Published:Updated:

`உங்களால் ஏமாற்றப்பட்டேன்; இனி நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்' - பிரதமர் மோடியை விளாசிய மத்திய அமைச்சர்!

`உங்களால் ஏமாற்றப்பட்டேன்; இனி நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்' - பிரதமர் மோடியை விளாசிய மத்திய அமைச்சர்!
`உங்களால் ஏமாற்றப்பட்டேன்; இனி நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்' - பிரதமர் மோடியை விளாசிய மத்திய அமைச்சர்!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியால் ஏமாற்றப்பட்டேன் எனக் கூறி மத்திய அமைச்சர் பதவியை துறந்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா.

பீகாரின் ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா. இவர் கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். இக்கட்சிக்கு மூன்று எம்.பி-க்கள் கிடைத்தது. இதன்பலனாக மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறையில் இணை அமைச்சராகப் பதவி வகித்துவந்தார் உபேந்திர குஷ்வாஹா. இதற்கிடையே, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் முடிவில் இருந்தார். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இந்த முறை ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சிக்கு இரண்டு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்தமுறை 3 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றிலும் வெற்றிபெற்ற நிலையில், தற்போது இரண்டு இடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளது லோக் சக்தி கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில், திடீரென மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா. ராஜினாமா குறித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``அரசியலமைப்பில் உள்ள அமைச்சரவை செயல்பாடுகளை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். இங்கு தற்போது இருக்கும் கேபினெட் வெறுமனே எந்த முடிவும் இல்லாமல் உங்கள் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டும் உள்ளது. நீங்கள், உங்கள் அலுவலகம் மற்றும் பா.ஜ.க தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தலைகளாகவே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேலை செய்வது என்பதில்லாமல், அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டத் தவறான வழியில் பயன்படுகிறது. 

மசூதிகள் மற்றும் கோயில்களின் கட்டுமானத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இது அரசியல் கட்சிகளின் செயல்பாடு அல்ல, இது போன்ற விஷயங்களில் தலையீடு செய்வது சமுதாயத்தில் பதற்றங்களை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் கவனத்தை உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புகிறது. ஆளும் கட்சியில் உள்ள தலைவர்களில் சிலர் வேண்டுமென்றே மக்கள் வறுமை, கல்வியறிவு மற்றும் வேலையின்மை பற்றி மறக்க முயற்சிக்க, உணர்ச்சி ரீதியிலான பிரச்னைகளைத் தூண்டிவிடுவதாக சந்தேகம் எழுகிறது.  ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சி இந்த அணுகுமுறையைக் கடுமையாக கண்டிக்கிறது.

கடந்த நான்கரை வருடங்களாக உங்கள் அமைச்சரவையில் பணியாற்றினேன். ஆனால், உங்கள் தலைமையால் ஏமாற்றப்பட்டேன். தேர்தலின்போது மக்களுக்கு நிறைய வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு உண்மையில் என்ன செய்துள்ளீர்கள் என்பதுதான் தற்போது பிரச்னை” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய குஷ்வாஹா, ``பீகார் சிறப்பு அந்தஸ்துக்காகப் பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை. பீகார் ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ, அதேநிலையில்தான் தற்போதும் இருக்கிறது. பீகார் மக்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை” என்று தெரிவித்தார்.