புதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..?! | What did Stalin speak with the new party members?

வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (15/12/2018)

கடைசி தொடர்பு:10:54 (15/12/2018)

புதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..?!

இதுவரை, அ.தி.மு.க-வின் கொடியுடனும், சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் வலம் வந்தவர்கள் எல்லாம், இனிக் கறுப்பு சிவப்புக் கொடியோடும், ஸ்டாலின் புகைப்படத்தோடும் வலம் வருவார்கள். அறிவாலயத்தைச் சுற்றிலும் கூடியவர்கள் புதிதாக இணைந்தவர்கள் பலரும் ஸ்டாலின் புகைப்படத்தை இன்றே வெளியே தெரியும்படி சட்டைப் பையில் வைத்திருந்தனர்.

புதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..?!

``நாங்கள் எல்லாம் புதிய தி.மு.க-காரர்கள் இல்லை, அண்ணா காலத்து தி.மு.க-காரர்கள்தாம். இப்போது தளபதி தலைமையில் மீண்டும் இணைந்து இருக்கிறோம்" என்கிறார்கள் சென்னை அறிவாலயத்தில் கூடிய கரூர் மாவட்டத்திலிருந்து வந்து செந்தில் பாலாஜியுடன் தி.மு.க-வில் இணைந்த புதிய உடன்பிறப்புகள். கடந்த ஒரு வாரகாலமாகவே நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்து முற்றுப்புள்ளி வைத்தார் முன்னாள் அமைச்சரும், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வின் நிர்வாகியுமான செந்தில் பாலாஜி. அவருடன் அ.தி.மு.க, அ.ம.மு.க-வைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் தி.மு.க-வில் இணைந்தனர். அண்ணா அறிவாலய வளாகத்தில் வரும் 16-ம் தேதி கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அறிவாலயம்  விழாக்கோலம் பூண்டிருந்தது. செந்தில் பாலாஜி, தி.மு.க-வில் இணைந்தது அந்தக் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

ஸ்டாலின்

செந்தில் பாலஜியின் ஆதரவாளர்கள் சிலர், அறிவாலயம் முன்பு உள்ள சாலையில் பட்டாசு வெடிக்க முயன்றபோது, அங்குப் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தனர். அதுபற்றி கட்சியில் இணைந்தவர்கள்,  ஸ்டாலினிடம் புகார் தெரிவிக்க, ``நீங்க ஏன் ரோட்டுல போய் வெடி வெடிக்கிறீர்கள். நம்ப அறிவாலயத்துக்குள்ளேயே வெடிக்க வேண்டியது தானே" எனப் பாசமழை பொழிந்தாராம் ஸ்டாலின்.

அனைவருக்கும் கைகொடுத்து தன் அரசியல் காய்களை நகர்த்தி உள்ளார் ஸ்டாலின். புதிதாகக் கட்சியில் சேரவந்த அனைவருக்கும் பல மணி நேரம் நின்று கைகொடுத்ததுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டார். `நான் தளபதியைத் தொட்டுப் பார்த்துட்டேன்' எனச் சத்தமாகச் சொல்லிக்கொண்டு வெளியேவந்த, கரூரைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் பேசியபோது, ``நான் முன்னாள் அ.தி.மு.க-காரன்" எனப் பேச ஆரம்பித்தவர். ``ஆனாலும் எனக்குக் கலைஞரைப் பிடிக்கும். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த அம்மாவின் இறப்புக்குப் பிறகு சரியான தலைமையில்லாமல் தவித்த எங்களுக்குத் தளபதியைத் தவிர வேற வழி தெரியவில்லை, நான் வந்த உடனே கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் கைகொடுத்து விட்டு, அங்கிருந்து விலக, என்னை நிற்கச் சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். கலைஞரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் தளபதியைத் தொட்டுப் பார்த்துட்டேன்” என்றார் குதூகலத்துடன்.

தி.மு.க-வில் செந்தில் பாலாஜி இணைந்தார்

இதுவரை, அ.தி.மு.க-வின் கொடியுடனும், சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் வலம் வந்தவர்கள் எல்லாம், இனிக் கறுப்பு சிவப்புக் கொடியோடும், ஸ்டாலின் புகைப்படத்தோடும் வலம் வருவார்கள். அறிவாலயத்தைச் சுற்றிலும் கூடியவர்கள் புதிதாக இணைந்தவர்கள் பலரும் ஸ்டாலின் புகைப்படத்தை இன்றே வெளியே தெரியும்படி சட்டைப் பையில் வைத்திருந்தனர். அறிவாலயத்தினுள் தி.மு.க கொடி, கலைஞர், ஸ்டாலின் புகைப்படங்களை விற்று வருபவர்களோடு பேசுகையில், ``சந்தோஷம்தான். எப்போதும் தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடக்கும் போதுதான் அதிகமா, தளபதி, கலைஞர் புகைப்படங்கள் வியாபாரம் ஆகும். ஆனா, இன்றைக்குப் புதுசா கட்சியில்  நிறைய பேர் இணைந்ததால் நல்ல வியாபாரம்” என்றார்கள் மகிழ்ச்சியுடன்.

``அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள், இந்த ஆட்சி உடனே கலைக்கப்படும்" என டி.டி.வி. தினகரன் சொல்லி வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த அதிரடியான கட்சித்தாவல் அவருக்குச் சவாலாகத்தான் அமையும். ஏற்கெனவே அவரின் குடும்பத்திலிருந்தே நிறைய கிளைக் கட்சிகள் முளைத்துவிட்ட நிலையில், தினகரனுக்கு மிகவும் நெருக்கமாகவும், தீவிர ஆதரவாளராகவும் இருந்த செந்தில் பாலாஜி விலகி தி.மு.க-வில் இணைந்திருப்பது தினகரனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.

மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. உறுப்பினர் படிவம் அளிக்கிறார்

அதே வேளையில்,  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் முக்கியப் பொறுப்புகளில்  இருந்தவர் செந்தில் பாலாஜி. அதிகம் பேருடன் தி.மு.க-வில் புதிதாக இணைந்துள்ள நிலையில் அவருக்குக் கட்சியிலும், வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஆட்சியிலும்  தகுந்த பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே செந்தில் பாலாஜி மற்றும் அவரின் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலையில் உள்ள தி.மு.க., செந்தில் பாலாஜிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போகிறது என்பது கடினமான ஒன்றாகத்தான்  அமையும்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

செந்தில் பாலாஜியின் இணைப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்த மு.க. ஸ்டாலின், அறிவாலயத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய போது,  கார் மீது ஏறி நின்று தொண்டர்களை நோக்கிக் கையசைக்க, `பாசத் தளபதி வாழ்க' என முழக்கம் எழுப்பினர் தி.மு.க-வில் புதிதாகச் சேர்ந்த உடன்பிறப்புகள்.


டிரெண்டிங் @ விகடன்