Published:Updated:

புயலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வீடு! நேரடி நடவடிக்கையில் இறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ

புயலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வீடு! நேரடி நடவடிக்கையில் இறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ
புயலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வீடு! நேரடி நடவடிக்கையில் இறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ.

கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. கீழே விழுந்த மரங்களை அகற்றமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். வனப்பகுதி என்பதால், வனத்துறை, வருவாய்துறை அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் விவசாயிகள். இந்தப் பகுதியில் மிளகு, காபி முக்கிய விவசாயமாக இருக்கிறது. மிளகுக்கொடி படர வசதியாக, உயரமான மரங்களைத் தோட்டங்களில் வளர்த்துவைத்திருந்தனர் விவசாயிகள். இந்நிலையில், கஜா புயல் மிளகுக்கொடியோடிய மரங்களை வேரோடு சாய்த்துப் போட்டுவிட்டது. இதனால், யானை புகுந்த வெண்கலக் கடையாகக் காட்சியளிக்கின்றன காபி, மிளகுத் தோட்டங்கள்.

அரசு அதிகாரிகள் இன்னும் பல இடங்களுக்குப் பார்வையிடவே வரவில்லை. கடந்த வாரம் இந்தப் பகுதியில் பார்வையிட்ட வனத்துறை அமைச்சர், பெயரளவில் ஆய்வு நடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, இன்று பாதிக்கப்பட்ட அமைதிச்சோலை, பன்றிமலை, ஆடலூர் பகுதிகளில் ஆத்தூர் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆய்வுசெய்தார்.

பன்றிமலையை அடுத்துள்ள தங்கமார் பொறும்பு பகுதியில் வசித்துவரும் ஆதிவாசிகள் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றவரிடம், அங்கிருந்த மக்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகள்குறித்து முறையிட்டனர். அப்போது பேசிய கிராமத்தினர், குடிதண்ணிதான் பெரிய பிரச்னையா இருக்கு. தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்துபோய் தண்ணிக் கொண்டு வர்றோம். எங்களுக்கு நிரந்தரமா குடியிருக்க வீடோ, இடமோ இல்லாததால, இந்தப் பாறை மேல குடிசைபோட்டு குடியிருக்கோம். இங்க 14 குடும்பம் இருக்கு. புயல் காத்துல சில குடிசைங்கள்ல கூரை பிச்சுட்டுப் போயிடுச்சு. மிச்ச குடிசைகளும் சேதமாகிடுச்சு. மழை பெய்ஞ்சா ஒழுகுது. இதுக்கு ஏதாவது மாத்து ஏற்பாடு செஞ்சிகொடுங்க என முறையிட்டனர்.

உடனடியாக அங்கிருந்தபடியே அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஐ.பெரியசாமி, “குடிநீர் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் நிதி தருகிறேன்” என உறுதியளித்தார். தொடர்ந்து, “தற்காலிகமாக, கூரைகளின்மீது போட்டுக்கொள்வதற்காக தார்பாலின் சீட் வாங்கித்தருகிறேன்” என்றவர், தனது உதவியாளர்களிடம் அதற்கான உத்தரவுகளை இட்டார். மேலும், “உங்களுக்கு எனது நிதியில் நிரந்தரமாக வீடு கட்டித் தருகிறேன்” என உறுதியளித்தவர், அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டார். “புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் இந்த மக்களுக்கு பட்டா ஏற்பாடுசெய்து கொடுங்கள். நான் எனது நிதியில் வீடு கட்டிக்கொடுக்கிறேன்” என்றார். மாவட்ட ஆட்சியரும் செய்வதாக உறுதியளித்தார்.

ஆளுங்கட்சியினர் கண்டுகொள்ளாத நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., தங்கள் கோரிக்கைகளைக் கேட்டு, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றது அந்த மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை பழங்குடியின மக்கள் முகத்தில் மின்னியது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, “கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கே.சி. பட்டி அருகில் ஆயிரம் வயதான மரத்தையே வேரோடு சாய்த்திருக்கிறது. இதிலிருந்து புயலில் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரிகள் இன்னும் முழுமையான கணக்கீட்டை முடிக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் விழுந்துகிடக்கும் மரங்களை அகற்ற முடியாமல் இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து, விழுந்துகிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த உதவ வேண்டும்.

மேலும், கொடைக்கானல் பகுதியை தேசியப் பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட மத்தியக் குழு, கொடைக்கானல் பகுதிக்கு வரவில்லை. அவர்களும் வந்து பார்வையிட்டு, சேதங்கள் பற்றிய உண்மை நிலையை அரசின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். எனது நிதியில் இருந்து தங்கமார் பொறும்பு பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வீடு மற்றும் குடிநீருக்காக போர்வெல் அமைத்துத் தரவிருக்கிறேன்” என்றார்.