Published:Updated:

தடையை மீறி போராடிய 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் திருச்சியில் கைது!

தடையை மீறி போராடிய 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் திருச்சியில் கைது!
தடையை மீறி போராடிய 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் திருச்சியில் கைது!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உதவாமல் வேடிக்கைபார்க்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற  மக்கள் அதிகாரம், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களின் துயரைத் துடைக்க முன்வராமல், வேடிக்கைபார்க்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களைத் தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்ககோரியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக  போராட்டம் நடத்த, அந்த அமைப்பின் சார்பில் திருச்சி மாநகர காவல்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கான போஸ்டர்கள், துண்டறிக்கைகள் அச்சடித்து வெளியிடப்பட்டு அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில், திடீரென 'ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை' என திருச்சி மாநகர போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதனால் கோபமடைந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியே தீருவோம் என முழங்கியபடி, திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே திரண்டனர்.  திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்  செழியன் தலைமையில் திரண்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ம.ப.சின்னதுரை உள்ளிட்டோர், காவிரி டெல்டா மண்டலத்தைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக் கோரியும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதிகளாகவும் அறிவிப்பு செய்! கஜா புயலால் சாகுபடிப் பருவம் வரை வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதால், போதிய வேலைவாய்ப்பை உருவாக்கு!  டெல்டாவை பாலைவனமாக்கிட படையெடுத்து நிற்கிறது கார்ப்பரேட்டுகள் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய மத்திய பா.ஜ.க அரசும் அவர்களின் அடிவருடியாக ஆட்சிசெய்யும் தமிழக எடப்பாடி பழனிசாமி அரசும், காவல் துறையும், பெயரளவிலான ஜனநாயக உரிமைகளைக்கூட மதிப்பதில்லை என முழங்கினர்.

அப்போது அங்குத் திரண்டு வந்த போலீஸார், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்ததால், கலைந்து செல்லும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், கலைந்துசெல்லாமல் கோஷங்கள் எழுப்பவே, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.