Published:Updated:

`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்கு விடையா?' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி

`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்கு விடையா?' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி
`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்கு விடையா?' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி

'வைகோ-வின் கோபம் என்மீதா, இல்லை வன்னியரசு மீதா' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம், தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அப்போது, திராவிட இயக்கம் பட்டியலின மக்களுக்கான அதிகாரப் பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்ற நெறியாளரின் கேள்விக்கு வைகோ அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு. 

அவரின் பதிவில், ``என்னுடைய தலைவர் திருமாவளவனை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், வைகோ மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்த அளவுக்கு  வைகோ மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன். 

தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் வைகோ. சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர்தான். தலித்துகள் விடுதலைகுறித்த அக்கறை உள்ளவர்தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலைபார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா? இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல, தலித்துகளுக்கு வந்ததா என்ற கேள்வி, மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள். 

அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்படவேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப்பகிர்வு, கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாடவேண்டிய தேவையிருக்கிறது. கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாடவேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்!" என்று கூறியிருந்தார். 

அவரின் இந்தப் பதிவை மேற்கோள்காட்டி, ``வன்னியரசு யார் சொல்லி இப்படி ஒரு பதிவைப் போட்டார்'' என்று நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் வைகோ. இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ``வைகோ பற்றி வன்னியரசு பதிவுசெய்த கருத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என்பதை அவரிடம் சுட்டிக்காட்டி, நீக்கும்படி கேட்டுக்கொண்டேன். உடனடியாக சர்ச்சைக்குள்ளான அந்தப் பதிவை நீக்கிவிட்டு, தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார் வன்னியரசு. வைகோ-வின் உதவியாளரையும் தொடர்புகொண்டு தனது வருத்தத்தைப் பதிவுசெய்துவிட்டார் வன்னியரசு. 

அதன்பின்னரும் வைகோ தெரிவித்துள்ள கருத்து, இதனுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, தன்னுடைய இல்லத்துக்கு வரும்படி அழைத்து உதவிகள் செய்தார் வைகோ. அதற்காகப் பலமுறை நன்றி சொல்லியிருக்கிறேன். இது வெளிப்படையான ஒன்று. இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஆனால், வன்னியரசுவின் பதிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. எதன் அடிப்படையில் இதைப் பேசியிருக்கிறார் எனவும் தெரியவில்லை. இது, என்மீது உள்ள கோபமா அல்லது வன்னியரசின் பதிவுக்கு விடையா என்று தெரியவில்லை'. 

கட்சித் தலைமை சொல்லித்தான் வன்னியரசு பதிவிட்டார் என்பது தவறான தகவல். நான், எப்போதும் எதிர்ப்பை நேரடியாகப் பதிவுசெய்வேனே தவிர, யாரையும் தூண்டிவிடுவதில்லை'' என விளக்கமளித்தார். ஒத்தகருத்துடன் தி.மு.க கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க, வி.சி.க தலைவர்களின் இந்தத் திடீர் மோதல் பேச்சுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.