Published:Updated:

‘பசுமைத் தீர்ப்பாயத்தின் மீது சந்தேகம் உள்ளது’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு பகீர் புகார்

‘பசுமைத் தீர்ப்பாயத்தின் மீது சந்தேகம் உள்ளது’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு பகீர் புகார்
‘பசுமைத் தீர்ப்பாயத்தின் மீது சந்தேகம் உள்ளது’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு பகீர் புகார்

 'ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் நேற்று வெளியிட்ட உத்தரவு வெளியாவதற்கு  6 மணி நேரத்திற்கு முன்பே பரிமாரப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பத்திமாபாபு பகீர் குற்றச்சாட்டைக் கூறி  உள்ளார்.

இது குறித்து தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று ஒரு உத்தரவினை வழங்கி உள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக மதியம் 2 மணி அளவில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளதாக மக்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுமார் 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே காலை 7.39 மணிக்கு “என்.ஜி.டி.பி.ஏ” என்ற பயனாளர் கணக்கில் இருந்து “ஆபாஸ் பாண்டியா” என்ற மற்றொரு பயனாளர் கணக்கிற்கு இந்த தீர்ப்பு ”வேர்டு பைலாக” பரிமாறப்பட்டுள்ளது. சற்று நேரத்தில், அதே ”ஆபாஸ் பாண்டியா” என்ற பயனாளர் கணக்கில் இருந்து மீண்டும் “என்.ஜி.டி.பி.ஏ” என்ற பயனாளர் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

வேதாந்தா குழுமத்தின் செய்தி மக்கள் தொடர்பு சம்மந்தமான பணிகளைச் செய்து வரும் தனியார் விளம்பர நிறுவனத்தின் பெரும் “ஆபாஸ் பாண்டியா”தான். எனவே, இந்த பயனாளார் கணக்கு வேதாந்தாவின் விளம்பர நிறுவனத்தின் பயனாளர் கணக்காக இருக்குமோ என சந்தேகிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலைகுறித்து தருண் அகர்வால் குழுவின் ஆய்வறிக்கை நகலையே எதிர்மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என அந்தக் குழு கூறிய நிலையில், மிகவும்  பாதுகாப்பாக வைக்கப்பட்டு  பொது நீதிமன்றத்தில் வெளியிடப்பட வேண்டிய ஒரு வழக்கின் தீர்ப்பு இவ்வாறு தனியார் பயனாளர் கணக்கிற்கு பரிமாறப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொது நீதிமன்றத்தில் வெளியிடப்பட வேண்டிய உத்தரவினை தனது இணையதளத்தில் ஏன் வெளியிட வேண்டும் என்ற கேள்வியும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க உள்ளோம்.” என்றார்.