Published:Updated:

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது! - சி.பி.எம்., கண்டனம்

இ.கார்த்திகேயன்
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது! - சி.பி.எம்., கண்டனம்
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது! - சி.பி.எம்., கண்டனம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது எனவும், தூத்துக்குடி மக்கள் நலனுக்காக அரசியல் வித்தியாசமில்லாமல் அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை  விடுத்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தனது சுற்றுப்புறம் அனைத்தையும் நீர், நிலம், காற்று அனைத்தையும் நஞ்சாக்கிய தூத்துக்குடியைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்களும் நடத்திய போராட்டத்தின் விளைவாகவும், போராட்டத்தை ஒடுக்க வேண்டுமென்பதற்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது கொடுரமான முறையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியின் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டதையொட்டியும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்த பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் அதன் அமைப்புக்குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் வேதாந்தா நிறுவனத்திற்குச் சாதகமாக செயல்பட்டது என்ற ஐயமே பல மட்டங்களில் எழுந்தது. பசுமைத் தீர்ப்பாயக்குழுவின் தலைவரை நியமிக்கும்போது தமிழகத்தைச் சார்ந்த நீதிபதிகள் யாரையும் நியமிக்கக்கூடாது என்று வேதாந்தா நிறுவனம் செய்த அடாவடியை பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது சரியல்ல என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டின.

தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தனது அதிகாரவரம்பை மீறி ஆலை மூடல் செல்லாது என்று பரிந்துரை அளித்தது ஏற்கத்தக்கதல்ல என்பதும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்டடது. வரம்பு மீறிச் செயல்பட்ட குழுவின் வரம்பு மீறிய பரிந்துரைகளை பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல. இது தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு வெளிப்படுகிறது. ஆனால், அதையும் மீறி ஆலையைத் திறக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது அப்பட்டமாக வேதாந்தா குழுமத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்ட நிலைப்பாடே. 

இப்பின்னணியில் ஆலை மூடலைத் தொடர்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டுமென்றும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி மக்கள் நலனுக்காக அரசியல் வித்தியாசமில்லாமல் அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு மக்களைத் திரட்டி தொடர்ச்சியான களப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கும் என்றும் உறுதி கூறுகிறோம்" எனக் கூறியுள்ளார்.