`வானத்தில் பறந்த பா.ஜ.கவை தரைக்கு இழுத்துவந்த மக்கள்' - சிவசேனா கடும் தாக்கு! | sivasena speaks about election result

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:48 (13/12/2018)

`வானத்தில் பறந்த பா.ஜ.கவை தரைக்கு இழுத்துவந்த மக்கள்' - சிவசேனா கடும் தாக்கு!

`காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க-வினர் மேடைக்கு மேடை பேசி வந்தார்கள். ஆனால், பா.ஜ.க இல்லாத நாட்டை மக்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள்' என்று ஐந்து மாநில தேர்தல் முடிவு குறித்து சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது. 

சிவசேனா

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்து தோல்வியடைந்திருக்கிறது. இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலத்தில் ஆட்சியை இழந்திருக்கிறது பா.ஜ.க. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரவிருக்கிறது.

இந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ பத்திரிகை 'சாம்னா'வில்  எழுதியிருப்பதாவது... ``வானத்தில் பறந்து கொண்டிருந்தவர்களை மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்து வந்திருக்கிறார்கள். பா.ஜ.கவைத் தவிர்த்து எந்தக் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற பா.ஜ.க-வினரின் மூட நம்பிக்கையை உடைத்திருக்கிறார்கள் மக்கள். இந்த நாடு ஒரு சில தொழில் அதிபர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல நிர்வகிக்கப்படுகிறது. அதனால்தான் ரிசர்வ் வங்கி போன்ற முக்கியமான நிறுவனங்கள்கூட சிதைக்கப்படுகின்றன. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவும், மோடியும் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று மேடைக்கு மேடை கூறிவந்தார்கள்.

மோடி

ஆனால், பா.ஜ.க-வினர் ஆண்ட மாநிலங்களிலேயே பா.ஜ.க இல்லாத காலத்தை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். மத்தியப் பிரதேசம், மான்டசூரில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஆனால், அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டார்கள். ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். இவை அனைத்துக்கும் மக்கள் தேர்தலில் பழி தீர்த்துக்கொண்டார்கள். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கேலிக்கூத்தாகி நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது.

மோடி

ஏராளமான மக்கள் வேலையிழந்தனர், பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், நமது பிரதமர் உலக அரசியல் பேசுவதற்காக விமானம் விமானமாகப் பறந்து கொண்டிருந்தார். மோடி பேசிய வார்த்தைகள் தற்போது எதிராகத் திரும்பியிருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முதலில் ரிசர்வ வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் வரவேற்றார். ஆனால், அவரே இப்போது சோர்வடைந்து பதவி விலகிவிட்டார்' எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க