Published:Updated:

`குமரி மக்களின் உயிருக்கு ஆபத்து' - பொன்.ராதாகிருஷ்ணன் மீது காவல்நிலையத்தில் புகார்!

`குமரி மக்களின் உயிருக்கு ஆபத்து' - பொன்.ராதாகிருஷ்ணன் மீது காவல்நிலையத்தில் புகார்!
`குமரி மக்களின் உயிருக்கு ஆபத்து' - பொன்.ராதாகிருஷ்ணன் மீது காவல்நிலையத்தில் புகார்!

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட 10 பேர் மீது நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மணவாளகுறிச்சி அரியவகை மணல் ஆலை உள்ளிட்ட இடங்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் புகைப்படம் எடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. புகைப்படம் எடுத்தவர்களுக்கு உதவியதாக மீண்டெழும் குமரி அமைப்பின் சேர்மனும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மற்றும் சிலரை கண்டித்து பா.ஜ.க. போஸ்டர் ஒட்டியது. மேலும், பா.ஜ.க. சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேவசகாயம் மத்திய அரசின் திட்டமான நான்குவழிச் சாலையில் 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர் மூலம் தேவசகாயத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டெழும் குமரி அமைப்பின் தலைவர் தாமஸ் பிராங்கோ மற்றும் மரியதாசன், ஜான்பெல்லாரியோ ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. மற்றும் நேசமணி நகர் காவல்நிலையத்துக்கும் ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது மணவாளக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்திவருவதாகவும், இந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனால் குமரி மாவட்டத்தில் உள்ள சாதாரண மக்களின் உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் பேட்டி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. குமரி மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கணேசன், வேல்பாண்டியன், முத்துராமன், குமரி ரமேஷ், தங்கப்பன், உடையார், மீனாதேவ் என 10 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து நேசமணிநகர் போலீஸார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.