Published:Updated:

கட்சி மாறிய செந்தில்பாலாஜி... குக்கரை உடைத்து வழியனுப்பு விழா நடத்திய கரூர் அ.தி.மு.க-வினர்!

கட்சி மாறிய செந்தில்பாலாஜி... குக்கரை உடைத்து வழியனுப்பு விழா நடத்திய கரூர் அ.தி.மு.க-வினர்!
கட்சி மாறிய செந்தில்பாலாஜி... குக்கரை உடைத்து வழியனுப்பு விழா நடத்திய கரூர் அ.தி.மு.க-வினர்!

அ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூர் அ.தி.மு.க-வினர் குக்கரை நடுரோட்டில் போட்டு உடைத்ததோடு, வழியனுப்பு விழா நடத்தி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

அ.ம.மு.க கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி எம்.எல்.ஏ பதவியை இழந்தார். மறுபடியும் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ ஆகியே தீருவது என்ற முயற்சியில் தொகுதியை பம்பரம் போல சுற்றி வந்தார். ஆனால், 'அ.தி.மு.கவும், அ.ம.மு.கவும் இணைய பேச்சு வார்த்தை நடக்கிறது' என்று சொல்லப்பட்ட தகவலால் அப்செட் ஆனார். 

இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு,'செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு போகப் போகிறார். முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமி மூலமாக தி.மு.க-வுக்குப் போகப் போகிறார்' என்று பரபரப்பு கிளம்பியது. ஆரம்பத்தில், `வெறும் வதந்திதான்' என்று பார்க்கப்பட்ட இந்த விவகாரம், பின்பு 'உண்மைதான்' என்ற நிலைக்கு மாறியது. செந்தில் பாலாஜியை கட்சி மாறவிடாமல் தினகரன் செய்த அத்தனை முயற்சிகளும் பலிக்கவில்லை. எல்லாத் தடைகளையும் மீறித்தான் நினைத்ததுபோலவே இரண்டாயிரம் ஆதரவாளர்களோடு இன்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துவிட்டார் செந்தில் பாலாஜி.  

இந்த நிலையில், கரூர் நகர அ.தி.மு.க செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க-வினர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் திரண்டனர். '5 வது முறையாகக் கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி, செந்தில் பாலாஜிக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, தொண்டர்களின் கைகளில் இருந்த பதாகைகளில், 'தொடரட்டும் உங்கள் கட்சி தாவல்! எட்டட்டும் கின்னஸ் சாதனை' என்ற நக்கல் செய்யும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அப்படியே பேரணியாக சென்றதோடு, செந்தில் பாலாஜிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். 


 

அதோடு, `செந்தில்பாலாஜிக்கு வழியனுப்பு விழா நடத்துவதாகச் சொல்லி, அனைவரும் இனிப்புக் கொடுத்தனர். பட்டாசுகளையும் வெடித்து, கரூரை அல்லோலப்படுத்தினர். செந்தில் பாலாஜி கட்சி மாறிய விவகாரத்தை இப்படி நூதன முறையில் எதிர்க்க 'வழியனுப்பு விழா' நடந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ``இப்போது என்ன வேண்டுமானாலும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு அண்ணனுக்கு எதிராகப் பண்ணட்டும். ஆனால், தி.மு.க-வில் அண்ணன் பவருக்கு வரட்டும். அப்புறம் இருக்கு அமைச்சர் தரப்புக்கு கச்சேரி!" என்று பொங்குகிறார்கள் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.