Published:Updated:

ஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி

ஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி
ஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி

ஸ்டாலின் தலைமையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பகலில்  தி.மு.கவில் இரண்டாயிரம் பேரோடு இணைகிறார். நேற்று அதற்காக 70 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது ஆதரவாளர்களைச் சென்னைக்கு அனுப்பிவிட்டு,18 திருமணங்களில் கலந்து கொண்டுவிட்டு, தானும் கிளம்பி சென்னை போய் இருக்கிறார் செந்தில்பாலாஜி.

அ.ம.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் செந்தில்பாலாஜி. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி, எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இருந்தாலும், 'மறுபடியும் அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ ஆகியே தீருவது' என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினார். தொகுதியைப் பம்பரம் போலச் சுற்றி வந்தார். ஆனால், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, 'செந்தில்பாலாஜி தி.மு.க தாவப் போகிறார்' என்ற பரபரப்பு கிளம்பியது. ஆரம்பத்தில் வதந்தி என்று சொல்லப்பட்டாலும், பிறகு அது உண்மைதான் என்கிற அளவுக்கு மாறியது. முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி மூலமாகத்தான் அக்கட்சிக்கு செல்ல இருக்கிறார்.
 

இந்நிலையில், செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்தக் கரூருக்கே கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான பழனியப்பனையும், மாநில பொருளாளர் தஞ்சை ரெங்கசாமியையும் அனுப்பி வைத்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், அவர்களைச் சந்திக்காமல் தவிர்த்தார் செந்தில்பாலாஜி.  'வரும் 16 அல்லது 17-ம் தேதிதான் செந்தில்பாலாஜி தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று பகல் 11 மணியளவில் 2000 தொண்டர்களோடு ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைய இருக்கிறார். அதற்காக, 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது ஆதரவாளர்களை நேற்று இரவே சென்னைக்கு அனுப்பி இருக்கிறார். அவர்களுக்காகத் திருவல்லிக்கேணியில் உள்ள அருணாசலம் ரெசிடென்சியில் 20 ரூம்கள் மற்றும் அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. 

அங்கே அவரது ஆதரவாளர்களை மூன்று மணிக்கு மேல் தங்க வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, அவர்களை அழைத்துப் போக கரூரிலேயே வாகனங்கள் ரெடி செய்ய செந்தில்பாலாஜி தரப்பு முயன்றது. ஆனால், அவரது அரசியல் எதிரியான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு போட்ட முட்டுக்கட்டையால் வாகனங்கள் கிடைக்கவில்லை என்று செந்தில்பாலாஜி தரப்பு புலம்பியது. இதனால், அனைத்து வாகனங்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏற்பாடு செய்தது. அதையும் அமைச்சர் தரப்பு தடுக்கக்கூடும் என்ற பயத்தில், கரூரை விட்டு வெளியே ஆங்காங்கே ஆதரவாளர்களை அழைத்துப் போய், அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். 

அ.ம.மு.கவின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பெரிய அளவில் போகவில்லை. சாதாரண தொண்டர்கள்தான் சென்றனர். செந்தில்பாலாஜியும் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை. இப்போது சிம்பிளாக ஸ்டாலின் தலைமையில் இணைந்துவிட்டு, பிறகு கரூர் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக இணைப்பு விழாவை நடத்தும்போது, நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தி அழைத்துப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறார். செந்தில்பாலாஜி நேற்று முழுவதும் இரவு 7 மணி வரையில் 18 திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, தற்போது சென்னைக்கு கிளம்பிப் போனார்.