மேக்கேதாட்டூ அணை விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு!

மேக்கேதாட்டூ அணை விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு!
மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் கடந்த செப்டம்பர் மாதம் அம்மாநில அரசு தாக்கல் செய்தது. புதிய அணையை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கும்படி அனுமதி கோரியது. கர்நாடகத்தின் இக்கோரிக்கையை ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசும் அறிவித்தது. மேக்கேதாட்டூவில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தது. குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளைக் காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன. கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்பதுதான் மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும்.
மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடகம் தயாரிப்பதற்கு மத்திய நீர்வள பாசன ஆணையம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்குத் தமிழக அரசு தரப்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அதிகாரிகள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில்தான் மேக்கேதாட்டூ விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன், கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.