Published:Updated:

`இவரைப் போல சிறந்த முதல்வரைப் பார்த்ததில்லை' - மாறி மாறிப் புகழ்ந்துகொண்ட எடப்பாடி - வேலுமணி!

`இவரைப் போல சிறந்த முதல்வரைப் பார்த்ததில்லை' - மாறி மாறிப் புகழ்ந்துகொண்ட எடப்பாடி - வேலுமணி!
`இவரைப் போல சிறந்த முதல்வரைப் பார்த்ததில்லை' - மாறி மாறிப் புகழ்ந்துகொண்ட எடப்பாடி - வேலுமணி!

சீர்மிகு நகர திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி  எனப் பலர் கலந்துகொண்டார்கள்.

சேலம் மாநகராட்சி சார்பாக 166.58 கோடியில் புதிய திட்டப்பணிகளான பூமி பூஜை போட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேடையில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ``தந்தை ஸ்தானத்தில் இருந்து செயல்படுகிற மாமனிதர். அவர் முதல்வராக இருக்கும் காலத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது பாக்கியம்'' என்றார். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெங்கடாசலம், ``முதல்வர் கொங்குநாட்டு சிங்கம், மக்கள் தலைவர், விவசாயிகளின் விடிவெள்ளி, அம்மாவின் போர் தளபதி தொடர்ந்து மக்கள் முதல்வருக்கு ஆதரவு தர வேண்டும்'' என்றார். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ``முதல்வர் சேலத்தை அற்புத நகரமாக உருவாக்கி வருகிறார். முதல்வரை மனசாட்சி இல்லாதவர்கள் மட்டுமே குறைசொல்லுவார்கள். இவரைப் போல சிறந்த முதல்வரை இதுவரை பார்த்ததில்லை'' என்றார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``அம்மாவிற்கு ராசியான இடம் சேலம். அம்மாவால் சேலத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 8 வழிச் சாலை எந்த நேரத்தில் ஆரம்பித்தோமோ தெரியவில்லை. ஜவ்வு மாதிரி இழுத்துட்டு இருக்கு. போக்குவரத்தால் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. மனித உயர் விலை மதிப்பற்றது. அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும். 8 வழிச் சாலையால் சேலத்துக்கு மட்டுமல்ல பல மாவட்டங்களுக்குப் பயன்படக்கூடியது. 70 கி.மீட்டர் பயண தூரம் குறைகிறது. நிறைய இழப்பீடு தருகிறோம். அதனால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். உள்ளாட்சி துறை என்பது ஹாட் மாதிரி. அந்த துறையின் அமைச்சர் வேலுமணி இரவு, பகல் பார்க்காமல் உழைக்கக்கூடியவர். எனக்கு ஆதரவாகவும் இருக்கிறார்.

நான் எந்த துறையிலும் தலையிடுவது இல்லை. அனைத்து துறையும் சுதந்திரமாகச் சிறப்பாக செயல்படுகிறது. கஜா புயலுக்கு அரசு ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்திருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். சேலம் மாவட்டம் இந்தியாவுக்கே ரோல் மாடலாகத் திகழும்'' என்றார். அதையடுத்து மாநகராட்சி சார்பாக சேலம் எதிர்காலத்தில் எப்படி மாறப் போகிறது என்ற ஆவணப்படம் திரையிட்டார்கள். அதில் சேலம் வெளிநாடு ரேஞ்சுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.