Published:Updated:

50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்!

50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்!
50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்!

50 வேன்கள் மற்றும் 100 கார்களில் 2000 பேரோடு சென்று நாளை செந்தில்பாலாஜி சென்னையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைய இருக்கிறார்.

கடந்த பத்து நாள்களாக, 'செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்ற தகவல்தான் கரூர் மாவட்ட அரசியலை பரபரப்பாக்கியது. ஆரம்பத்தில் வெறும் வதந்தி என்ற அளவில் இருந்த இந்தத் தகவல், பிறகு 'உண்மைதான்' என்ற அளவுக்கு மாறியது. செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்தி அ.ம.மு.க-விலேயே தொடர வைப்பதற்காக டி.டி.வி.தினகரன், கட்சியின் அமைப்புச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் முருகன், பார்த்திபன் ஆகியோரை கரூருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்களைச் சந்திக்காமல் டிமிக்கி கொடுத்தார் செந்தில் பாலாஜி.

``அ.தி.மு.க.வும், அ.ம.மு.கவும் ஒன்றாக இணைக்கப்பட பேச்சுவார்த்தை நடப்பதால், அதன்பிறகு தன்னால் அ.தி.மு.க-வில் இப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீறி கரூரில் அரசியல் பண்ண முடியாது என்கிற எச்சரிக்கையில் முன்கூட்டியே தி.மு.கவுக்கு மாற இருக்கிறார் செந்தில்பாலாஜி. முன்னாள் அமைச்சரும், தி.மு.க-வின் மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமி மூலமாகதான் இணையப் போகிறார்" என்றார்கள். அதன்படி, சின்னசாமியும் நம்மிடம் நேற்று, ``செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணையப் போவது உறுதிதான். தளபதியே அதை என்னிடம் உறுதிப்படுத்தினார். செந்தில் பாலாஜிக்கும், தினகரனுக்கும் ஏதோ பிரச்னை. அதனால்தான், அவர் தி.மு.கவுக்கு வருகிறார். அவர் வந்தால் கட்சிக்காக கடுமையாக உழைப்பார்" என்றார்.

இந்த நிலையில், அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்கள், ``செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வுக்குப் போக தயாராகதான் இருந்தார். ஆனால், அவர் அ.தி.மு.கவுக்கு வருவதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அமைச்சர் தங்கமணியும் விரும்பவில்லை. அதனால்தான், தி.மு.கவுக்குப் போகிறார். `அ.தி.மு.கவும், அ.ம.மு.கவும் இணையும்பட்சத்தில், அப்போது தான் தனித்து விடப்படுவதற்குள், இப்போதே தி.மு.கவுக்குப் போவது நல்லது. அதன்மூலம் தி.மு.க சார்பில் அரவக்குறிச்சி இடைதேர்தலில் சீட்டும் வாங்க முடியும். எம்.எல்.ஏ-வாகி அந்த செல்வாக்கோடு, தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரும் ஆக முடியும்'ன்னு நினைச்சுதான் அட்வான்ஸா கட்சி மாற முடிவெடுத்துட்டார் செந்தில்பாலாஜி" என்றார்கள்.

நேற்று இரவே செந்தில் பாலாஜி சென்னை கிளம்பிவிட்டார். தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் சென்னை கிளம்பிவிட்டார். தனது ஆதரவாளர்களை இணைப்பு விழாவுக்கு அழைத்துப்போக 50 வேன்களையும்,100 கார்களையும் இன்று ரெடி செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இன்று மாலை அவரது ஆதரவாளர்கள் அந்த வாகனங்களில் சென்னை கிளம்புகிறார்கள். முதல்கட்டமாக, தி.மு.க-வில் தினகரன் கொடுக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்காக சிம்பிளாக இணைப்பு விழாவை சென்னையில் நடத்திவிட்டு, அதன்பிறகு படுபிரமாண்டமாக கரூரில் இணைப்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஆனால், கரூர் மாவட்ட தி.மு.க புள்ளிகள் சிலரோ,  ``எம்.ஜி.ஆர் காலத்தில், ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்து கரூர் மாவட்டத்தில் தனிச்செல்வாக்கோடு இருந்தவர் கரூர் சின்னசாமி. 2000-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த செந்தில் பாலாஜியின் அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல்தான் இரண்டு வருடங்களில் அப்போதைய தி.மு.க மாவட்டச்  செயலாளர் வாசுகி முருகேசன் தலைமையில் தி.மு.க-வில் இணைந்தார்.

10,000 ஆதரவாளர்களோடு 60 லட்சம் செலவு செய்து பல வாகனங்களில் போய் சென்னையில் இணைந்தார். ஆனால், அவரால் பதினைந்து வருடங்களில் தி.மு.க-வில் பெரிய அளவில் ஜொலிக்கமுடியவில்லை. மாவட்டச் செயலாளராக தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்தார். முடியவில்லை. இப்போது, தான் கட்சி மாற காரணமான அதே செந்தில் பாலாஜியை தி.மு.க-வுக்கு இழுக்கும் சக்தியாக மாறி இருக்கிறார். உண்மையில் சின்னசாமி தன்னை கவுத்த செந்தில் பாலாஜியை கவுக்க இப்படி தி.மு.கவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறாரா, இல்லை உண்மையில் செந்தில் பாலாஜியை அரசியலில் காப்பாற்ற உதவுகிறாரா என்பதும் தெரியலை. ஆனா, எம்.ஜி.ஆரிடம் அரசியல் கற்ற சின்னசாமியையே கட்சி மாற விட்டு கதற விட்ட செந்தில்பாலாஜி, தி.மு.க-வில் தனி ராஜ்ஜியம் நடத்துவார்" என்கிறார்கள்.