வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (07/12/2018)

கடைசி தொடர்பு:09:16 (07/12/2018)

தொடங்கியது இரண்டு மாநில தேர்தல்! - வரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்

ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

தேர்தல்

இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மாதம் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவித்தது. இதில், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

தெலங்கானாவில், சுமார் 2 கோடியே 80 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 119 சட்டசபை இடங்களுக்கு 1821 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 

இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்காக 51,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இன்று தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், நாகார்ஜுனா, அமலா போன்ற பல பிரபலங்கள் காலையிலேயே மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர். 

தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை டி.ஆர்.எஸ், காங்கிரஸ்-தெலுங்குதேசம் மற்றும் பி.ஜே.பி ஆகிய மூன்று அணிகள் களத்தில் உள்ளன. தற்போது ஆட்சியில் இருக்கும் டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஐந்து மாநிலங்களிலும் வரும் 11-ம் தேதி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.