் பயணிகள் ஆவேசமாக கண்டக்டரிடம் கேட்க, அவர், `நான் என்ன பண்ணுவேன். போலீஸ்தான் மாத்திவிட்டிருக்காங்க' என்று அவரும் கடிந்துகொண்டார். கூட்ட நெரிசலால் பெண்கள் பாதி வழியில் பஸ்ஸிலிருந்து இறங்கி அரசைத் திட்டிக்கொண்ட படியே நடந்தே சென்றனர்.
 


[X] Close

[X] Close