Published:Updated:

ராஜஸ்தான் முதல்வர் ரேஸில் முந்தும் சச்சின் பைலட், அஷோக் கெலாட்... ராகுலைச் சந்திக்க டெல்லி பயணம்

ராஜஸ்தான் முதல்வர் ரேஸில் முந்தும் சச்சின் பைலட், அஷோக் கெலாட்... ராகுலைச் சந்திக்க டெல்லி பயணம்
ராஜஸ்தான் முதல்வர் ரேஸில் முந்தும் சச்சின் பைலட், அஷோக் கெலாட்... ராகுலைச் சந்திக்க டெல்லி பயணம்

ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்பதைக் காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் ஆகியோரை டெல்லிக்கு அழைத்துள்ளார் ராகுல் காந்தி.

5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. மிசோரமில் ஆட்சியை இழந்தாலும், பா.ஜ.க வை மூன்று மாநிலத்தில் வீழ்த்தியதைக் கொண்டாடி வருகிறது. மறுபுறம் ஆட்சியைக் கைபற்றிய 3 மாநிலங்களுக்கான முதல்வர் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பாக ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைத் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு வழங்குவதாக ஒருமனதாக முடிவு செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் ரேஸில் தற்போது சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் முன்னணியில் உள்ளனர். 

ராஜஸ்தானின் முதல்வர் தேர்வு தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட்,  ``வழக்கமான நடைமுறைதான் முதல்வர் தேர்வில் பின்பற்றப்படுகிறது. வெற்றிபெற்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை மாநில தேர்தல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பாளர்கள் அதை தேசியத் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவிப்பர். தலைவர் இறுதி முடிவை எடுப்பார்” என்றார். 

ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்று தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வர் ரேஸில் முன்னணியில் உள்ள சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் ஆகியோர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.