Published:Updated:

என்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி! - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்

என்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி! - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்
என்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி! - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், தெலங்கானாவைப் பொறுத்தவரை அங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சி எதிர்பார்க்காத அளவு இமாலய வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியமைக்க 60 இடங்கள் மட்டுமே போதுமானது. ஆனால், டி.ஆர்.எஸ் கட்சி 86 இடங்களில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், பா.ஜ.க ஒரே ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. 

தெலங்கானாவைப் பொறுத்தவரை நகரமோ, கிராமமோ, காங்கிரஸ் கட்சியோ அல்லது பிற கட்சிகளோ  எதுவாக இருந்தாலும் அங்கு ஒன்றுதான். அம்மாநில மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளாக டி.ஆர்.எஸ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். தெலங்கானா மாநிலத்துக்கு சந்திரசேகர ராவ் செய்த நலத்திட்டங்கள்தான் தற்போது அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்த்தால், முற்றிலும் விவசாயிகளை வைத்து தன் வெற்றியை முன்னெடுத்துள்ளார். 

ஒரு ஏக்கருக்கு, ஆண்டுக்கு ரூ.8000 என விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கினார். மாநிலம் தோறும் உள்ள விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு அட்டை வழங்கினார். குறிப்பாக, கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தினார். மக்களின் பிரச்னைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதற்கு மிக சாதாரண வார்த்தைகளில் தீர்வு சொல்வது இவரின் சிறப்பம்சம். 2000 ஆம் வருடம், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலம் முழுவதும் மின்சார கட்டணத்தை உயர்த்தினார். இதற்கு, அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனியாகப் பிரிந்த பிறகு, மின்சார தட்டுப்பாட்டை நீக்குதல், மின்சார கட்டண உயர்வைக் குறைத்தல் போன்றவற்றைத் தன் முதல் குறிக்கோளாக வைத்திருந்தார் சந்திரசேகர ராவ். 

 சந்திரசேகர ராவ், அதிக பேச்சுத்திறன் கொண்டவர். அதைத் தன் அரசியலிலும் பயன்படுத்திக்கொண்டார். தன் பேச்சு மூலம் கிராம மக்கள் அனைவரையும் எளிதில் கவர்ந்தார். விரைவில் தன்னை மக்களின் தலைவராக மாற்றிக்கொண்டார். மேலும், மக்களின் நலத் திட்டங்களை ஒழுங்குபடுத்தியது, 'கல்யாண் லட்சுமி' என்ற பெண்களுக்கான திருமணப் பரிசுத் திட்டம், 'ரயிடு பந்து' என்ற விவசாயிகளின் நண்பன் திட்டம் போன்றவை இவரை இன்னும் அதிக உயரத்துக்குக் கொண்டுசென்றுவிட்டன. 

இதன் எதிரொலியாக, சில பகுதி மக்கள், டி.ஆர்.எஸ் அல்லாத வேட்பாளர்களைத் தங்கள் தொகுதிக்குள் வாக்கு சேகரிக்கக்கூட அனுமதிக்காத கதையும் நிகழ்ந்துள்ளது. டி.ஆர்.எஸ் வேட்பாளர்கள் மீது எங்களுக்கு அதிருப்தி உள்ளது. ஆனால், எங்களுக்கு சந்திரசேகர ராவ் வேண்டும் எனப் பல மக்கள் கூறிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. குடும்பங்கள் ஏன் ஒரே அறையுள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். இரண்டு, மூன்று அறைகள் இருந்தால் வசதிதான் என இவர் நினைத்து, தன் சொந்தத் தொகுதியான காஜ்வெலில், வறுமையில் வாடும் சில குடும்பங்களுக்கு இலவசமாகப் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். 

முன்னதாக, இந்திரா காந்தி. என்.டி.ராமா ராவ் போன்ற தலைவர்கள் ஏழைகளின் நலன் காக்கும் திட்டங்கள் மூலம் அரசியலில் பெரும் வெற்றியைப் பெற்றனர். தற்போது அவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் சந்திரசேகர ராவ். ஆந்திரா இரண்டாகப் பிரிந்த பிறகு தெலங்கானாவில் நடக்கும் முதல் தேர்தலில் சந்திரசேகர ராவ் பெற்றுள்ள பெரும் வெற்றி, வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.