Published:Updated:

``செந்தில் பாலாஜியோடு கட்சி மாறினா செத்திருவேன்!"- தந்தையை மிரட்டிய அ.ம.மு.க நிர்வாகி மகன்

``செந்தில் பாலாஜியோடு கட்சி மாறினா செத்திருவேன்!"- தந்தையை மிரட்டிய அ.ம.மு.க நிர்வாகி மகன்
``செந்தில் பாலாஜியோடு கட்சி மாறினா செத்திருவேன்!"- தந்தையை மிரட்டிய அ.ம.மு.க நிர்வாகி மகன்

" 'அம்மாவின் உண்மையான தொண்டன்'ன்னு அம்மாவோட போட்டோவை பையில் வச்சுருக்கிற. ஆனா அதை மறந்துட்டு, அவங்களுக்கு துரோகம் செய்யும்விதமா செந்தில் பாலோஜியோடு சேர்ந்துக்கிட்டு தி.மு.க-வுக்கு போக பார்க்கிற. அப்படிப் போனா, நான் விஷத்தை வாங்கி குடிச்சுட்டு உயிரை மாய்ச்சுக்குவேன்" என்று அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகி ஒருவரின் மகன் ஆவேசத்துடன் கூறினார்.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருந்தார். சமீபத்தில் வெளிவந்த  18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கி, எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்நிலையில், அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் இணையப்போவதாக ஒரு அஜெண்டா ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த  10 நாள்களாக,'செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு தாவப்போகிறார்' என்ற பரபரப்பு எழுந்தது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க விவசாய அணி மாநிலச் செயலாளர் கரூர் சின்னசாமி தலைமையில், நாளை ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைய இருக்கிறார் செந்தில் பாலாஜி. டி.டி.வி.தினகரன், செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்த கட்சியின் முக்கியப் புள்ளிகளை அனுப்பியும், அவர்களைச் சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார். இந்நிலையில், 5 0 வேன்கள்,100 கார்களில் 2000 ஆதரவாளர்களை இன்று சென்னைக்கு அழைத்துப்போக வாகனம் தயார் செய்திருக்கிறார். ஆனால், செந்தில் பாலாஜியோடு நெருக்கமாக இருந்த அ.ம.மு.க கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரோடு தி.மு.க-வுக்குப் போக தயங்குவதாக சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக, தொண்டர்களை மட்டும் சென்னைக்கு அழைத்துப்போக இருக்கிறாராம். அதன்பிறகு, நிர்வாகிகளை சமாதானம் செய்து, பிறகு கரூரில் மிகப் பிரமாண்டமாக இணைப்பு விழாவை நடத்திக்கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான், அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகி ஒருவரின் மகன், செந்தில் பாலாஜி பேச்சைக் கேட்டு தி.மு.க-வுக்கு சென்றால், நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன்' என்று மிரட்டியதாக நமக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அதுபற்றி, விசாரித்தோம். "அந்த மாநில நிர்வாகிக்கும், செந்தில் பாலாஜியோடு தி.மு.க-வுக்குப் போக விருப்பம் இல்லைதான். ஆனால், செந்தில் பாலாஜி  கூப்பிடுவதால், வேற வழியில்லாமல் கட்சித் தாவ முடிவெடுத்தார். அதை அவரின் வீட்டில் சொன்னதும், அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். 'சாவுற வரைக்கும் அம்மா கட்சியிலதான் இருப்பேன்னீங்க. இபோ, தி.மு.க-வுக்குப் போனா என்ன அர்த்தம்?. அதோட, செந்தில் பாலாஜிக்கு மட்டும் தி.மு.க-வுல பதவி, பவுசெல்லாம் கிடைக்கும். அவரை நம்பிப் போற நீங்க நடுத்தெருவுலதான் நிக்கணும். அப்படி மீறி அவர்கூட கட்சி மாறிப் போனா, நான் உங்ககூட வாழமாட்டேன்'னு மிரட்டினாராம்.

'எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனா, செந்தில் பாலாஜியே போன்போட்டு பலதடவை கூப்புட்டுட்டார். மறுக்க முடியலை' என்று சொல்லியிருக்கிறார். அப்போது வந்த அவரது மகன், 'அம்மாவின் விசுவாசின்னு அவரோட போட்டோவை பையில் வச்சுக்கிட்டு திரிஞ்ச நீங்க, ஸ்டாலின் போட்டோவை வச்சுக்கிட்டு திரிய நினைக்கிறீங்க. இது அம்மாவுக்கு செய்ற துரோகம். 'இன்னும் 100 வருஷம் எனக்கு பின்னாலயும் அ.தி.மு.க-தான் ஆட்சியில இருக்கணும்'னு சொன்ன அவரோட கனவை மறந்துட்டீங்களா. எங்க பேச்சை மீறி செந்தில் பாலாஜி பேச்சைக் கேட்டுக்கிட்டு தி.மு.க-வுக்கு போனா, நான் விஷம் குடிச்சுட்டு செத்துடுவேன்'ன்னு மிரட்டி இருக்கிறார். இதனால், ஆடிப்போன அந்த நிர்வாகி, 'என்ன முடிவு பண்றது?'ன்னு தெரியாம முழிபிதுங்கி நிக்கிறார்" என்றார்கள்.