Published:Updated:

`மக்களுக்கான அரசு என்றால் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு

இ.கார்த்திகேயன்
`மக்களுக்கான அரசு என்றால் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு
`மக்களுக்கான அரசு என்றால் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு

``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து, அறவழியில் எங்களது போராட்டம் தொடரும். நடப்பது மக்களுக்கான அரசுதான் எனக் கூறி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்திட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை நியமித்தது. இக்குழு ஆலையை ஆய்வு செய்ததுடன் மக்களிடம் மனுக்களையும் பெற்றது. இதில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு, எதிர்ப்புக் குழுவினர் மனு அளித்தனர். தருண் அகர்வால் தலைமையிலான கூழு 48 சீலிடப்பட்ட உறைகளில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

``ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு” என இக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொது மக்கள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவினர், பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எனப் பல தரப்பினரும் ஆய்வறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பு அடுத்த ஒருவாரத்துக்குள் வெளியிடப்படும் எனக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தது தீர்ப்பாயம். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்து இன்று தீர்ப்பளித்தது பசுமைத் தீர்ப்பாயம்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தனித்தனியாக மீடியாக்களில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்திட மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடிட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன்  மீண்டும் ஆலையைத் திறக்கலாம் என வேதாந்தா குழுமத்துக்கு தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுமைத் தீர்ப்பாயத்துக்கு இப்படி ஒரு தீர்ப்பளிக்க அதிகாரம் இல்லை எனச் சட்ட வல்லுநர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். எனவே, சட்டவலிமையே இல்லாத தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என்ற முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்து மேல்முறையீடு செய்ய வேண்டும். நடப்பது மக்களுக்கான அரசுதான் செயல்பட்டு வருகிறது என வார்த்தைக்கு வார்த்தை கூறிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி சட்ட மன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். ஆலையை ஒருபோதும் திறக்க அனுமதிக்க மாட்டோம். எங்களது அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஆலோசனை செய்து அறிவிப்போம். ஆலைக்கு எதிராக எங்களது  போராட்டம் தொடரும்” என்றார்.