வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:07:00 (16/12/2018)

`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி!' - பா.ஜ.கவை கலாய்த்த தேஜஸ்வி யாதவ்

'மோடிக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்று பா.ஜ.கவினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் பதில், மோடிக்கு எதிராக அவரது வாக்குறுதிகள் தான்' என்று பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார். 

தேஜஸ்வி

ஊடங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது... ``தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.கவைப் புறக்கணித்த வாக்காளர்களுக்கும் பொது மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோடி அளித்த வெற்று வாக்குறுதிகளால் மக்கள் விரக்தியடைந்துள்ளதையே ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. மோடியும், அமித் ஷாவும் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்று கூறிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி மற்றும் அமித் ஷாவின் சகாப்தத்தை வீழ்த்திவிட்டு அவர்களை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ள வேண்டும். 

தேஜஸ்வி

மோடிக்கு எதிராக யாரும் இல்லை என்று பா.ஜ.கவின் தலைவர்கள் நம்புகிறார்கள். 60 ஆண்டுகள் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், 60 மாதங்கள் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களிடம் மோடி கேட்டார். மக்களும் ஆதரித்தார்கள். ஆனால், அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை. கறுப்புப் பணத்தை மீட்டு விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் இதுவரை நிறைவேற்றவில்லை. மோடிக்கு எதிராக யார் என்று பா.ஜ.கவினர் கேட்கிறார்கள். அதற்குப் பதில் மோடியின் பொய்யான வாக்குறுதிகள் தான்.

மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலைப்பை மாற்றுவதற்கு முயல்வார். ஏற்கெனவே ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, நீதித்துறை, ஊடகங்கள் என்று அனைத்தையும் தனக்கு ஏற்றார்போன்று மாற்றிவிட்டார். பிராந்தியக் கட்சிகள் வெற்றியின் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும்" என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க