``தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு’’ - சிவராஜ் சிங் சௌகான் வருத்தம்! | Madhya Pradesh: Shivraj Singh Chouhan resigns, takes responsibility for defeat

வெளியிடப்பட்ட நேரம்: 05:17 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:44 (13/12/2018)

``தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு’’ - சிவராஜ் சிங் சௌகான் வருத்தம்!

``மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அடைந்திருக்கும் தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று பதவி விலகிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல் எண்ணிக்கை நேற்று வெளியாகியது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளில் பா.ஜ.க 109 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் 114 இடங்களைக் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவுடன்  காங்கிரஸ் ஆட்சியமைக்க இருக்கிறது. தேர்தல் தோல்வியினால் மத்தியப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து சிவராஜ் சிங் சௌகான் விலகியிருக்கிறார்.

தனது சாதுரியத்தால் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு வெற்றியைத் தேடி தந்தவர் இவர். தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முதல்வர் பதவியில் அமர்ந்த பெருமை இவருக்கு உண்டு. மத்தியப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் ‘மாமாஜி’  என்று அழைக்கப்படும் சிவராஜ், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவர். 

மத்தியப் பிரதேச மாநில ஆளுநரைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ``மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசை விடவும் குறைவான இடங்களையே பெற்றிருக்கிறோம். அதனால் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்கிறேன். எங்களை இந்த முறை எதிர்க்கட்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது வாழ்த்துகள். பணியைச் செய்கையில் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல இந்தத் தோல்வியையும் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் பா.ஜ.க அடைந்திருக்கும் தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க